மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்தினம் 3ந் திகதி வருகை தந்திருந்தார்.
அவரின் யாழ்ப்பாண விஜயம் ஒரு விழாவுக்கானதோ அல்லது ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் யாழ்ப்பாணத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கானதோ அல்ல. மாறாக வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்காகவே அவர் வருகை தந்திருந்தார்.
அதேநேரம் ஜனாதிபதி மைத்திரியின் யாழ்ப்பாண விஜயம் மிகவும் எளிமையாக, சாதாரணமாக அமைந்திருந்தது. ஊடகச் செய்தியைத் தவிர, ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகையை வேறு எந்த ஆடம்பரங்களும் கட்டியம் கூறி நிற்கவில்லை.
முன்பென்றால் மகிந்த ராஜபக்சவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது, யாழ் நகரம் அலங்கரிக்கப்படும். ஒவ்வொரு மின்கம்பங்களும் மகிந்தவின் புகைப்படத்தை தாங்கி நிற்கும். முகாம்களில் இருக்கின்ற படையினர் வீதிகளுக்கு வருகின்ற ஒரு திருவிழாவாக அது அமைந்திருக்கும்.
நடனம், நாட்டியம், மேளதாளம், பாட்டு, பக்கவாத்தியம் என்ற கலைநிகழ்வுகளால் மகிந்தவின் மனதைக் குளிரவைக்கும் முயற்சியில் ஆளுநர் அலுவலகம் அலமலக்காக ஓடித் திரியும்.
இதற்காக பிரபல்யமான பாடசாலை மாணவர்களுக்கு பயிலரங்கு நடக்கும். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முகட்டு ஓட்டுக்கும் வர்ணம் தீட்டும் பணி நடக்கும். அதை உலங்கு வானூர்தி அவதானிக்கும்.
யாழ்.மாவட்டத்தில் பார்க்கும் இடம் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் நிமலனாக மகிந்தவின் கட்அவுட்டுக்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
அடேங்கப்பா! வீதிகள் தோறும் மாணவர் அணி வகுப்பு, படைத்தரப்பினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என எங்கும் ஒரே திருவிழா மயம்.
கூடவே விடுதிகளில் தங்கி நிற்கும் அதிகாரிகளின் கூட்டம் இப்படியாக கோடிக்கணக்கான ரூபாய் செலவில், வடக்கின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடந்திருக்கும். பின்னர் சொல்லவோ வேண்டும்
மகிந்தவின் தடிப்பான உரையை. இப்படி எல்லாம் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நடந்த பின்னர் மன்னர் மகிந்த ராஜபக்ச, காங்கேசன்துறைக்குச் செல்வார். அங்கு மிதக்கும் படகில் அவரின் நீராடல் நடக்கும்.
அதைப் புகைப்படம் ஆக்குவதில் ஒரு பெரும் அரச கூட்டம் முண்டியடிக்கும். காங்கேசன் விடுதியில் போசன சுகம் நடக்கும்.
இதுவே ஜனாதிபதி மகிந்த கலந்து கொள்ளும் வடக்கின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமாக இருந்திருக்கும்.
ஆனால், நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பக்குவமாக நடந்தேறியது.
உரிய நேரத்திற்கு ஜனாதிபதி மைத்திரி யாழ் செயலகத்திற்கு வந்தார். சம்பிரதாயத்திற்கு முதல்வர் விக்னேஸ்வரன் மாலை அணிய, கூட்டம் ஆரம்பமாகியது.
வீதிகளில் எந்தச் சலனமும் இல்லை. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எந்த விடயம் கதைக்கப்படவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டதோ அந்த விடயம் கதைக்கப்பட்டது. தமிழர்களின் பிரச்சினையை உணர்ந்து கொண்ட நாட்டுத் தலைவராக மைத்திரியின் உரை அமைந்திருந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் அபிவிருத்தி என்ற எண்ணக்கருவுக்குள் கவனம் செலுத்தினர். அரசியல் பேதங்கள் கூட்டத்தில் தென்படவில்லை என்பதாக ஜனாதிபதி மைத்திரியின் தலைமையில் நடந்த வடக்கின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை விமர்சிக்கலாம்.
தேவையற்ற செலவுகளை, ஆடம்பரங்களை தவிர்த்தமை மைத்திரியின் முன்னுதாரணம் என்றே கூறவேண்டும்.
0 Comments