Subscribe Us

header ads

மகிந்தவை பிரதமராக்க சுதந்திரக்கட்சியினர் தயாரில்லை - ஜனாதிபதி


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நெருக்கடிகள் அதிகரித்து வருவதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய மாகாண முதலமைச்சர் பதவியில் இருந்து சரத் ஏக்கநாயக்கவை நீக்க வேண்டும் என மாகாண சபையில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கோரி வருகின்றனர்.

மாகாண சபையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தனக்கிருப்பதாக சத்திய கடிதங்களை சமர்பித்துள்ள திலின பண்டார தென்னகோனை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் எனவும் உறுப்பினர்கள் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் அந்த கோரிக்கையை நிராகரித்துள்ள ஆளுநர், ஜனாதிபதியின் சார்பில் பணியாற்றவே தன்னை தான் ஆளுநர் பதவியில் நியமிக்கப்பட்டுளளதாகவும் மாகாண சபை உறுப்பினர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தான் அந்த பதவியில் அமர்த்தப்படவில்லை எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் என்ன கூறினாலும் தற்போதைய முதலமைச்சரை பதவி நீக்கம் செய்வது குறித்து ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்த உள்ளதாகவும் முதலமைச்சரை பதவியில் இருந்து நீக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க போவதாகவும் திலின பண்டார தென்னகோன் கூறியுள்ளார்.

இதனிடையே, கொழும்பில் இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னை கட்சியின் தலைவர் என்ற முறையில் செயற்படவிடாத சக்தி பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த சுதந்திரக்கட்சியில் எவரும் தயாரில்லை எனவும் அந்த கோரிக்கைக்கு பின்னால் இருக்கும் சக்தி எது என்பதை அடையாளம் காண வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments