Subscribe Us

header ads

போகஹதமனவில் பள்ளிவாசல் தகர்ப்பு - மூடிமறைக்கப்படுவது ஏன்..???

-அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா-
 
மின்னேரியா- ஹிங்குராக்கொட, போகஹதமன எனும் கிராமத்தில் அப்பிராந்தியத்தின் பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் போன்றவற்றின் பூரண அனுமதியுடன் நிர்மாணிக்கப்பட்டு வந்த பள்ளிவாசல் ஒன்று சிங்கள கடும் போக்கு இனவாதிகளால் உடைத்து தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளதான புகைப்படங்களுடன் அண்மையில் முக நூல் மற்றும் சில இணையச் செய்திகளில் எனக்கு பார்க்க கிடைத்தது. 
இதன் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ள நான் பல முயற்சிகளை மேற்கொண்டதன் பலனாக உடைக்கப்பட்ட குறித்த பள்ளிவாசலின் தலைவர் வஹாப்தீன் அவர்களை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு பேசினேன். குறித்த பள்ளிவாசலின் தலைவர் வஹாப்தீனும் பள்ளி உடைக்கப்பட்ட செய்தியை என்னிடம் உறுதிப்படுத்தினார். 
நாட்டில் மீண்டும் மீண்டும் தொடருகின்ற இப்படியான மிலேச்சத்தனமான செயல்களை அறிகையில் எமக்குள் பல கேள்விகள் எழுகின்றன. கடந்த ஆட்சியின் வீழ்ச்சிக்கு மூல காரணமாயிருந்த மத வன்முறைகள்  மைத்திரி யுகத்தின் நல்லாட்சியிலும் தொடர்வது குறித்து முஸ்லிம்களை மீண்டும் அச்ச நிலைக்கும் பெரும்பான்மை கட்சிகளின் மீது அதிருப்தி நிலைக்கும் கொண்டு வந்திருக்கிறது. 
இதில் உச்சக்கட்ட துயரம் என்னவென்றால், இதுவரை இந்த பள்ளி உடைப்பு குறித்த எவ்வித கண்டனங்களையும் எமக்கான முஸ்லிம் அரசியல்வாதிகள் விடுக்கவில்லை. கடந்த ஆட்சியில் அரசியல் மூலதனமான பள்ளி உடைப்பு சம்பவங்கள் இன்று ஏதோ ஒரு தேவையற்ற விடயமாக மூடி மறைக்கப்படுவது ஏன் என என்னால் புரிந்து கொள்ள முடிவதில்லை. 
குறித்த கிராமத்தில் 80 குடும்பங்கள் மார்க்க கடமையான ஐவேளை தொழுகையை நிறைவேற்றுவதற்காக நிர்மாணித்த பள்ளியை இனவாதிகள் தரைமட்டமாக்கி இருக்கின்றார்கள். நாட்டு ஜனாதிபதியின் பிரதேசத்தில் இப்படியொரு சம்பவம் நடைபெற்றிருப்பது நல்லாட்சியில் நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களுக்கு இன்னும் கூடுதல் கவலைஐயைத் தருகிறது. 
யாரைப் பாதுகாக்க இன்னும் இந்த சம்பவங்களை எமக்கான முஸ்லிம் அரசியல்வாதிகளும், ஒரு சில ஊடகங்களும், இன்னும் காகிதப் புலிகளும் வெளிச்சத்திற்கு கொண்டு வரவில்லை..? அன்று பள்ளிவாசலின் கண்ணாடிகள் இனவாதிகளால் கல்லெறிந்து உடைக்கப்பட்ட போது ’இஸ்லாமிய உணர்வு’ பொங்க கத்தி கூச்சலிட்டவர்களுக்கு இன்று எங்கே போனது அந்த இஸ்லாமிய உணர்வு..? 
போகஹதமன முஸ்லிம்கள் எமது சகோதரர்கள் இல்லையா..? பெரியதோ சிறியதோ அங்கே எமது முஸ்லிம்கள் ஐவேளையும் அல்லாஹ்வை வழிபட நிர்மாணித்தது பள்ளி இல்லையா..? பொறுப்புவாய்ந்த அரச திணைக்களங்களின் அனுமதி பெற்று கட்டப்பட்டு வந்த இப்பள்ளிவாசல் இனவாதிகளின் கடும் எதிர்ப்புகளுடன் தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது. 
எனவே, முஸ்லிம் அரசியல் செயற்பாடுகள் வெறுமனே அரசியல் இலாபங்களுக்காகவும், தான் சார்ந்த கட்சியின் நலன்களுக்காகவும், தனி நபர் துதிபாடல்களுக்காகவும் மாத்திரம் தானா என்பதை இவ்வேளையில் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். அரசியலைத் தாண்டி நாம் இஸ்லாத்தை அதிகமதிகம் நேசிப்பவர்கள். 
அந்தவகையில், எமது முஸ்லிம்கள் தொழுகையை நிறைவேற்ற நிர்மாணித்து வந்த ’அல்லாஹ்வின் இல்லம்’ உடைக்கப்பட்டதை கணக்கிலெடுக்காமல் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் பாணியில் நாம் செயற்படுவது வேடிக்கையானதும் வேதனையானதுமாகும். 
நல்லாட்சியின் மீதும் நாட்டு மக்களுக்கு தொடர்ந்தும் நல்ல அபிப்பிராயம் வர வேண்டுமென்றால் முஸ்லிம்கள் மீதான, பள்ளிகள் மீதான  வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென சம்பந்தப்பட்டவர்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

Post a Comment

0 Comments