புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தாராளமாக நாட்டுக்குத் திரும்பி வரலாம். அவர்கள் இங்கு முதலீடுகளையோ வியாபாரத்தையோ மேற்கொள்வதுடன் சுதந்திரமாக வாழமுடியும். புலம்பெயர் தமிழர்கள் எம்முடன் இணைந்து வாழ்வதையே விரும்புகின்றனர். அவர்களது சந்தேகத்தைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் நேற்று முன்தினம் ஜனாதிபதி மாளிகையில் ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை சந்தித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடினார். இதன்போது தனது லண்டன் விஜயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், புலம்பெயர்ந்த தமிழர் அமைப்பினருடன் தான் லண்டனில் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி பிரச்சினைக்குத் தீர்வுகாண தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
லண்டனில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பல அமைப்புக்கள் உள்ளன. நான் இம்முறை விஜயத்தின்போது சில அமைப்பினருடன் பேச்சுக்களை நடத்தினேன். ஈழம் கோரும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடன் நான் பேசவில்லை. அவர்களுடன் பேசவேண்டிய அவசியமும் எனக்கில்லை. நான் சந்தித்த புலம்பெயர் தமிழர்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர் சிங்களத்தில் என்னுடன் உரையாடினர். எம்மை புலம்பெயர் தமிழர்கள் என்று முத்திரை குத்தவேண்டாம். நாம் உங்களுடன் சேர்ந்து செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றோம்.
முன்னர் இருந்த இலங்கையின் தலைவர்கள் எம்முடன் பேசவில்லை. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாம் தயாராக உள்ளோம். நாட்டுக்கு வரவும் நாம் தயாராக இருக்கின்றோம் என்று அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக நான் உறுதியளித்திருக்கின்றேன் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த ஜனாதிபதி, புலம்பெயர் தமிழ் மக்கள் தாராளமாக நாட்டுக்கு வரலாம். அவர்கள் வந்து இங்கு முதலீடுகளையும் வியாபாரங்களையும் மேற்கொள்ளலாம். புலம்பெயர் தமிழர்களை நாட்டுக்கு வரவழைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம். அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வை நாம் காண்போம் என்றும் கூறினார்.
தற்போதைய நிலையில் ஜனாதிபதியின் இந்த கருத்துக்கள் வரவேற்கத்தக்கவையாகவே அமைந்துள்ளன. கடந்த வாரம் பிரிட்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரித்தானியா மகாராணியாரையும் அந்நாட்டின் பிரதமர் டேவிட் கமரூனையும் சந்தித்து பேசியிருந்தார். இந்த விஜயத்தின்போது புலம்பெயர் தமிழர்களில் 300 பேர் வரையில் ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையசைத்த புகைப்படங்களும் வெளியாகியிருந்தன.
லண்டனில் யாழ். இந்துக் கல்லூரியின் பிரித்தானியக் கிளையினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்திருந்தனர். இவர்களைவிட வேறு சில அமைப்பின் பிரதிநிதிகளும் ஜனாதிபதியை சந்தித்ததாகவே தெரிகின்றது. இந்தச் சந்திப்பின் பின்னணியிலேயே ஜனாதிபதி புலம்பெயர் தமிழர்கள் விடயத்தில் அக்கறை செலுத்தும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.
ஜனாதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ள நிலையில் பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் புலம்பெயர் தமிழர் விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். இலங்கையினால் தடைவிதிக்கப்பட்டுள்ள 16 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் 424 நபர்கள் மீதான தடை குறித்து அரசாங்கம் மீளாய்வு செய்யவுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.
கடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்க காலத்தில் புலம்பெயர் தமிழர்கள் பெரும் சந்தேகக் கண்கொண்டே பார்க்கப்பட்டனர். 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டபோதிலும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீண்டும் புலிகள் இயக்கத்தை உருவாக்குவதில் கங்கணம் கட்டி நிற்பதாகவும் இதனால் புலம்பெயர் தமிழர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் அரசாங்க தரப்பில் அன்று கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
இதனைவிட அரசியல் இலாபம் பெறுவதற்காக குறிப்பாக சிங்கள மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் அரசாங்கமானது புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மீது கடும் குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தது. மீண்டும் புலிகள் இயக்கம் உருவாகிவிடும் என்றும் இதனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் விடயத்தில் தாம் எச்சரிக்கையாக இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அடிக்கடி கூறிவந்தது.
