விகிதாசாரத் தேர்தல் முறைமையை மாற்றுவது தொடர்பிலான இறுதித் தீர்மானம் எடுக்கும் விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம் எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு கிட்டும் என ஐ.தே.க ஊடக பேச்சாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
மேலும் 100 நாள் வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கும்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்த நாம் தயாரில்லை. அத்தோடு தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதே ஐ.தே.க வின் நிலைப்பாடாகும். எனினும் பெரும்பான்மை இல்லாத பாராளுமன்றத்துடன் பயணிக்க முடியாது. இதனால் பாரிய சிக்கல்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்த சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது. இதனூடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் வரம்பு மீறிய அதிகாரங்கள் நீக்கப்படும்.இதனை பாராளுமன்றில் சமர்பித்து நிறைவேற்றுவோம்.
எனினும், தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விகிதாசார தேர்தல் முறைமையை மாற்றி அமைப்பதே ஐக்கிய தேசியக்கட்சியின் நிலைப்பாடாகும்.இதற்கு மாற்றீடாக தொகுதிவாரியும் விகிதாசார முறைமையும் கலந்த ஒரு தேர்தல் முறைமையையே ஏற்படுத்த வேண்டியுள்ளது. இதற்கு ஐ.தே.க ஒருபோதும் எதிர்ப்பினை வெளிப்படுத்தாது.
எனினும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் ஆலோசனையின் பிரகாரம் எல்லை நிர்ணயம் தொடர்பிலான ஆய்விற்கு மாத்திரம் மூன்று மாதகாலம் தேவைப்படும் என்பதே சிக்கலாக உள்ளது.
பெரும்பான்மை பலம் இல்லாத பாராளுமன்றமே தற்போது உள்ளது. இந்த பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கட்டமைக்கப்படவேண்டும்.இது இவ்வாறிக்கையில் மக்களுக்கு வாக்குறுதி அளித்தமைக்கு அமைவாக 100 நாள் வேலைத்திட்டம் அவசரமாக நிறைவேற்ற வேண்டியுள்ளது.பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். தற்போது தகவல் அறியும் சட்ட மூலத்தினை சமர்பிக்கவேண்டியுள்ளது.
அத்தோடு மக்களுக்கு வாக்குறுதி அளித்தமைக்கு அமைவாக பாராளுமன்றம் கலைக்கப்படவேண்டும்.எவ்வாறாயினும் இது தொடர்பிலான இறுதி தீர்மானம் எடுக்கும் முக்கிய கட்சி தலைவர்கள் கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கூடவுள்ளது. இதன்போது இணக்கம் இனக்கப்பாட்டிற்கு வரமுடியும் என்றார்.


0 Comments