வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக கோப்பை 3-வது காலிறுதி போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. அந்த அணியின் வேகப் பந்து வீச்சாளர் வகாப் ரியாஸ் பேட் செய்ய வந்தார்.
வகாப் ரியாஸ் அரைசதம் எடுத்தவர். ஆனால் இந்த முறை ஸ்டார்க், ஹேசில்வுட் பந்துகளில் அவர் பேட்டால் பந்துகளை தொட முடிய வில்லை. கடைசி வரை பந்து அவரது பேட்டில் படாமல் சென்று கொண்டு இருந்தது.
இதனைப் பார்த்த ஸ்டார்க், ஒரு பந்தில் வகாப் பீட் ஆக அருகில் வந்து ‘உருண்டையாக ஏதோ போகிறதே உனக்கு தெரிகிறதா?’ என்ற ரீதியில் ஏதோ கேட்க ஆஸ்திரேலிய வீரர்கள் சிரிக்க, வகாப் ரியாஸ் ஆக்ரோஷமாக திருப்பி சில வார்த்தைகளை விட, நடுவர் தலையிட்டு ‘உஷ்’ பேசக்கூடாது என்று இருவரையும் சமாதானப்படுத்தினார்.
பிறகு 16 ரன்கள் எடுத்த வகாப் ரியாஸ், கேலி செய்த ஸ்டார்க் பந்திலேயே அவுட் ஆனார். பின்னா ஆஸ்திரேலிய பேட்டிங்கின் போது 9-வது ஓவரை வகாப் ரியாஸ் வீச வந்தார். வார்னர் 24 ரன்களில் இருந்தார். அவரது ஈகோவை சீண்டினார் வகாப், ஒரு ஷார்ட் பிட்ச் பவுன்சரை வீச அதனை அவர் தேர்ட் மேனில் தூக்கி விட்டார். அங்கு ரஹத் அலி கேட்ச் பிடித்தார்.
வாட்சன் களமிறங்க வகாப் ரியாஸ் அவருக்கு வேகமாக பவுன்சர்களையும் லெந்த் பந்தையும் மாறி மாறி வீசி வேதனையை அதிகரித்தார்.
வகாப் ரியாஸ் வீசிய பவுன்சர் பந்துகளில் வாட்சன் திணறியதால், ஆட்டம் மேலும் சூடேறியது. 4 ரன்களில் வாட்சன் இருந்த போது வகாப் ரியாஸ் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை வாட்சன் ஹூக் செய்ய அது நேராக டீப் பைன் லெக்கில் ரஹத் அலியிடம் உயரமாக எழும்பி அழகாகக் கையில் பூபோல் விழுந்தது அதனை அவரது வழுக்கிய கைகள் தவற விட்டன.
இதனிடையே, நடுவரின் அறிவுறுத்தலையும் மீறி, 33வது ஓவரில் வாட்சன், வகாப்பிடம் திருப்பி சண்டை போட்டார். இந்த மோசமான சம்பவம், சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதனிடையே வகாப் ரியாசுக்கு, போட்டி ஊதியத்தில் 50 விழுக்காடும், வாட்சனுக்கு 15 விழுக்காடும் பிடித்தம் செய்யப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. இருவரும் தவறுகளை ஒப்புக் கொண்டுள்ளதால், விசாரணை தேவையில்லை என்றும் ஐசிசி தனது அறிக்கையில் கூறியுள்ளது.


0 Comments