செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள் ஏலக்காயை மென்று விழுங்கினால் அதிலிருந்து நிவாரணம் பெறலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஆம், உணவுகளில் வாசனைப் பொருளாக பயன்படுத்தப்படும் ஏலக்காயில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.
ஏலக்காயில் உள்ள 'வாலட்டைல்' என்ற எண்ணெய்தான் அதன் விசேஷ நறுமணத்தை அளிக்கிறது. அதோடு, நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது.
ஏலக்காயின் காரக்குணம், வயிற்றுப் பொருமலைக் குணமாக்கி எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது.
ஏலக்காயை டீ, பாயாசம் போன்றவற்றில் இட்டுப் பயன்படுத்துவது வழக்கம். அவ்வாறு டீ, பாயாசத்துடன் சேர்த்துப் பருகுவதால் இது மன இறுக்கம், படபடப்பு முதலியவற்றை அகற்றி உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்கிறது. எனவே காலையில் டீ அல்லது காபியில் ஏலக்காய் சேர்த்துப் பருகலாம் என்று ஆலோசனை அளிக்கப்படுகிறது.
ஏலக்காயில் ஈரப்பதம், புரதம், மாவுப்பொருள், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் உள்ளன.
குடலில் உணவு செரிமானம் ஆகாதபோது ஏற்படும் தலைவலியை ஏலக்காய் சேர்த்த ஒரு கப் டீ போக்கும்.
சிலசமயம் வெங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்த்துக் கொள்பவர்களுக்கு நெஞ்செரிச்சலும், வாயுத் தொந்தரவும் இருக்கும். அவர்கள் சாப்பாட்டுக்குப் பிறகு ஏலக்காய் மெல்லுவது நல்லது. இரண்டு ஏலக்காயில் உள்ள விதைகளை இடித்து கிராம்புகள், மல்லித்தூள் சேர்த்து தண்ணீர் கலந்து விழுங்கினாலும் உடல் ஜீரணப் பிரச்சினை தீரும்.
ஏலக்காயை பாலோடு சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித் தேனும் சேர்த்து ஆண்கள், பெண்கள் தினமும் அருந்தி வந்தால் இருபாலருக்கும் நலன்கள் அளிக்கும்.
அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த் தூளைச் சேர்த்துப் பருகிவந்தால் மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறைவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளையே பயன்படுத்தினால் போதும். இதே போல ஏலக்காயை சூயிங்கம்முக்கு பதிலாக மென்றால் வயிற்றுப் பசியை அதிகரித்து நன்கு சாப்பிட வைக்கும்.
அவ்வப்போது உணவுப்பொருட்களில் ஏலக்காயைச் சேர்த்து வந்தால்கூட நல்ல சுறுசுறுப்பைப் பெற முடியும். அதோடு செரிமானப் பிரச்சினை இன்றி உடலை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ளலாம்.


0 Comments