(நுஸ்ரத் நவ்பல்)
ஜனாதிபதித் தேர்தலும் முடிந்துவிட்டது, எமது தலைமைகள் எனப்படுவோர் பேரம் பேசுதல் என்ற நிலையில் இருந்துவிட்டு கிடைப்பதெல்லாவற்றையும் கவ்விக்கொள்ளும் நிலையில் வாய் பிளந்து நிற்கின்றனர். வேண்டாம் என்று சொல்லும் அருங்குணம் அறவே கிடையாதவர்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். சன்மார்க்க பற்றே இல்லாதவர்கள் போல் நடந்நுகொள்வது வெட்கத்திலும் வெட்கமே.
அல்லாஹ் நாடியோருக்கே ஆட்சி அதிகாரத்தை கொடுக்கிறன் என நம்ப வேண்டியவர்கள் நாம் தான் ஆட்சியை நிறுவியவர்கள் என தம்பட்டம் அடிக்கின்றனர். மூஸா நபியின் காலத்தில் வாழ்ந்த காரூனைப் பார்த்து மற்றோருக்கும் கொடுத்து வாழ் எனக் கூறப்பட்ட போது 'என்னிடமுள்ள செல்வங்கள் என் முயற்சியாள் பெறப்பட்டது' என பெருமையடித்தவன் இறுதியாக புவியில் சுரிவாங்கப்பட்டான். பெருமையடிப்போர் தன்டணையை அனுபவிக்க வேண்டிவரும்.
அல்லாஹ் நாடியோரிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை பிடுங்கிவிடுவான் என்பது மற்றொரு உண்மையாகும். இதையெல்லாம் மறந்து ஒரு முஸ்லிம் நடக்கலாகாது. இன்று அதிகாரம் செலுத்துபவன் நாளை மற்றொருனாள் அதிகாரம் செலுத்தப்படுவான் என்பதை மறந்து வாழ முடியாது. கிடைத்ததை நன்றியோடு பயன்படுத்த வேண்டும். நாட்டுக்கும் சமூகத்திற்கும் பயனுல்ல வழியில் தனக்குக் கிடைத்ததை பயன்படுத்துபவனே மக்கட் பிரதிநிதியாவான். அவனே மக்கட் சேவகன்.
கடந்த காலங்களில் நிகழ்ந்த தவறுகளை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்யலாகாது. கடந்த ஆட்சியில் இருந்த பலரும் இப்போது குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களுக்கு சேவை செய்ய வருபவர்கள் பல வகையிலும் தமது வரப்பிசாதங்களை விட்டுக்கொடுத்திருக்களாம். நல்லாட்சியொன்றை நிறுவியதாக் கூறிக்கொள்ளும் அரசிலே வீற்றிருக்கும் முஸ்லிம்கள் ஒரு முன்மாதிரியையும் காட்டாதது பெரும் ஏமாற்றமே. நாம் தான் ஜனாதிபதி மைத்தரியை ஆட்சிபீடம் அமர வைத்தோம் என தம்பட்டம் அடிககின்றனர். பார்போம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்வெட்டுகளை ஒரே கட்சியிலாவது எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்குவார்களா ?
தனது அரசியல் சுயலாபத்திற்காக அக்குரனையிலும் கண்டியிலும் பின்னர் கொழும்பிலும் பொய் வாக்குறுதிகளை முஸ்லிம்களுக்கு வழங்கியோரையும் அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி அரேபியாவில் பேரீத்தம் மர தோட்டம் அமைத்தோரையும் மனைவியின் பெயரில் செலிங்கோவில் கோடிக் கணக்கில் கடன் பெற்று ஏழை முஸ்லிம்களின் வயிற்றில் அடித்தவர்களையும் மத்திய அரசியல் நீரோட்டத்தோடு இணையாது பிரதேச வாதத்தை மைய்யப்படுத்துவோரையும் சமூகத்திற்கு பிரயோசனம் தரக்கூடிய திட்டங்களை (தலைவர் அஷ்ரபை போன்று அறிவுபூர்வமாக) முன்வைக்காதோரையும் கொண்டிருப்பது எமது அரசியலின் கறுப்புப் புள்ளிகள் ஆகும்.
ஏங்கே எமது அந்த தலைவர்களின் நிழல்கள்? இன்றும் எமது சமூகம் தலைவர் அஷ்ரப், டீ.பீ ஜாயா, பத்யுதீன் மஹ்மூத் போன்றோரின் நிழல்களுக்காய் ஏங்குகின்றது.
சஜித் பிரேமதாஸவிடமிருந்து எம்மவர்கள் பாடம் படிக்க வேண்டும். நல்லாட்சி ஸ்திரமடையும் வரை தனக்கு அரசிலிலிருந்து எந்த வரப்பிரசாதமும் வேண்டாம் என்று கூறிவிட்ட பெருந்தன்மையை பாருங்கள்.
தமிழரசுக்கட்சி எந்த அமைச்சையும் ஏற்கவில்லை, ஜே.வி.பி. யும் கூட அவ்வாறே ஒன்றையும் எதிர்பார்க்கவுமில்லை. நல்லாட்சிக்கான வழிக்காட்டல்களை காட்டிக்கொண்டே இருக்கின்றனர். பார்ப்போம் எமது தலைமைகளையும்..!!!


0 Comments