நேபாளத்தில் கடந்த சனிக்கிழமையன்று நிகழ்ந்த நிலநடுக்கத்தில் அந்நாட்டின்
தலைநகர் காத்மாண்டு முற்றிலும் உருக்குலைந்தது. பல அடுக்கமாடி கட்டிடங்கள்
தரைமட்டமான நிலையில், அங்கு இடிந்து தரைமட்டான ஏழு மாடி கட்டிடத்தின்
இடிபாடுகளில் இருந்து 15 வயது சிறுவன் ஒருவன் இன்று உயிருடன்
மீட்கப்பட்டான்.
நிலநடுக்கம் ஏற்பட்டு ஐந்து நாட்கள் ஆன நிலையில், பேம்பா லாமா என்ற அந்த
சிறுவன் அமெரிக்க மீட்பு படையினரால் இன்று காலை மீட்கப்பட்டான்.
இடிபாடுகளில் இருந்து பேம்பாவை மீட்டபோது அவன் உயிருடன் இருப்பதை கண்ட
மக்கள் கூட்டம் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆர்ப்பரித்தது. உடனடியாக
ஸ்ட்ரெச்சரில் அவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அப்போது அவன்
மீது சூரிய ஒளி பட்டவுடன் பேம்பா தனது கண்களை சிமிட்டினான்.
இதை கண்ட மீட்பு படையினர் உள்பட பலரும் மகிழ்ச்சியடைந்தனர். பேம்பா
மீட்கப்பட்டது குறித்து அமெரிக்க மீட்பு குழு தலைவரான அண்ட்ரூ ஒல்வெரா
கூறியதாவது;
எங்களிடம் மின் விளக்கு மற்றும் ஜெனரேட்டர் உள்ளதுடன், துளை போடுவதற்கான
வலுவான இயந்திரம் மற்றும் மிகப்பெரிய சுத்திகளும் இருக்கின்றன. இதை கொண்டு
இந்த ஏழு மாடி கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றி வந்தோம். அப்போது அதில்
சிக்கியவர்களின் சடலங்களை அகற்றினோம். இந்த நிலையில் கட்டிடத்தின்
இடிபாடுகளுக்குள் இருந்து முனகல் சத்தம் கேட்டது. விரைந்து செயல்பட்ட
எங்கள் வீரர்கள் இடிபாடுகளை அகற்றி பேம்பாவை மீட்டனர். அப்போது அவன்
சுவாசிப்பதை அறிந்த வீரர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
உடனடியாக எங்கள் குழுவை சேர்ந்த முதலுதவி குழுவினர் பேம்பாவுக்கு சிகிச்சை
அளித்தனர். அதன் பின் அவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான் என்று
ஒல்வெரா கூறினார்.


0 Comments