Subscribe Us

header ads

நீரிழிவு நோய் பற்றி நீங்கள் அறிய வேண்டியவை!


நீரிழிவு நோய் என்பது, உடலால் உணவிலிருந்து தேவையான சக்தியை எடுக்கவேண்டிய முறையில் எடுக்கமுடியாமலிருப்பதாகும். இது ஏனென்றால், உடல் போதியளவு இன்சுலினை சுரக்காமலிருப்பதனால் அல்லது சுரக்கப்படும் இன்சுலின் தகுந்த முறையில் வேலை செய்யாமலிருப்பதனால் ஆகும். இன்சுலின் ஒரு முக்கியமான ஹோர்மோன். உணவிலிருந்து எமது உயிரணுக்கள் சக்கரைச் சத்தை உறிஞ்ச உதவி செய்வதற்கு எமக்கு இன்சுலின் தேவைப்படுகிறது. பின்பு உயிரணுக்கள் சர்க்கரைச் சத்திலிருந்து சக்தியை உண்டாக்குகின்றன. சில சமயங்களில் உயிரணுக்கள் இன்சுலினுக்குப் பிரதிபலிப்பைக் காண்பிக்காது. இதுவும் நீரிழிவு நோயை ஏற்படுத்தலாம்.

இருபது லட்சத்திற்கும் மேலான கனேடிய மக்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும், 60,000 க்கும் மேலானவர்களுக்கு நீரிழிவு நோய் கண்டுபிடிக்கப்படுகிறது.

ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்படும்போது அவரது உடலில் என்ன சம்பவிக்கிறது?

நீரிழிவு நோயுள்ள ஒருவர், அத்தியாவசியமான இன்சுலின் ஹோர்மோன் சுரப்பதை நிறுத்திவிடுகிறார் அல்லது அந்த நபரில் இன்சுலின் தகுந்த முறையில் வேலை செய்வதில்லை. ஹோர்மோன் என்பது, உடலின் பாகங்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்வதற்காக உடலின் ஒரு பாகத்திலிருந்து மற்றொரு பாகத்துக்குப் பிரயாணம் செய்யும் ஒரு இரசாயனத் “தூதுவர்” ஆகும்.
நாம் உண்ணும் உணவிலுள்ள சக்கரையை, சக்தியாக மாற்றுவதற்கு நமது உடல் இன்சுலினை மாத்திரமே உபயோகிக்கமுடியும். அங்கு இன்சுலின் இல்லாவிட்டால், உயிரணுக்களால் சக்கரையைச் சக்தியாக மாற்றமுடியாது. “உபயோகிக்கப்படாத” சக்கரை இரத்தத்தில் ஒன்று சேர்க்கப்பட்டு சிறுநீர் மூலமாக உடலிலிருந்து வெளியேற்றப்படும்.
பின்வருவனவற்றிற்கு எமக்குச் சக்தி தேவை:
  • எமது உடல் வெப்பத்தை உற்பத்திசெய்வதற்கு
  • எமது தசைகள் வேலை செய்வதற்கு, எமது இதயங்கள் துடிப்பதற்கு, எமது நுரையீரல்கள் சுவாசிப்பதற்கு, எமது மூளை சிந்திப்பதற்கு
  • எமது உடலிலிருக்கும் கோடிக்கணக்கான உயிரணுக்களை வளர அனுமதிப்பதற்கு, புதிப்பிப்பதற்கு, மற்றும் சீர் செய்வதற்கு

