Subscribe Us

header ads

ரவூப் ஹகீம் எனும் தேசிய தலைமையின் 55வது பிறந்த தினம் இன்று...



மனிதன் கூட்டமாக வாழத் தொடங்கிய காலத்திலிருந்து அவன் யாரோ ஒருவரால் அல்லது ஒரு குழுவால் ஏதோ ஒன்றின் பெயரால் ஆளப் பட்டிருக்க வேண்டும்.அவ்வாரின்றேல் மனித சமூகமே இப்பூமியில் நிலை கொண்டிருக்க முடியாது.
இந்த அதிகாரத்தை பதினெட்டாம் நூற்றாண்டுகளின் பிற்பகுதியில் இருந்து கைப்பற்றிய ஜனநாயகம் எனும் கருத்தியல் மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் அரசியல் தலைமைகளுக்கு வழங்கியது.
இன்று அரசியலே நமது வாழ்க்கை முறையாகிவிட்டது.அரசியல் அதிகாரத்தினத் தக்க வைப்பதிலே தான் அதனைக் கைப்பற்றுவதில்தான் தங்களது இருப்பு தங்கி இருக்கின்றது என்பதனை சரியாக உணர்ந்து கொண்ட சமூகங்கள்தான் புத்திசாலி சமூகங்கள் என்ற சொல்வேன்.
இந்நிலையில் இலங்கை முஸ்லிம்கள் எனும் தேசிய சமூகம் ஒன்றின் அரசியலில் ஸ்ரீ முஸ்லிம் காம்கிரசும் அதன் இரு தலைமைகளும் பற்றிய எனது குறிப்பாக இதை எழுதுகின்றேன்….அதிலும் குறிப்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் இஸ்தாபகத் தலைவரின் மரணத்தின் பின்னர் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட தலைவர் ரவூப் ஹகீம் அவர்களின் மீதானஒரு பார்வையாகவே இக்குறிப்புக்கள் அமைந்து நிற்பது குறிப்பிடத்ததக்கது…..
இலங்கை முஸ்லிம்களும் ஒரு தனித்துவ அடையாளங்களுடன் கூடிய ஒரு தேசிய சமூகம் என்பதனை செயன்முறையில் காட்டிய ஒரு தலைவராக எம் எச் எம் அஷ்ரபையும் இயக்கமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசையும் சுட்டிக் காட்டலாம்.
முஸ்லிம்களின் அடையாள அரசியலை வடிவமைப்பதிலும் முஸ்லிம் சமூகத்தின் தேசியக் கட்டுமானத்திலும் எம் எச் எம் அஷ்ரப் அவர்களின் பங்களிப்பு என்பது இமயமலை அளவு உயரமானது.
அவரின் மறைவின் பின்னர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் தேசிய இயக்கத்தின் தலைமையும் இவ்வியக்கமும் ஆற்றிக் கொண்டிருக்கும் பங்களிப்பும் வளர்ச்சியும் முஸ்லிம் தேசிய அடையாளத்திலும் அதனை முன் கொண்டு செல்லும் அரசியலிலும் ஈடிணையற்ற தாக்க்கத்தினை செலுத்தி வருகின்றது என்பது நாம் சந்தோஷப் படக் கூடிய விடயமாகும்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தின் தலைமையாக திகழும் ரவூப் ஹகீம் எனும் தலைமைத்துவத்தையும் அவரின் அரசியலையும் நான் மிகப் பெரும் ஆச்சரியமாக பார்க்கின்றேன்.
1960 ம் ஆண்டு சித்திரை மாதம் 13 ம் திகதி நாவலப்பிட்டியவில் பிறந்த ரவூப் ஹகீம் அவர்கள் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்று ஒரு சட்டத்தரணியாக வெளியேறி இன்று சட்ட முதுமாணியாக பயின்று தனது கல்விப் புலமையை இயம்பியுள்ளார்.
இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக நுழைந்த இவர் இன்றய பதினாலாவது பாராளுமன்றத்திலும் ஒரு உறுபினராக உள்ளார் என்பது இவரது பழுத்த அரசியலைக் காட்டுகிறது எனினும் இதன் பின்னால் அவரின் முழுச் சாணக்கியமும் நிறைந்துள்ளது என்பது இவரைப் பற்றிப் படித்தால் புரிந்து கொள்ளலாம்.
குழுக்களின் பிரதித்தலைவராக,அமைச்சராக,பல்வேறு பாராளுமன்றக் குழுக்களின் தலைவராக,உறுப்பினராக கட்சியின் செயலாளராக,உதவிச் செயலாளராக,கட்சியின் தலைவராக,சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளராக,பேச்சாளராக,சமூகவாதியாக,கவி பாடும் புலவராக,சட்டத்தரணியாக,மொழி வாண்மையாளனாக,அரசியல் சாணக்கியனாக……இப்படி நீள்கின்றது இவரின் வடிவங்கள்
