உல்லாசப் பயணம் மேற்கொள்வதற்காக 7 பேர் கொண்ட குழு மக்காவுக்கு சென்றுள்ளதாகவும் ஒரு நபருக்கான செலவு 7 முதல் 8 இலட்சம் ரூபா என மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்தக் குழுவில் அமைச்சர் அப்துல் ஹலீம், அமைச்சின் செயலாளர் அன்சார் அப்துல் மஜீத், பணிப்பாளர் மொஹமட் சமீல், அமைச்சரின் சகோதரர் மொஹமட் பாஹிம், பயண முகவர் எம்.ஆர்.எம். பாரூக் ஹாஜி. ஜமியத்துல் உலமா சபைத் தலைவர் மொஹமட் ரிஸ்வி முப்தி, பயண முகவர் மொஹமட் பவாஸ் ஆகியோர் அடங்குகின்றனர்.
ஏன் இவ்விதம் பொதுமக்களின் பணத்தை விரயம் செய்கிறார்கள் என்பது எமக்கு தெரியவில்லை. இந்தப் பயணத்துக்கு ஒரு நபருக்கு 7 முதல் 8 இலட்சம் ரூபா வரை செலவாகும். இந்தப் பணம் அரசாங்கத்தினால் செலவிடப்படுவதில்லை. ஆனால், கடந்த முறை ஹஜ் பயணிகளிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை சேமித்து வைத்தே இவ்விதம் செலவிடப்பட உள்ளது. ஜனாதிபதிக்கு இது விடயமாக எடுத்துக் கூற உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.


0 Comments