இன்சுலின் இல்லாமல் நம்மால் தொடர்ந்து வாழ முடியாது

இன்சுலின் கணையத்தில் உற்பத்தியாகிறது. வயிற்றுக்கு சற்றுப் பின்னால் இந்த உறுப்பு அமைந்திருக்கிறது. கணையத்திலுள்ள பீட்டா உயிரணுக்கள் என்றழைக்கப்படும் விசேஷ உயிரணுக்கள் இன்சுலினைச் சுரக்கின்றன. பீட்டா உயிரணுக்கள் இலங்கர்கான் சிறு தீவுகள் என்று பெயரிடப்பட்ட திசுக்களின் கூட்டத்தில் காணப்படுகின்றன.
பல்வேறுவகைப்பட்ட நீரிழிவு நோய்கள் இருக்கின்றன. ஆனால் பிள்ளைகளும் பதின்ம வயதினரும் டைப் 1 நீரிழிவு நோயை பெறுகிறார்கள். டைப் 1 நீரிழிவு நோயில், பீட்டா உயிரணுக்கள் அழிக்கப்பட்டுவிடும். அதனால் உடலினால் எந்த இன்சுலினையும் சுரக்க முடியாது.
அதிகமதிகமான பதின்ம வயதினர் டைப் 2 நீரிழிவு நோயை பெறுகிறார்கள். இந்த வகையான நீரிழிவு நோயுடன், பெரும்பாலும் உடலால் கொஞ்சம் இன்சுலினைச் சுரக்கமுடியும். ஆயினும், இரத்தத்தில் சக்கரையின் அளவை இயல்பு நிலையில் வைத்துக்கொள்ள அல்லது போதுமானளவு நன்கு வேலை செய்வதில்லை அல்லது அதன் அளவு போதுமானதாக இருப்பதில்லை.

நீரிழிவு நோய்க்குச் சிகிச்சை

நீரிழிவு நோய்க்கான சிகிச்சைக்கு இரண்டு இலக்குகள் இருக்கின்றன. ஒன்று, உங்கள் பிள்ளை ஆரோக்கியமாக இருப்பதற்காகவும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவும், முடிந்தளவு இயல்பு நிலைக்கு அருகாமையில் இரத்தத்தில் சக்கரையின் அளவை நிலைநாட்டி அதைத் தக்கவைத்துக்கொள்வதாகும். இரண்டாவது, நீண்ட கால, ஆரோக்கியமான மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ்வதற்காக, உங்கள் பிள்ளை நீரிழிவு நோயுடன் வாழப்பழகிக்கொள்வதாகும்.

டைப் 1 நீரிழிவு நோய்க்கான சிகிச்சை

டைப் 1 நீரிழிவு நோய்க்கான அடிப்படைச் சிகிச்சை உலகம் முழுவதும் ஒரே மாதிரியானது. அது பின்வருவனவற்றை உள்ளடக்கும்:
  • ஒரு நாளில் பல முறைகள் இன்சுலின் ஊசிமருந்தை எடுத்துக்கொள்வது, அல்லது உணவு நேரங்களில் மேலதிக மருந்தையும் மற்ற நேரங்களில் இன்சுலினை ஒரே சீராக வழங்கும் ஒரு பம்ப்பை உபயோகித்தல்
  • ஒரு நாளில் பல முறைகள் இரத்தத்தில் சக்கரையின் அளவைக் கண்காணித்தல்
  • ஒரு உணவுத் திட்டத்தைப் பின்பற்றுவது
  • மேலதிக நடவடிக்கைகளின்போது அதை மேலதிக உணவுடன் அல்லது சில வேளைகளில் குறைந்தளவு இன்சுலினுடன் ஈடு செய்வது
இந்த அடிப்படை வடிவமைப்புக்குள், வித்தியாசப்பட்ட உடல்நலப் பராமரிப்புக்குழுக்கள், உங்கள் பிள்ளையின் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் வீட்டில் உங்கள் குடும்பத்தின் வழக்கமான வேலைகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு திட்டத்தை உருவாக்குவதற்காக உங்கள் குடும்பத்துடன் பணியாற்றுவார்கள். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, வழக்கமான பரிசோதனைகளுக்காக உங்கள் பிள்ளையை மருத்துவமனைக்குக் கொண்டுவரும்படி கேட்கப்படுவீர்கள். இந்த மருத்துவமனைச் சந்திப்புக்களின்போது, உங்களுக்கு இருக்கும் ஏதாவது கவலைகள் பற்றி நீரிழிவுப் பராமரிப்புக் குழுவுடன் நீங்கள் கலந்து பேசலாம்.