ஆனால் முஸ்லிம் சமூகத்தின் தலைவனாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவராக கடந்த பதினைந்து வருட கால அவரது தலைமைத்துவ வரலாறு என்பதுதான் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படும் என்பதில் ஐயமில்லை.
அவருடைய அரசியல் குறித்து நம்மில் சிலரிடையே அதிருப்திகள் இருக்கலாம்,புரிதளின்மைகளின் வெளிப்பாடாகவு அவைகள் இருக்கலாம்.ஆனால் முஸ்லிம் தேசிய அரசியலின் அடையாளக் கட்டுமானத்தில் தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணத்தின் பின்னர் ரவூப் ஹகீம் எனும் ஒரு தலைவனின் வகிபாகம் குறித்து அவர் வகுத்த அரசியல் வியூகங்களின் விவேகத் தன்மை குறித்து கட்டாயம் வர வரலாறு சிலாகித்துப் பேசித்தான் ஆகும்.
மாபெரும் தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணத்தின் பின்னர் இந்தக் கட்சியை உடைக்கும் அளிக்கும் சிந்தனைகளுக்கு அரசால் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.தலைவரின் மரணத்தினைப் பயன்படுத்தி அதனால் விளைந்த குழப்பங்களைப் பயன்படுத்திப் பலர் அமைச்சர்கள் ஆனார்கள்,பிரதி அமைச்சர்கள் ஆனார்கள்,திணைக்களத் தலைவர்கள் ஆனார்கள்,சபைகளுக்கு தவிசாளர்களானார்கள்.
கட்சியைத் துண்டாடி சின்னாபின்னப் படுத்தி குறு நில மன்னர்களாக சிலர் யோசித்தார்கள்.முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்து ஆளும் கட்சிக்கு ஆதரவளித்தால் நாளை அவர் அமைச்சர் அல்லது அரை அமைச்சர்.இப்படி ஒரு நிலை காணப்பட்ட காலத்தில் இக்கட்சியை பாரமெடுத்த தலைவர் ரவூப் ஹகீம் அவர்கள் சுமார் ஒரு தசாப்த காலம் எதிர்க் கட்சி அரசியலில் இருந்தார் என்பது மிகப் பெரும் சாதனை எனலாம்.
அவருடைய இந்த எதிர்க் கட்சி அரசியல் வாசம்தான் இன்று அவரைப் புடம் போடப்பட்ட தலைவராக மாற்றியிருக்கின்றது எனது அபிப்பிராயம்.
தலிவர் அஷ்ரப் அவர்களின் பெயரைக் கூறி அரசியலுக்கு வந்து கட்சிகளை உருவாக்கி அவரின் புகைப்படங்களை வைத்து நீலிக்கண்ணீர் விட்ட கட்சிகள் இன்று அரசுக்குத் துதி பாடி அழிந்தே பொய் விட்டன.இன்று அவர்களிடம் அஷ்ரபும் இல்லை கட்சியும் இல்லை.அரசியல் தொடர்ச்சியற்று அவ்வப்போது வரும் தேர்தலுக்கு பெரும் கட்சிகளுடன் சேர்ந்து வாக்குகளைச் சிதறடிக்கும் கட்சிகளாக, தேர்தல் வந்தால் மட்டும் மக்களிடம் வரும் கட்சிகளாக இன்று வலம் வருகின்றன.
முஸ்லிம் காங்கிரசின் அரசியல் என்பது இப்படி பருவகாலப் பறவைகளின் அரசியலாக எப்போதும் இருந்தது கிடையாது.
இச் சூழ்நிலையில் ரவூப் ஹகீம் அவர்களது தலைமைத்துவம் இன்றுவரை இந்தக் கட்சியைக் காப்பாற்றிக் கொண்டும் முஸ்லிம்களின் அடையாள அரசியலின் தனிப் பெரும் சின்னமாக இக்கட்சியைக் காப்பாற்றி வருவது அவரின் தலைமைத்துவத்தின் மிகப் பெரும் வெற்றியாகவும் சாதனையாகவும் நான் இவ்விடயத்தைப் பார்க்கின்றேன்.
மறைந்த தலைவர் அவர்களின் பிறேமதாசவுடனான அரசியல் வெகுவாகப் பலராலும் பேசப்பட்ட ஒரு வியப்பரசியல்.அதே போன்று மகிந்த ராஜபக்ஷ அவர்களுடனான அரசியலை ஒப்பிட்டு நோக்கலாம்.
மகிந்த ராஜபக்ஸ அவர்களை மிகச் சரியாக எதிர்வு கூறிய ஒரு அரசியல் தலைமை தலைவர் ரவூப் ஹகீம் அவர்களே.அவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யும் இரண்டு தேர்தல்களிலும் ஆதரிக்காது மிகத் தைரியமாக எதிர்த்த ஒரே ஒரு அரசியல் தலைமைத்துவம் இவர் மட்டும்தான் என்றால் மிகையாகாது.ஆனால் அவரின் இரும்புக்கரங்கள் கட்சியைப் பலவீனப்படுத்த எடுத்த சகல அரசியல் நகர்வுகளையும் மிக லாவகமாக எதிர் கொண்டதை மக்களாகிய நாம் மறந்தாலும் நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் உயர்பீட உறுப்பினர்கள் மறக்கமாட்டார்கள் என நம்புகின்றேன்.
கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் இடம் பெற்ற பல்வேறு சதித்திட்டங்களை லாவகமாகக் கையாண்டு வ்ற்றிகொண்ட சாணக்கியன் ரவூப் ஹகீம் எனும் ஆளுமை என்றால் அது மிகை அல்ல.
உடன்பாட்டு அரசியலையும்,எதிர்மறை அரசியலையும் அவசியத்துக்கும் அவசரத்துக்கும் ஏற்றாற்போல் செய்து முடிக்கும் அவரது அபார ஆற்றல் குறித்து நமது அரசியல் தலைமைகள் அவர் வாழும்போதே கற்றுக்கொள்ள சிபார்சு செய்கின்றேன்.
மகிந்த ராஜபக்ஸ எனும் மிகப் பெரும் மக்கள் பலம் பெற்ற ஆளுமயுடனான ஒரு மூன்றாம் சிறுபான்மை இனத் தலைவனின் அரசியல் முரண்பாடுகள் எவ்வாறு கையாளப் பட்டது என்பதற்கு தலைவர் ரவூப் ஹகீம் அவர்களது கடந்த காலப் பத்தாண்டு கால அரசியல் ஆய்வு செய்யப் படுவது வராலாற்று முக்கியம் பெறுகிறது.
அவருடைய அரசியல் வாழ்கையில் தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணத்தின் பின்னர் அவர் கட்சியைக் காப்பாற்ற எடுத்த பல்முனைப் போராட்டங்களும் அதனோடு எதிர்க் கட்சி அரசியலும் அதன் பிற்பாடு உருவாகிய ராஜபக்ஸ யுகமும் அந்த மிகப் பெரும் பெரும்பான்மை இன நடவடிக்கைகளின் உச்சம் மிகுந்த அரசியல் சூழலில் இந்த நாட்டு முஸ்லிம்கள் மீதான மிகப் பெரும் இன அழிப்பு அட்டூழியங்களுக்கு மத்தியில் இந்த சமூகத்தின் அரசியலை முன்னெடுத்த பக்குவமும் அவரது அரசியலில் அழியாப் புகழை தேடி வைத்திருக்கின்றது.
தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணத்தின் பின்னர் இந்தக் கட்சியின் தலைமையாக தலைவர் ரவூப் ஹகீம் அவர்கள் தவிர யார் தலைவராக இக்கட்சிக்கு வந்திருந்திருந்தாலும் இந்தக் கட்சியின் அழிவு என்பது அடுத்த ஐந்து வருடத்தில் நிகழ்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
அவருடையகல்விப்புலம்,மொழியறிவு,சமூகப்பற்று,இறையச்சம்,பரந்த அரசியல் அனுபவம் ,பக்குவம்,பொறுமை போன்ற சிறப்புக் குணங்கள்தான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் நமது தேசிய அடையாளத்தின் வியாபகத்துக்குக் காரணம் எனலாம்.
தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணத்தின் பின்னர் உருவான பல்வேறு அரசியல் இச்திரமின்மைகளின் விளைவாலும்,யுத்த வெற்றி ஓன்று உருவாக்கிய புதிய சூழ்நிலைகளின் நெருக்கடிகளினாலும்,சர்வதேச ரீதியாக இலங்கையின் உள்நாட்டு அரசியல் நெருக்கடி மிகுந்ததாக நோக்கப்பட்ட சூழ் நிலையிலும் மூச்சுத் திணறித் தவித்த இலங்கையின் அரசியல் களத்தில் ஒரு சிறுபான்மை அரசியல் இயக்கத்தின் தேசிய தலைமை எனும் வகையில் தலைவர் ரவூப் ஹகீம் அவர்களும் பலவு சிக்கல்களை எதிர்கொண்டார் என்பது மனம் கொள்ளப் பட வேண்டும்.
சுமார் பதினைந்து வருடங்களின் பின்னர் மீண்டும் பல்வேறு சோதனைகளுக்கு மத்தியில் மீண்டும் சக்தி வாய்ந்த அமைச்சராக அதிகாரத்தினைக் கைப்பற்றியுள்ளநமது கட்சிக்கு புதிய அரசாங்கம் எதிர் கொள்ளப் போகும் அடுத்த தேர்தலில் இருந்து வசந்தம் ஆரம்பிக்க வேண்டும் என அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றேன்.
55 வருடங்களைக் கடந்துள்ள தலைவர் ரவூப் ஹகீம் அவர்கள் நமது தேசியத்தின் மிகப் பெரும் அடையாளம்.நமது அரசியலின் பிரிக்க முடியாத மிகப் பெரும் ஆளும.
அன்னாரின் நலவுகளை அல்லாஹ் பொருந்திப் பாவங்களை மன்னித்து அவருக்கு நீண்ட ஆயுளையும் தேகாரோக்கியத்தையும் …இந்த சதிகார அரசியலிலிருந்து பாதுகாப்பினையும்,பொறாமைப் படுபவனின் பொறாமையிலிருந்து பாதுகாப்பினையும் கொடுப்பானாக…!ஆமீன்.
மொஹமட் றனுாஸ் – சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்.

Post a Comment

0 Comments