தாய் நாட்டில் நல்லாட்சி ஒன்றின் அவசியம் குறித்த முன்னெடுப்புகளுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் அமைந்திருப்பது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஒரு நாட்டில் ஆரோக்கியமான நல்லாட்சி நிலவ சகல இன மக்களினதும் ஒத்துழைப்பு இன்றியமையாதுதாகும். அந்த வகையில் முஸ்லிம்களினதும் முஸ்லிம் அரசியல் தலைவர்களினதும் பங்களிப்பு இதற்கு அவசியமாகும்.
கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் அரசுடன் ஒட்டியிருந்த முஸ்லிம் தலைவர்கள் செய்த அதே பிழைகளை இவ்வாட்சியிலும் தொடரக் கூடாது. எமக்கான இடத்தில் இருந்து கொண்டு எம்இனத்திற்கான உரிமைகளை சலுகைகளை சமயோசிதமாக வென்றெடுக்க முன் வர வேண்டும். எனது சக்திக்கு உட்பட்டவரை முஸ்லிம் சமூகத்திற்கு நன்மை பயக்க கூடிய பல சிறப்பான வேலைத்திட்டங்களை நான் கடந்த ஆட்சியிலும் செய்து வந்தேன். இன்ஷா அல்லாஹ், இந்த அரசாங்கத்திலும் எனது நல்ல முயற்சிகள் தொடரும்.
பேருவளை-தர்ஹா நகர் கலவரத்தின் போது நானும்,நண்பர் அமைச்சர் றிஷாத் பதியூதீன் அவர்களும் உடனடியாக சவூதி அரேபியாவிலிருந்து நாட்டுக்கு வருகை தந்து நேரடியாக கலவரம் நடந்த பிரதேசங்களுக்குச் சென்றோம்.கலவரத்தை தணிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம். அன்று அரசில் இருந்த முஸ்லிம் தலைவர்கள் எல்லோரும் சேர்ந்து பொதுபல சேனாவை தண்டிக்கும்படி அழுத்தங்களை கொடுத்து வந்ததை அனைவரும் அறிவர். அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அன்று நீதியமைச்சராக இருந்து கொண்டு தன்னால் உடனடி நடவடிக்கைகள் எடுக்க முடியாமல் போனமைக்காக ’வெட்கப்படுகிறேன்’ என ஊடகங்களுக்கு பகிரங்கமாய் தெரிவித்தமையையும் எமது மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
மேலும், சகோதர இனத்தைச் சேர்ந்த ஐ.தே.க. பா.உறுப்பினர் பாலித்த தேவப்பெரும அவர்கள் அன்று பேருவளை-தர்ஹா நகர் உறவுகளை காப்பாற்ற களத்தில் நின்று போராடி இரத்தம் சிந்தினார்.
ஆனால், இன்று அவர் பிறிதொரு குற்றத்திற்காக சிறையில் தண்டனை பெற்று வரும் சமயத்தில் ஒரு சிலரைத் தவிர யாரும் அவரைப் போய்ப் பார்க்கவோ, அவருக்காக குரல் கொடுக்கவோ இது வரை முன் வரவில்லை என்பது துயரமான செய்தியாகும்.எனவே, அன்று பாலித்த தேவப்பெரும முன்மாதிரியாக நடந்து கொண்டார். அதே முன்மாதிரியை நாங்களும் பின்பற்ற வேண்டும். இந்த அரசுக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரான பாலித்த தேவப்பெருமவை சிறு குற்றத்திற்காக கைது செய்து சிறையில் அடைக்க முடியுமென்றால்- கடும்போக்குவாதிகள், இலட்சக்கணக்கான மக்களின் முன்னிலையில்,போதுமான சாட்சியங்களுடன் பேருவளை-தர்ஹா நகரில் அரங்கேற்றிய இரட்டைக் கொலைகளுக்கும்,அட்டூழியங்களுக்கும், வன்முறைகளுக்கும் எதிராக ஏன் இன்னும் இந்த அரசுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்பதை இக்கணம் கேட்டுக் கொள்கிறேன்.
இன்று ஜனாதிபதி மைத்திரி அவர்களுடன் இணைந்திருக்கும் முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் அன்றுகளில் மஹிந்த அரசில் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இருந்து கடைசி நேரத்தில் கட்சி தாவியவர்கள் தான் என்பதை எல்லோரும் சிந்திக்க வேண்டும். அன்று சகல அரசியல்வாதிகளும் அழுத்தங்கலின் பேரில் செயற்பட்டதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஆட்சி மாற்றம் எனும் மக்கள் பேரலை, அநீதியை ஒழித்து நீதியை நிலை நாட்ட திரண்டு வந்தது எனும் உண்மையை நாம் அனைவரும் மறக்க கூடாது. ஆகையால், நீதியான நல்லாட்சியில் அநீதி பேசப்பட வேண்டும். இலங்கைத் திரு நாட்டில் இனவாதம் எனும் கொடிய அரக்கனால் இன்னலுற்ற மக்கள் அனைவருக்கும் சுதந்திரமான நீதி கிடைக்க உரியவர்கள் ஆவண செய்வது அவசியமாகும். நாட்டு மக்களின் ஒத்துழைப்பில் ஆட்சி மாற்றம் ஒன்று இடம் பெற்றிருக்கும் இந்த தருணத்தில் குறிப்பாக, முஸ்லிம்களின் சுமார் 95 வீதத்திற்கும் அதிகமான ஆதரவுடன் அதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் இந்த அரசில் பேருவளை-தர்ஹா நகர் மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும்.
கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி மாற்றத்திற்கு முஸ்லிம்கள் மத்தியில் பெரும் பேசு பொருளாக இருந்த பேருவளை-தர்ஹா நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி துரிதமாக வழங்கப்பட வேண்டும். அன்று பேருவளை-தர்ஹா நகரைப் பற்றிப் பேசிப் பேசி அரசியல் செய்தவர்கள் இன்று அதைப் பற்றி பேசுவதில்லை. அன்று வீரவசனங்கள் பேசிய குரல்கள் இன்றைய நல்லாட்சியில் மௌனமாயிருக்கின்றன.
எனவே, இனியாவது தேர்தல்களை இலக்காக கொண்ட அரசியல் மனப்பாங்கில் இருந்து முஸ்லிம் தலைவர்கள் தங்களை விடுவித்து- சமூகத்தின் முன்னேற்றத்திற்கான நீண்ட பயணங்களை கருவாகக் கொண்ட ஆரோக்கியமான அரசியல் நகர்வுகளை முன்னெடுத்தல் அத்தியாவசியமாகும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊடகப் பிரிவு
அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா
இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர்.


0 Comments