டைப் 2 நீரிழிவு நோய்க்கான சிகிச்சை

ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, எடையைக் குறைத்தல், மற்றும் அநேக இளைஞருக்கு மருந்துகள் என்பனவற்றின் இணைந்த செயற்பாட்டினால் டைப் 2 நீரிழிவு நோய் சமாளிக்கப்படுகிறது. பெரும்பாலாக எல்லாருக்கும் சிகிச்சை, வாழ்க்கைப்பாணியில் ஒரு மாபெரும் மாற்றத்தை உட்படுத்துகிறது.
முழுக் குடும்பத்தினரும் டைப் 2 நீரிழிவு நோயைப் பற்றிக் கற்றுக் கொண்டு அதே ஆரோக்கியமான வாழ்க்கைப் பாணியைப் பின்பற்றினால், பதின்ம வயதினருக்கு மிகச்சிறந்த வெற்றிவாய்ப்பு கிடைக்கும். அது உங்கள் பதின்ம வயதினருக்கு மிகப் பெரிய ஆதரவின் ஊற்றுமூலமாக இருக்கும். அத்துடன், குடும்பத்தின் மற்ற அங்கத்தினரும் நீரிழிவு நோய் ஏற்படும் அதிக அபாயத்தில் இருந்தாலும், நீரிழிவு நோயை விருத்தி செய்துகொள்ளும் அபாயத்தை அது குறைக்கக்கூடும்.
உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் மாத்திரமே இரத்தத்தில் சக்கரையின் அளவைக் கட்டுப்படுத்தாதிருக்கும்போது, உடலில் இன்சுலின் நன்கு வேலைசெய்ய உதவி செய்யக்கூடிய மாத்திரைகளை மருத்துவர் மருந்துக் குறிப்பெழுதிக் கொடுக்கக்கூடும். சில இளைஞருக்கு இன்சுலின் ஊசி மருந்தும் தேவைப்படலாம். ஆரோக்கியமான உணவு, ஒழுங்கான உடற்பயிற்சி, மற்றும் ஒரு ஆரோக்கியமான எடையை இலக்கு வைத்து அடைவதற்குக் கூர்ந்த கவனம் செலுத்த வேண்டிய தேவையை மாத்திரைகள் மற்றும் இன்சுலினும் மாற்றீடு செய்யாது. இவை டைப் 2 நீரிழிவு நோயின் சிகிச்சைக்கான மூலைக் கற்களாகும்.

முக்கிய குறிப்புகள்


  • நீரிழிவு நோய் என்பது உடல், உணவிலிருந்து சக்தியை உறிஞ்சிக்கொள்ளமுடியாத நிலைமையிலிருக்கும் ஒரு நோயாகும்.
  • உயிரணுக்கள் உணவிலிருந்து சக்கரைச் சத்தை உறிஞ்சி சக்தியை உண்டாக்க உதவி செய்வதற்கு உடலுக்கு இன்சுலின் தேவைப்படுகிறது.
  • டைப் 1 நீரிழிவு நோயில், உடல் இன்சுலினைச் சுரப்பதில்லை. இன்சுலின் ஊசி மருந்துகள், இரத்தத்தில் சக்கரையின் அளவைக் கண்காணித்தல், மற்றும் ஒரு உணவுத் திட்டத்தைப் பின்பற்றுதல் மூலமாக, டைப் 1 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.
  • டைப் 2 நீரிழிவு நோயில், பெரும்பாலும் உடலால் கொஞ்சம் இன்சுலினைச் சுரக்கமுடியும். ஆயினும், அது போதுமானதல்ல அல்லது நன்கு வேலை செய்வதில்லை. ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, எடையைக் குறைத்தல், மற்றும் சில வேளைகளில் மருந்துகள் என்பனவற்றின் இணைந்த செயற்பாட்டினால் டைப் 2 நீரிழிவு நோய் சமாளிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments