பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனை அமெரிக்காவுக்கு காட்டி கொடுத்த டாக்டருக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் ஒருவரை நேற்று மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இந்த கொலையை தலிபான்களின் ஆதரவு இயக்கமான ஜுன்டாலா செய்ததாக பின்னர் அறிக்கை வெளியிட்டது.
பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் கடந்த 2011&ம் ஆண்டு அல்கய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். அப்போது டாக்டர் ஷகில் அப்ரிடி என்பவர் அப்பகுதியில் போலி தடுப்பு ஊசி மருத்துவ முகாம்களை மேற்கொண்டு, பின்லேடன் தங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடித்தார். பின்னர் இதுகுறித்து அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, ஒசாமா பின்லேடன் தங்கியிருந்த பகுதியை அமெரிக்க அதிரடி படையினர் சுற்றி வளைத்து பின்லேடனை சுட்டுக் கொன்றனர்.
பின்னர், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட பாகிஸ்தான் போலீசார், போலி மருத்துவ முகாம் நடத்தியதாக டாக்டர் ஷகில் அப்ரிடியை கைது செய்து சிறையில் அ¬ட்த்தனர்.அவருக்கு நீதிமன்றம் 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. டாக்டருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது
ஆனால், பாகிஸ்தான் அரசு அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனால் பாகிஸ்தானுக்கு ஆண்டுதோறும் வழங்கும் உதவித் தொகையை அமெரிக்கா நிறுத்திவிட்டது.டாக்டர் ஷகில் அப்ரிடி தொடர்பான வழக்கு விசாரணை கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கியது. டாக்டருக்கு ஆதரவாக பாகிஸ்தான் வழக்கறிஞர் சமியுல்லா அப்ரிடி ஆஜரானார். இதைத் தொடர்ந்து ஷமியுல்லாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பல்வேறு தீவிரவாத இயக்கங்களிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வரத் துவங்கின.இதைத் தொடர்ந்து, வழக்கறிஞர் ஷமியுல்லா துபாய்க்கு சென்றுவிட்டு சமீபத்தில்தான் பெஷாவர் நகருக்கு திரும்பினார்.
ஒரு வழக்கு தொடர்பாக நேற்று மாலை வழக்கறிஞர் ஷமியுல்லா காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இத்தாக்குதலில் ஷமியுல்லா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார் என்று பெஷாவர் நகர போலீசார் தெரிவித்தனர்.
பின்லேடனை அமெரிக்காவுக்கு காட்டி கொடுத்தவருக்கு ஆதரவாக வாதாடக்கூடாது என்று வழக்கறிஞரை எச்சரித்தோம். ஆனால், அவர் கேட்காததால் அவரை சுட்டு கொன்றோம் என்று தலிபான் ஆதரவு இயக்கமான ஜுன்டாலா நேற்றிரவு இணையதளத்தில் அறிக்கை வெளியிட்டது.


0 Comments