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து தமது சொந்த நாட்டுக்குத் திரும்பி தமது சொந்த இடங்களைப் பார்வையிடுவதற்கும் அங்கு வந்து தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கும் புலம்பெயர் தமிழ் மக்கள் பெரும் விருப்பம் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் அச்சமின்றி சொந்த நாட்டுக்கு வந்து திரும்பிச்செல்லக்கூடிய நிலைமையை கடந்த அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கவில்லை. இருந்தபோதிலும், அன்றைய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு ஓரளவு புலம்பெயர் தமிழர்கள் நாட்டுக்கு வந்து சிற்சில செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து நடந்தால் மட்டுமே இவ்வாறான செயற்பாடுகள் சாத்தியமாக அமைந்தன.
கடந்த 3 தசாப்த கால யுத்தம் காரணமாக 15 இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கனடா, அமெரிக்கா, பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். இந்த மக்களில் பெரும்பான்மையானோர் உண்மையிலேயே தமது விருப்பத்தின் அடிப்படையில் இவ்வாறு புலம்பெயரவில்லை. நாட்டில் ஏற்பட்டிருந்த ஆபத்தான சூழலிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவே அவர்கள் புலம்பெயரும் நிலை ஏற்பட்டிருந்தது. இவ்வாறு சென்றவர்கள் நாட்டுக்குத் திரும்பி சுதந்திரமாக வாழ்வதற்கு பேரார்வம் கொண்டுள்ளனர்.
இவ்வாறு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் நாடுதிரும்புவதற்கும் அவர்கள் நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுப்பதற்குமான சூழல் இனியாவது ஏற்படுத்தப்படவேண்டியது இன்றியமையாததாகும். கடந்த ஆட்சிக்காலத்தில் யுத்தம் முடிவடைந்த பின்னர் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டது. இதன்மூலம் சில நூற்றுக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் இரட்டைப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்டனர். ஆனால், சில மாதங்களின் பின்னர் அந்த நடைமுறை பாதுகாப்புக் காரணங்களைக் கூறி நிறுத்தப்பட்டது. பாதுகாப்புச் செயலாளரின் அனுமதி பெற்றே இரட்டைப் பிரஜாவுரிமை பெறமுடியும் என்ற சூழல் உருவாக்கப்பட்டது. இதனால் நாட்டுக்கு வந்து இரட்டைப் பிரஜாவுரிமையைப் பெற்று வாழ்வதற்கு விரும்பிய புலம்பெயர் தமிழர்களுக்கு பெரும் ஏமாற்றமே காத்திருந்தது. அத்துடன், இலங்கைக்கு வரும் புலம்பெயர் தமிழர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முன்னைய அரசாங்கம் தவறியிருந்தது.
புலம்பெயர் தமிழர்கள் நாடுதிரும்பிய போது கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டனர். வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் வடபகுதி செல்வதற்கு பயண அனுமதி பெறும் நிலை காணப்பட்டது. புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டுக்கு வந்து உதவி வழங்கத் தயாராக இருந்தபோதிலும் அவர்களது மனங்களில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு முன்னைய அரசாங்கம் தவறியிருந்தது. இதனால், விருப்பமிருந்தும்கூட புலம்பெயர் தமிழர்கள் சொந்தநாட்டில் காலடி எடுத்துவைக்க முடியாத நிலை காணப்பட்டது.
தற்போது புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் புலம்பெயர் தமிழர்களின் விவகாரத்துக்கு உரிய தீர்வு காணப்படவேண்டியது அவசியமானதாகும். புலம்பெயர் தமிழர்கள் அனைவரையும் புலிகள் என்ற கண்ணோட்டத்துடன் பார்க்கும் நடைமுறை இனியாவது மாறவேண்டும். இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்க்கமான நிலைப்பாட்டில் இருப்பதாகவே தெரிகின்றது.
புலம்பெயர் தமிழர்கள் நாடுதிரும்புவதற்கேற்ற ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும். நாடுதிரும்பும் புலம்பெயர் தமிழர்களை கைதுசெய்யவோ அவர்களை துன்புறுத்தவோ எவரும் முனையக்கூடாது. அண்மையில் பிரான்ஸிலிருந்து இலங்கைக்கு வருகைதந்திருந்த பகீரதி முருகேசு என்ற பெண் கைதுசெய்யப்பட்டிருந்தார். இதேபோல் பத்துக்கு மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனவே, எதிர்காலத்தில் இத்தகைய நடைமுறைகளைப் பேணாது புலம்பெயர் தமிழர்களின் மனங்களில் நம்பிக்கையை வளர்க்கும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையவேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.


0 Comments