விமான நிலையத்துக்கே நான்தான் சொந்தக்காரன் சுற்றுலா வந்த கனடா பயணி ரகளை : என்னிடமே டிக்கெட் கேட்கிறீர்களா?
சென்னை சர்வதேச விமான நிலையத்தில்
இருந்து நேற்று அதிகாலையில் லண்டன், அபுதாபி, மஸ்கட், மொரீஷியஸ், கட்டார்
ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்கள் தயாராகி கொண்டிருந்தன. விமான நிலைய
புறப்பாடு பகுதியில் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. ஒவ்வொரு
நுழைவாயிலிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், பயணிகளின் டிக்கெட்
மற்றும் ஆவணங்களை சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர். அதிகாலை 4
மணியளவில் 4வது நுழைவாயில் வழியாக ஒரு வெளிநாட்டு பயணி வந்தார். மத்திய
தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், அவரை நிறுத்தி டிக்கெட், ஆவணங்களை
காட்டும்படி கூறினர். உடனே அவர், அலட்சியமாக சிரித்து கொண்டே ‘இந்த விமான
நிலையத்துக்கு சொந்தக்காரனே நான்தான். நான்தான், உங்களுக்கு சம்பளம்
தருகிறேன். என்னிடமே டிக்கெட் கேட்கிறீர்களா‘ என கேட்டார்.
பின்னர்,
வீரர்களை தள்ளிவிட்டு உள்ளே சென்றார். இதனால், அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு
படை வீரர்கள், அவரை தடுத்து நிறுத்தி, ஆவணங்களை கேட்டனர். ஆனால், அவர்
கூறியதையே மீண்டும் கூறினார். உடனே அருகில் இருந்த உயர் அதிகாரிகளுக்கு,
வீரர்கள் தகவல் தெரிவித்தனர். உயர் அதிகாரிகள், வந்து விசாரித்தபோது, ‘இந்த
விமான நிலையம் என்னுடையது. என்னை மரியாதை குறைவாக நிற்க வைத்து பேசுவது
சரியல்ல‘ என அவர்களிடம் வாக்குவாதம் செய்தார். அவரது பேச்சும்,
நடவடிக்கையும் முன்னுக்குப்பின் முரணாக இருந்தது.
உடனே பாதுகாப்பு
அதிகாரிகள், அவரிடம் இருந்த கைப்பையை சோதனை செய்ய முயன்றனர். ‘என்னையே
சோதனை செய்கிறீர்களா‘ என கேட்டு அவர், வீரர்களிடம் தகராறு செய்தார்.
ஆனாலும் வீரர்கள், அவரது பையை பிடுங்கி சோதனை செய்தனர். அதில் பாஸ்போர்ட்
இருந்தது. அதில், கனடா நாட்டை சேர்ந்த பெஞ்சமின் மைக்கேல் (35). கடந்த
ஆண்டு அக்டோபர் மாதம், கனடாவில இருந்து சுற்றுலா பயணியாக சென்னை
வந்துள்ளார். அவரது விசா, இம்மாதம் 24ம் தேதியுடன் காலாவதியாகிறது என
தெரிந்தது.
ஆனால், அவரிடம் விமான டிக்கெட் எதுவும் இல்லை.
இதையடுத்து, பாதுகாப்பு படை அதிகாரிகள், சென்னை விமான நிலைய போலீசாருக்கு
தகவல் கொடுத்தனர். போலீசார், அவரை காவல் நிலையம் கொண்டு சென்று
விசாரித்தனர். அவர்களிடமும் ‘விமான நிலையத்துக்கு நான்தான் சொந்தக்காரன்‘
என கூறினார். பின்னர், மனநிலை பாதிக்கப்பட்டவர் என போலீசாருக்கு தெரிந்தது.
இதையடுத்து டெல்லியில் உள்ள கனடா நாட்டு தூதரகத்துககு போலீசார்
தெரிவித்தனர். தூதரக அதிகாரிகள், அலுவலகத்தில் இருந்து எங்கள் அதிகாரிகள்
அழைத்து செல்வார்கள். அதுவரை அவரை பத்திரமாக வைக்க வேண்டும் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவரை போலீசார், பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர். மேலும்,
எதற்காக அவர் சென்னை வந்தார். எங்கு தங்கி இருந்தார். தற்போது விமான
டிக்கெட் இல்லாமல் வந்தது ஏன்? உண்மையிலேயே மனநிலை பாதிக்கப்பட்டவரா அல்லது
நடிக்கிறாரா என கியூ பிரிவு, மத்திய மற்றும் மாநில உளவு பிரிவு போலீசார்
விசாரிக்கின்றனர்.
-Dinakaran-
0 Comments