இலங்கையில் தேசிய பிரச்சினைகளை தாண்டி ஒன்றுபட்ட இலங்கையினை கட்டி எழுப்பவே தேசிய அரசாங்கத்தை அமைத்தோம், பௌத்த மக்களின் உரிமைகள் போல் தமிழ் மக்களின் உரிமை உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த ஹெல உறுமய உதவுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
கடந்த காலத்தில் நாடு சர்வாதிகாரத்தின் பக்கம் சென்று கொண்டு இருந்தது. ஒரு குடும்பத்தின் கருத்துக்கு மாற்று கருத்து இல்லாது இருந்தது. நாட்டில் யுத்தத்தை வெற்றி கொள்ள வேண்டிய சூழ் நிலையும் இருந்தது.
ஆனால் இன்று பயங்கரவாதம் இல்லை. குழப்பகரமான சூழ்நிலை இல்லை. பிரிவினையை எதிர்பார்த்தவர்கள் பலர் இன்று நல்லாட்சியை விரும்புகின்றனர்.
கிடைத்திருக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி நல்லாட்சியின் பாதையை அமைக்க நாம் தயாராக இருக்கின்றோம்.
சில பிரிவினைவாதிகள் ஒன்றுபட்ட நாட்டினை விரும்பும் போது பௌத்த சிங்களத்தை மதிக்கும் நாம் பிரிவினைவாதத்தினை தோற்றுவிக்கும் வகையில் அல்லது இறுக்கமான போக்கினை கையாள்வது அர்த்தமற்ற செயலாகும்.
எனவே தேசிய அரசாங்கத்தினை பலப்படுத்தும் அதேவேளை அதை கொண்டு செல்ல நாம் அனைவரும் ஒன்றுபட்டு மூவினமும் ஒன்றிணைந்து நல்லாட்சியை நடத்துவதையே பெரும்பான்மை மக்கள் விரும்புகின்றார்கள்.
அதேநேரம் சிங்கள பௌத்த உரிமைகளுக்கு எவ்வித பங்கமும் ஏற்படக்கூடாது. சிங்கள கொள்கைகள் அழிக்கப்படுவதை நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. ஏனைய மக்களின் மத உரிமை ,இன உரிமைகளை அழிக்கக்கூடாது.
தமிழ் முஸ்லிம் மக்களும் சுகந்திரமாக வாழ வேண்டும். வடக்கு, தெற்கு, கிழக்கு மக்கள் சுதந்திரமாக வாழும் ஆட்சி இப்பொழுது மலர்ந்துள்ளது.
இவ்வாறான நிலையில் இனவாதிகளிடம் ஆட்சியை கொடுத்து வேடிக்கை பார்க்க மாட்டோம். அதற்கான சந்தரப்பம் இனி ஒருபோதும் நாட்டில் வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் கூறினார்.


0 Comments