Subscribe Us

முசலிப் பிரதேச மருத்துவர்களே! இது உங்களின் கவனத்திற்கு.



முசலிப் பிரதேசத்தில் இன்று ஏராளமான வைத்தியர்கள் உருவாகி இருக்கிறார்கள்.


சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து மீள்குடியேறிக் கொண்டிருக்கும் முசலி மக்களுக்கு நீங்கள் எப்போது உதவப் போகிறீர்கள்?

எமது பிரதேசத்தில் 15 வைத்தியர்கள் இருக்கிறார்கள் என்று இந்த மக்கள் பெருமைப்பட்டுக் கொள்வதை மட்டுமா நீங்கள் விரும்புகிறீர்கள்?



உயிருடன் இருக்கும் எத்தகைய மனிதருக்கும் வயது போகும், வியாதி வரும், மரணம் வரும். அதற்கு முன்னர் உங்கள் பெருமைத்தனங்களை விட்டு பெருந்தன்மையோடு முசலி மண்ணுக்கு சேவையாற்ற முன்வாருங்கள். உங்களை உடனடியாக வந்து மீள்குடியேறுங்கள் என்று சொல்லவில்லை. அது உங்கள் வசதிப்படி வரலாம். ஆனால் முசலிப் பிரதேச வைத்தியர்கள் எல்லாம் உங்கள் ஈகோவைக் கொஞ்சம் விட்டுக் கொடுத்து ஒன்று சேர்ந்து ஒருவர் மாதத்திற்கு ஒரு நாள் என்று வந்தாலே அங்கு எல்லா நாட்களும் வைத்தியர்கள் இருப்பார்களே! உங்கள் சமுதாயத்திற்காக மாதத்திற்கு ஒரு நாள் உங்களால் திட்டமிட்டு ஒதுக்க முடியாதா?


இந்த சாதாரண மக்கள் பல துன்ப துயரங்களுக்கு மத்தியில் மீள்குடியேறி உங்கள் பிரதேசத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். உங்களது உரிமையையும் சேர்த்து பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். அபிவிருத்தியும் அடிப்படை வசதிகளும் வந்த பிறகு இப்படியான சேவையை நீங்கள் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. அது சேவையாகவும் இருக்காது. அப்போது அது வியாபாரமாகி விடும்.


முசலிப் பிரதேச வைத்தியர்களே!

உங்களுக்குள்ள கடமையைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். நீங்கள் உங்கள் கப்ருக்கும் மறுமைக்கும் தேடிக் கொள்ளுங்கள். இதுவொரு நல்ல சந்தர்ப்பம். சேவை செய்யக் கிடைக்கும் இவ்வரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.



ஒரு வைத்தியர் மாதத்தில் ஒரு நாள் வந்து அம்மக்களுடன் பேசி சிரித்து விட்டு போனாலே அம்மக்களுக்கு தைரியம் பிறக்கும், உள ஆரோக்கியம் கிடைக்கும், மக்கள் மீள்குடியேற முன்வருவார்கள், சந்ததிக்கு சிறந்த முன்மாதிரியை விட்டுச் சென்றதாக இருக்கும். உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும் இறைவனிடம் பிரார்த்தித்திடுவார்கள்.


அங்கு சுத்தமான காற்றையும் துாய்மையான நீரையும் பசுமையான நெல் வயல் காட்சியையும் அனுபவித்துச் செல்லலாம். உங்கள் பிரதேசம் என்ற வகையில் சுதந்திரமாக சுற்றித் திரிந்து விட்டுச் செல்லும் பாக்கியத்தையும் பெறலாம். சிந்தியுங்கள். இன்றே உங்கள் வைத்தியத் தோழர்களுக்கு அழைப்பு விடுத்து இதுகுறித்து பேசத் தயாராகுங்கள். முசலியில் உங்களை வரவேற்க அம்மண்ணின் மைந்தர்கள் காத்திருக்கிறார்கள்.

Mohamed Khan

Post a Comment

0 Comments