கொலன்னாவ சாலமுல்ல ‘லக்சந்த செவன’ மற்றும் அங்கொடை பிரதேசங்களில் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டடங்களை நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இன்று சனிக்கிழமை சென்று நேரில் பார்வையிட்டார்.
அமைச்சர் ஹக்கீமுடன் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம், மேல் மாகாண சபை உறுப்பினர் அர்சாத் நிசாம்தீன், இலங்கை காணி மீட்டல் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.எச்.எம்.சல்மான், செயலாற்றுப் பணிப்பாளர் எஸ்.எல்.எம். ஹனீபா (மதனி), பொது முகாமையாளர் திருமதி சேனாதீர, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதித் தலைவர் சபீக் ரஜாப்டீன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரிகள் ஆகியோர் அவ்விடங்களுக்குச் சென்றிருந்தனர்.
அங்கிருந்த குடியிருப்பாளர்கள் அமைச்சரிடம் தமது குறைபாடுகளை தெரிவித்த போது, அவைபற்றி கண்டறிய ஒரு குழுவை தாம் நியமிக்கவிருப்பதாக அமைச்சர் கூறினார்.
சாலமுல்லை வீட்டுத்திட்டத்தில் 216 குடியிருப்பாளர்கள் வசித்து வருகிறார்கள். தற்பொழுது நிர்மாணிக்கப்படும் வீடமைப்புத் தொகுதியுடன் வீடுகளின் எண்ணிக்கை 1500ஆக அதிகரிக்கும்.
பிரஸ்தாப வீடமைப்பு திட்டத்திற்கு அருகில் பிரிவு 01, பிரிவு 02 ஆகியவற்றின் நிர்மாண வேலைகள் நடைபெற்று வருகின்றன. அவற்றையும் அமைச்சரும் குழுவினரும் பார்வையிட்டனர்.
அங்கொடையில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்காக அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனம் வீட்டுத் தொகுதியை நிர்மாணித்து வருகிறது.
அரசாங்கத்தின் 100 நாள் செயல்திட்டத்திற்கு அமைவாக அவற்றின் எஞ்சிய வேலைகளை துரிதமாக நிறைவு செய்யுமாறு அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

0 Comments