Subscribe Us

header ads

ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி என்ற நிலை தொடரக்கூடாது!


புதிய ஆட்சி, மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டிய பாரிய பொறுப்பு புதிய ஆட்சியாளர்களை சார்ந்ததாகும்.

மாறாக, ஏமாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் அது முன்னைய ஆட்சியாளர்களின் செயற்பாடுகளை நியாயப்படுத்த செய்வதுடன் மக்கள் மனதில் மாற்றத்தையும் ஏற்படுத்த வழிவகுப்பதாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

குறிப்பாக, தமிழ் பேசும் மக்கள் புதிய அரசின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் மற்றும் அநாவசிய நெருக்கடிகள் நீங்கி நல்லாட்சி பிறக்கும் என்ற ஒரே எதிர்ப்பார்ப்பே இதற்கான அடிப்படைக் காரணமாகும்.

வடக்கு, கிழக்கு மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் எதனையும் விசேடமாக எதிர்பார்க்கவில்லை. மறுக்கப்பட்ட தமிழர் உரிமைகள், அபகரிக்கப்பட்ட தமது காணிகள், கொள்ளையடிக்கப்பட்ட தமது சொத்துக்கள் என்பவை மீளக்கிடைத்தால் போதும் என்ற ஒரே எதிர்பார்ப்பிலேயே அவர்கள் காணப்படுகின்றனர்.

அது மாத்திரமன்றி, காலாகாலமாக எதுவித விசாரணையுமின்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமது உறவுகள் விடுதலை செய்யப்பட வேண்டும். மற்றும் காணாமல் போன தங்கள் உறவினர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை வெளிச்சத்துக்கு வரவேண்டும் என்ற ஒரே ஏக்கமே அவர்களை ஆக்கிரமித்துள்ளது.

புதிய அரசு தமது 100 நாள் வேலைத்திட்டத்தில் பல்வேறு திட்டங்களை முன்னிலைப்படுத்திய நிலையில் தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்ற உயர்ந்த எதிர்பார்ப்புடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தன்னாலான நல்லெண்ண சமிக்ஞைகளை அவ்வப்போது காட்டி வருவதுடன், அரசின் நடவடிக்கைகளுக்கு எந்தவிதமான குந்தகத்தையும் ஏற்படுத்தாத வகையில் செயற்பட்டும் வருகின்றது.

குறிப்பாக, கடந்த மூன்று தசாப்த காலத்துக்கு மேலாக இலங்கையில் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் தமிழரசுக் கட்சி பங்கேற்காதிருந்த நிலையில் கடந்த 4ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இது கட்சிக்குள்ளும் வெளியிலும் சில விமர்சனங்களை முன்வைத்திருந்த போதிலும், காலத்துக்குகந்த செயற்பாடு என கூறவும் தவறவில்லை. தொடர்ந்து எதிர்ப்பு அரசியலை மேற்கொண்டு எந்தப் பயனையும் காணமுடியாத நிலையில் இணக்க அரசியலை மேற்கொண்டேனும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்ற கருத்து மேலோங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இதனிடையே, புதிய அரசு தனது நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தும் வகையில் வட மாகாண சபைக்கு சிவில் அதிகாரி ஒருவரை ஆளுநராக நியமித்திருந்ததுடன், சர்ச்சைக்குரிய பிரதம செயலாளரையும் இடம் மாற்றியிருந்தது.

இதனை வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வரவேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் பின்னணியில் வடமாகாண சபை எதிர்வரும் காலத்தில் நெருக்கடிகள் அற்ற வகையில் தனது செயற்பாட்டை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த நான்காம் திகதி ஆற்றிய சுதந்திரதின உரையும் பலராலும் பாராட்டப்பட்டதாகும். அவர் தனது ஆழ் மனதிலிருந்து கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார் எனப் பரவலாக விமர்சிக்கப்பட்டது.

ஜனாதிபதி தனதுரையில் 30 வருட கால யுத்தம் நிறைவிற்கு கொண்டுவரப்பட்டு சமாதானம் ஏற்படுத்தப்பட்டு விட்டதாகக் கூறப்படும் போதிலும் வடக்கு, தெற்கு மக்களின் இதயங்களை இணைப்பதற்கான இயலுமை இல்லாமல் போய்விட்டது.

