மஸிஹுத்தீன் இனமுல்லாஹ்
இலங்கையில் பல முஸ்லிம் கட்சிகள் அரசியல் குழுக்கள் இருக்கின்றன, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அதிலிருந்து பிறந்த தேசிய காங்கிரஸ் (அதாவுல்லாஹ் அணி), மக்கள் காங்கிரஸ் (ரிஷாத் அணி), தேசிய ஐக்கிய முன்னணி (பேரியல் அணி) இவர்கள் பாராளுமன்றம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பிரதிநிதிகளைக் கொண்டுள்ளனர்.
வட கிழக்கிலும், நாட்டின் பல பாகங்களிலும் செல்வாக்கு செலுத்துகின்ற பிரதான கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் பார்க்கப்படுகின்றது, மக்கள் காங்கிரஸ் குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் தாக்குப் பிடித்து நிற்கின்றது, தேசிய காங்கிரஸ் கிழக்கில் தாக்குப் பிடித்து நிற்கின்றது.
தாய்க்கட்சியான முஸ்லிம் காங்கிரஸை பொறுத்தவரை கிழக்கிலங்கை முஸ்லிம்கள் அதனை தமது கட்சியாக நேசிக்கின்றனர், ஏனைய கட்சிகள் அவற்றின் தலைவர்களை பெரிதும் நம்பி இருக்கின்றன. குறிப்பாக தாய்க் கட்சியின் பக்கம் விரல் நீட்டுவதிலேயே அவர்களின் பேச்சும் வீச்சும் தங்கி இருக்கிறது, அதற்கான போதுமான நியாயங்களை தாய்க் கட்சியில் தஞ்சம் கொண்டுள்ளோர் தாராளமாகவே வழங்கியும் வருகின்றனர்.
சேய் கட்சிகளை வாழ வைப்பதில் தாய்க் கட்சி கணிசமான பங்கு வகிப்பதால் தாய்க் கட்சி நீடூழி வாழ்தல் பலம் பெறுதல் செய்க கட்சிகளுக்கு முக்கியமான அம்சமாகும், அதற்கேற்ற தலைமையும் வாய்க்கப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இவை தவிர குறிப்பாக தென்னிலங்கை முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற முஸ்லிம் தலைமைகள் தேசியக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி போன்றவற்றில் செல்வாக்கு செலுத்துகின்றனர்.
என்றாலும் கடந்தகால முஸ்லிம் அரசியல் தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கின்றது, போராட்ட அரசியல் சூதாட்டஅரசியலாக மாறி, பின்னர் பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற நிலை அடைந்து, சரணாகதி அரசியலாக பரிமாணம் பெற்றமை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பாரிய நம்பிக்கை ஈனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று நல்லாட்சி அரசியல் குறித்து புதிய தலை முறையினர் சிந்திக்கின்றனர், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அவற்றின் அரசியல் நடவடிக்கைகளை கிழக்கில் இருந்து தேசிய அளவில் நகர்த்தியுள்ளனர், என்றாலும் தமக்கென பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சி இல்லாத நிலையில் இதுவரைக்கும் தேசிய அளவிலான கட்சிக் கட்டமைப்புகளை அவர்கள் தோற்றுவித்துக் கொள்ளவில்லை.
முஸ்லிம் அரசியலில் மாற்றம் குறித்து பேசப்படுகின்றது, சிலர் இடது சாரி ஜே வீ பீ அரசியல் குறித்து அக்கறை காட்டுகின்றனர்.
இந்த நிலையில் மேற்படி களநிலை யதார்த்தங்களை உள்வாங்கிய நிலையிலேயே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல்களுக்கு முஸ்லிம் சமூகம் முகம் கொடுக்க வேண்டியுள்ளது, தேசிய பிராந்திய சக்திகளை சரியான பரிமாணங்களில் கணிப்பீடு செய்து இணக்க அரசியலை செய்வதே மாற்றங்களின் முதற் படியாக இருக்கும்.
மாவட்ட விகிதாசார பிரதிநிதித்துவ முறை ஆயினும் அல்லது தொகுதிவாரி மற்றும் மாவட்ட தேசிய விகிதாசார கலப்பு முறை ஆயினும் முஸ்லிம் பிரதிநிதித் துவங்களை எவ்வாறு நாங்கள் தக்க வைத்துக் கொள்ளப் போகின்றோம்.


0 Comments