பாரிய போதைப் பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட வெலோ சுதா இன்று முதல் தடவையாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
இவ்வளவு காலமும் வெலே சுதாவிடம் குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
வெலே சுதாவை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் தேவிகா டி தென்னக்கோன் உத்தரவிட்டிருந்தார்.
சட்ட மா அதிபரினால் வெலே சுதாவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் மட்டும் போதைப்பொருள் வர்த்தகதத்தின் ஊடாக 17 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை வெலே சுதா ஈட்டியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெலே சுதாவின் மனைவி கயனி பிரியதர்சனி மற்றும் அவரது உறவினரான வசந்தி பிரியதர்சனி ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் சில அரசியல்வாதிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் வெலே சுதாவுடன் இணைந்து போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பிலான சாட்சியங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் விரைவில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


0 Comments