நல்லாட்சி என்ற சொல் எவ்வகையான அர்த்தத்தினை குறிக்கின்றது என்பதை தெளிவாக இந்த தேசிய அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும். இனவாதத்தினையும் தேசிய வாதமாக எண்ணி ஆட்சி நடத்தும் ஆட்சியின் கீழ் நாம் வாழ்கின்றோம் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
சர்வதேசத்தினதும் இந்தியாவினதும் தனிப்பட்ட தேவையினை மாத்திரம் பூர்த்தி செய்ய சிங்களவர்களை பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.பொதுபல சேனா பௌத்த அமைப்பினால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
ஒவ்வொரு அரசும் தமது ஆட்சியில் ஒரு சொல்லினை மெருகூட்டிக்காட்டுகின்றன. அதேபோல் இம் முறையும் தேசிய அரசாங்கம் நல்லாட்சி என்ற சொல்லினை பிரதானப்படுத்தி ஆட்சி நடத்துகின்றது. ஆனால், உண்மையில் இந்த அரசாங்கத்திற்கு நல்லாட்சி என்றால் என்ன என்பது தெரியாது.
ஒரு சிலரின் தேவைகளுக்கே இவர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
சர்வதேசத்தின் முடிவு இலங்கையிலும் ஆட்சியினை தீர்மானிக்கின்றது. இந்தியாவின் முடிவுகள் இலங்கையில் ஆட்சியில் தாக்கத்தினை செலுத்துகின்றது.
வடமாகாண அரசியல் வாதிகளினதும் கிழக்கின் அரசியல் வாதிகளினதும் கோரிக்கைகள் இங்கு ஆட்சியினை தீர்மானிக்கின்றன. ஆனால் சிங்கள மக்களின் குரல் இந்த அரசுக்கு கேட்கவில்லை. சிங்கள பௌத்த மக்களின் விருப்பம் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் தேசிய அரசாங்கத்திற்கு அக்கறை இல்லை.
கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் தேசிய அரசு உருவாகுவதற்கு பல வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அப்போது இது தொடர்பில் எந்தவொரு சிங்கள அரசியல்வாதியும் அக்கறை செலுத்தவில்லை. ஆனால் இன்று தேசிய அரசாங்கம் அமைக்க எந்தவொரு தேவையும் இல்லாத நிலையில் தமிழ் பிரிவினைவாதிகளின் தேவையினை பூர்த்தி செய்யும் நோக்கில் இவர்கள் தேசிய அரசாங்கத்தினை அமைத்து பிரபாகரனின் தேவையினை பூர்த்தி செய்து வருகின்றனர்.
தேசிய வாதம் பற்றி பேசும் இவர்களுக்கு தேசியவாதம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தெரியாது. இனவாதத்தினை தேசிய வாதமாக கருதி இனவாதத்தினையே பலப்படுத்தி வருகின்றனர். இவர்களை நம்பி வாக்கு வழங்கிய பொதுமக்கள் இன்று அதிருப்தியில் உள்ளனர். எனவே, மக்களே வெகு விரைவில் மாற்றம் ஒன்றினை எதிர்பார்ப்பார்கள்.
0 Comments