Subscribe Us

header ads

புதிய அரசுக்கு எதிராக விமர்சனங்கள் மெல்ல எழ ஆரம்பித்துள்ளன!


வெளிநாடுகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இலங்கையின் புதிய அரசு தொடர்ந்தும் இருந்து வருகின்றதா? இந்தச் சந்தேகத்தை சர்வதேச ஊடகங்கள் பல எழுப்பி வருகின்றன.
அண்மையில் இலங்கை வந்திருந்த ஐ.நா.வின் விசேட நிபுணத்துவ அறிக்கையாளர் பப்லோ டீ கிறேப் தெரிவித்த சில கருத்துக்கள் சற்று காட்டமாக அமைந்திருந்தன என இன்னர்சிட்டி பிரஸ் குறிப்பிடுகின்றது.
புதிய அரசு பதவியேற்றதின் பின் மக்கள் சற்று மகிழ்ச்சியாக இருப்பதாகக் குறிப்பிடும் அவர், குற்றங்கள் கண்டு பிடிக்கப்பட்டு தண்டனை வழங்கும் விடயத்தில் இந்த புதிய அரசு இன்னமும் அக்கறை காட்டப்படவில்லையென்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
காணாமல் போனோர் விடயத்தில் மேலும் கூடுதல் விசாரணை அவசியமாகின்றது. குற்றங்களை ஆராயும் பொருட்டு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படுகின்றன.
ஆனால் அந்த ஆணைக்குழு அறிக்கைகள் பல மக்கள் பார்வைக்கு விடப்படுவதில்லை என்றும் கிறேப் குறைபட்டுக்கொண்டார்.
அவர் இலங்கையில் இருந்த போது வடபகுதியில் காணாமல் போனோர் தொடர்பாக பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. அவற்றை கிறேப் நேரில் கண்ணுற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கிறேப் சூசகமாக பல விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார் என இன்னர்சிட்டி பிரஸ் குறிப்பிடுகின்றது. விசேடமாக மக்களின் எதிர்பார்ப்பு மிக மந்தமாக நிறைவேற்றப்படுவதாகக் குறிப்பிடுகிறார்.
தமிழர்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்வதிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்தும் எடுக்கப்படவேண்டும் என்பதனையும் சூசகமாகவே தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொதுச் செயலாளரின் பேச்சாளர் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதும் இந்த அறிக்கை குறித்த விபரங்களை வெளியிட்டார். அங்கு இன்னர்சிட்டி பிரஸ் நிருபர் கேள்வி ஒன்றைத் தொடுத்தார்.
போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக புதிய தகவல்கள் உண்டா? என வினவினார். போரின் போது இடம்பெற்ற இராணுவத்தினருக்கு எதிரான பாலியல் குற்றங்களும் விசாரிக்கப்பட வேண்டும் என ஐ.நா பொதுச் செயலாளர் கேட்டுள்ளார் என்ற பதில் மாத்திரமே வழங்கப்பட்டது.
இலங்கை அரசு ஆரம்பத்தில் குறிப்பிட்ட உள்ளக விசாரணைக்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வந்தது. முக்கியமாக பிரித்தானியா அண்மைய மனித உரிமைப் பேரவை உப மாநாடுகளின் போது அது சிறந்த யோசனை என வரவேற்றிருந்தது.
ஆனால், உள்ளக விசாரணை குறித்து இலங்கை எவ்வித முன்னேற்பாடுகளையும் இதுவரை செய்யவில்லை. ஆனாலும் உள்ளக விசாரணை குறித்து ஜூன் மாதம் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர பெப்ரவரி மாதம் உள்ளக விசாரணை குறித்த விபரம் மார்ச்சில் வெளிவரும் என வெளிநாடுகளில் குறிப்பிட்டிருந்தார்.
அதனை எதிர்பார்த்தே பல நாடுகள் அந்தத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்போது அது குறித்து சந்தேகம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இலங்கையின் உள்ளக விசாரணை குறித்த பொறிமுறை அரசிடம் இதுவரை இல்லையென வெளிநாட்டுப் பிரதியமைச்சர் அஜித் பெரேரா குறிப்பிட்டதை "குளோபல் மெயில்" வெளியிட்டிருந்தது.
எனவே, இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்றும் அது தொடர்ந்தும் குறிப்பிட்டிருந்தது.
இலங்கையில் இன்னமும் நல்லிணக்கம் ஏற்படவில்லையென "நியூயோர்க் இன்டெர்நெஷனல்" குறிப்பிடுகின்றது. அதற்கு மேலும் பல மைல்கல்லைத் தாண்ட வேண்டியிருப்பதையும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐ.நா. விசேட அறிக்கையாளர் கிறேப் இது தொடர்பாக தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார். நல்லிணக்கத்துக்கான சூழல் ஏற்பட்டுள்ள போதே அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்ததை அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது.
சீனா தொடர்பான புதிய அரசின் அணுகுமுறையில் முன்பு திருப்தி தெரிவித்த வெளிநாட்டு ஊடகங்கள், தற்போது அதிகம் சந்தேகம் வெளியிட ஆரம்பித்துள்ளன.
சீனா கொழும்பில் கட்டவுள்ள தாமரைக் கோபுரம் குறித்து ஏற்கனவே இந்திய ஊடகங்கள் சந்தேகம் தெரிவித்துள்ள நிலையில் மேற்கு நாட்டு ஊடகங்களும் தமது கவனத்தை அதில் பதித்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் சீனா செய்து கொண்ட ஒப்பந்தங்கள் எதனையும் புதிய அரசும் நிராகரிக்காது என புதிய ஜனாதிபதி சீனாவில் வைத்து தெரிவித்ததை சில ஊடகங்கள் தொடர்ந்தும் விமர்சனம் செய்து வருகின்றன.
இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற இருப்பதால் புதிய அரசு அவதானமாகவே காய்களை நகர்த்துவதாக "நியூயோர்க் டைம்ஸ்" குறிப்பிடுகின்றது. இப்போதைக்கு சீனாவுடன் பிரச்சினை ஏற்படுவதை அது விரும்பவில்லை.
அதேநேரத்தில், போர்க்குற்ற உள்ளக விசாரணை, நல்லிணக்க நடவடிக்கைகள் என்பனவற்றிலும் அது ஈடுபடவில்லை.
சிங்கள மக்களின் செல்வாக்கை இழக்கும் நடவடிக்கைகளில் அவதானமாகவே செயற்படுகின்றது. இருப்பினும் நாட்டு மக்களுக்கு உண்மை நிலையை எடுத்துக்கூற வேண்டியது ஓர் அரசின் கடமை என்றும் அந்த ஊடகம் குறிப்பிடுகின்றது.
சீனா முன்னைய அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் பல ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே புதிய அரசினால் அதனை இடைநிறுத்தம் செய்ய முடியாது. ஆனால் சில வேளை சீன அரசுடன் இணைந்து மாற்றங்களை மேற்கொள்ளலாம். ஆனால் சீனா அதற்கு சம்மதிக்க வேண்டும்.
ஒப்பந்தத்தில் எவ்வித மாற்றமும் செய்யாமல், அவற்றை அப்படியே புதிய அரசும் கடைப்பிடிக்க வேண்டும் என சீன அரசு கூறியதாக ஒரு சில ஊடகங்களிலும் தகவல்கள் வெளியாகின. "நியூயோர்க் டைம்ஸ்" இதனைக் கண்டித்துள்ளது.
அரசின் கொள்கை மாற்றத்திற்கமைய வெளிநாட்டு ஒப்பந்தங்களில் மாற்றம் கொண்டு வர முடியும் என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச விதிகளுக்கு உட்பட்ட நியதியாகும் என்றும் அது குறிப்பிடுகின்றது.
எது எப்படி இருப்பினும் சர்வதேச ரீதியில் புதிய அரசு தொடர்பாக விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
வீ. ஆர். வரதராஜா (ஊடகவியலாளர் ஜேர்மனி)

Post a Comment

0 Comments