எனவே, வடக்கு மக்களையும் தெற்கு மக்களையும் இணைத்து தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தி மனிதாபிமானமிக்கவர்களின் தேசமாக இலங்கையைக் கட்டியெழுப்பி முன்னோக்கி பயணிக்க வேண்டிய தருணம் இதுவென அவர் தெரிவித்திருந்தார்.

வழமைக்கு மாறாக பாரிய இராணுவ தளபாடங்கள், போர்முரசு கொட்டும் ஆலவட்டங்கள், பாரிய படை பட்டாளங்கள் இன்றி எளிமையான முறையில் கடந்த சுதந்திர தின விழா அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதனை பெரும்பான்மை சிங்கள மக்களுடன் சேர்ந்து தமிழ்ப் பேசும் மக்களும் கொண்டாடினார்கள் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை.

உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அத்திபாரமாக இது அமைந்திருந்தது எனக் கூறலாம். பெரும்பான்மை கடும் போக்காளர்களுக்கும் அவர்கள் சார்ந்த அரசியல்வாதிகளுக்கும் இது கசப்பான விடயமாக இருந்த போதிலும், ஜனநாயகத்தை விரும்பும் பெரும்பான்மை மக்கள் இதனை ஆதரிக்கவே செய்தனர்.

அந்த வகையில், எந்தவொரு விடயமும் வெறுமனே வார்த்தைகளோடு அடங்கி விடாமல் அதனை செயலில் மேற்கொள்ள வேண்டிய தார்மீகப் பொறுப்பு அரசாங்கத்தைச் சார்ந்ததாகும். அதுவே நல்லாட்சிக்கான உறுதியான அத்திபாரமாக அமையும் என்றும் நம்பலாம்.

இதேவேளை, பல்வேறு சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் அவர்களின் பிரச்சினைகளை கண்டறிந்து பரிந்துரை செயற்வதற்காகவும் நல்லிணக்கத்திற்கான விசேட ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட ஜனாதிபதி செயலணி, தடுப்புக் காவலில் உள்ள கைதிகள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கடந்த காலத்தில் யுத்தத்தால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், கஷ்டங்கள் தொடர்பிலும் பல்வேறு பரிந்துரைகளை முன்வைக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும், இவை காலதாமதமானாலோ அன்றேல் இழுத்தடிக்கப்படுமானாலோ மக்களின் நம்பிக்கை புஸ்வாணமாகிவிடும் என்பதே யதார்த்தமாகும். புதிய அரசின் ஒருசில நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் ஒருவித கிலேசத்தை ஏற்படுத்தி வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக ஓமந்தை சோதனைச் சாவடியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டிருந்த சோதனை நடவடிக்கைகளையடுத்து தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டு தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், நிம்மதிப் பெருமூச்சும் விட்டனர். எனினும் துரதிஷ்டவசமாக கடந்த புதன்கிழமை முதல் மீண்டும் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு அமைச்சிலிருந்து கிடைக்கப்பெற்ற திடீர் உத்தரவே இதற்கு காரணமெனவும் கூறப்படுகின்றது. இது தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித அதிருப்தியை தோற்றுவித்துள்ளதுடன் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிடுமோ என்ற அச்ச உணர்வையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்தவிதமான போக்குகள் தமிழ் மக்கள் மத்தியில் உருவாகி வரும் நல்லெண்ணத்தை சிதறடித்துவிடும் ஒன்றாக மாறிவிடும் என்பதையும் ஆட்சியாளர்கள் மறந்துபோகக் கூடாது.

இதுவரை காலம் மாறி மாறிப் பதவிக்கு வந்த அரசுகள் தமிழ் பேசும் மக்களை ஆறுகடக்கும் வரை அண்ணன் தம்பி பின்னர் நீ யாரோ நான் யாரோ என்ற நிலையில் நடத்தி வந்தன. அந்த நிலைமை இந்த ஆட்சியில் ஏற்படக்கூடாது என்ற நம்பிக்கை தமிழ் மக்கள் மத்தியில் உருவாவது அவசியமாகும்.

அதற்கு அரசியலுக்கு அப்பால் மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றிற்குத் தீர்வை முன்வைக்க வேண்டிய பாரிய பொறுப்பு புதிய ஆட்சியாளர்களைச் சார்ந்ததாகும்.

Post a Comment

0 Comments