நேற்று (18.02.2015) நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்துக்கு வருகை தந்த மக்கள் தொகை குறித்து பாரிய கருத்தாடல்களும் கலந்துரையாடல்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அக் கூட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான விமல் வீரவங்ச 5 இலட்சத்தை விட அதிக மக்கள் சமுகமளித்ததாகக் கூறுகின்றார். அவருடைய கணித அறிவையும் அக் கூட்டம் நடைபெற்ற இடத்தின் சுற்றளவையும் கவனத்திற்கொண்டு அந்தளவு கூட்டம் ஒன்றுகூடுவதற்கு வாய்ப்பில்லை என்று அறிஞர்கள் கூட முகநூல் உட்பட சமூக ஊடகங்களில் கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். இது ஒருபுறமிருக்கட்டும்.
இக் கூட்டத்திற்கு வருகைதந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சமா, 50,000 அல்லது 5,000? என்ற புள்ளிவிவரங்களைத் திரட்டுவதற்கு அடிப்படையாக அமைந்திருப்பது, அக் கூட்டத்தின் முக்கிய நோக்கமான மஹிந்த ராஜபக்ஷவின் 58 இலட்சம் (வாக்களித்தவர்கள்) மக்கள் அலையை மீண்டும் காட்சிப்படுத்துவதை விட, ஆசாத் சாலியின் சவாலுக்கு பதிலுரைப்பதாக அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது.
உண்மையைக் கூறுவதாயின், ஆசால் சாலியின் ‘முடிந்தால் 5,000 பேரை ஒன்றுகூட்டுங்கள்’ என்ற சவால், நுகேகொட கூட்டத்திற்கு புத்துயிர் ஊட்டியது என்றால் மிகையன்று. அதாவது, சிறுபான்மையினராகிய ஆசாத் சாலி, 50 இலட்சத்தை விட அதிகமான பெரும்பான்மை சிங்கள வாக்குகளைப் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வருவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியொன்றுக்கு எதிராக விடுத்த சவாலானது, பொரும்பான்மை சிங்களவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சவாலாக மாற்றம் பெற்றுள்ளது.
அது சிங்கள-பௌத்த பெரும்பான்மை மக்கள் வாழும் இலங்கையில் அரசியல் அதிகாரத்திற்கு எதிரான சிறுபான்மையின் சவாலாக வளர்ச்சியடையும்போது, பெரும்பான்மையின் பலத்தைக் காட்டுவதற்கான தொகை பற்றிய கருத்தாடல்களில் ஆரம்பித்து, பின் கலவரங்கள் வரை வளர்ந்து, இறுதியில் இன அழிப்பு யுத்தம் வரை கூர்மையடைவதை கடந்தகால அரசியல் வரலாற்றில் கண்டுள்ளோம்.
இதன் சிக்கல்தன்மை என்னவென்றால், பொது பல சேனா உட்பட சிங்கள இனவாத கல்விமான்களும் முன்னைய இடதுசாரிகளான விமல், வாசுதேவ போன்றோரும் கலந்துகொண்ட கூட்டமொன்றை பெரும்பான்மை சிங்கள இனவாதிகளின் பலத்தைக் காட்டுவதாகவோ அல்லது சிறுபான்மையின் சவாலுக்கு எதிராக பொரும்பான்மையின் பலம் விருத்தியடைதல் என்ற அளவுடனோ சுருக்கப்படுவதை விட, பெரும்பான்மை–சிறுபான்மை என இலங்கை மக்களை வேறுபடுத்துவதற்காக உபயோகிக்கப்படுவதாகும்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வியை அவரும் அவருடைய ஆதரவாளர்களும் சிங்கள-பௌத்த பெரும்பான்மை மக்களின் தோல்வியாக காட்டி வருவதுடன் மைதிரீபால சிரிசேனவின் வெற்றியை நாட்டின் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றவரின் வெற்றியாக அல்லாமல் சிறுபான்மையினரின் வாக்குகளினால் பெற்ற வெற்றியாகவும் பிரித்துக் காட்டப்பட்டது.
இவ்வாறான சிறுபான்மை-பெரும்பான்மை வகைப்படுத்தலை இலங்கை மக்கள் மத்தியில் உருவாக்கியவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்பதை கவனிக்கும்போது, பிரித்தானியர் இந் நாட்டைக் கைப்பற்றும்போது கூட இலங்கையர் சிறுபான்மை-பெரும்பான்மை என பிரிந்து நிற்கவில்லை என்பதுடன், இலங்கையின் கடைசி மன்னன் கூட அவ்வாறான சிறுபான்மை-பெரும்பான்மை வேறுபாட்டைக்கொண்டிருக்கவில ்லை என்பதும் தெரியவருகின்றது. எனவே இன ரீதியான பாகுபாடும், வேறுபடுத்தலும் பிரித்தானியாவின் பிரித்தாளும் கொள்கை என்பது தெளிவு.
ஐரோப்பிய அறிஞர்கள் (கீழைத்தேயவாதிகள்) எனக் கூறிக்கொள்வோர் சுதேச மக்களை இன, சமய, கலாசார, மொழி ரீதியான வேறுபடுத்தல்களுக்கு உட்படுத்தினார்கள். இவற்றைக் கற்ற சுதேச கல்விமான்களும் அவ் வகைப்படுத்தல்களைத் தொடர்ந்தார்கள். கீழைத்தேயவாதிகளின் கல்விப் பின்னணி இல்லாமல் இருந்திருப்பின் உள்நாட்டவர், வெளிநாட்டவர் என்றோ நிரந்தர குடியிருப்பாளர் தற்காலிகமாக வசிப்பவர் என்ற அளவிலோ இவ் வகைப்படுத்தல் அமைந்திருக்கலாம்.
இப் பின்னணியில், இலங்கை மக்கள் தம்மை இன ரீதியாக வேறுபடுத்தி சிந்திக்கும் தன்மை இல்லாமல் இருந்திருந்தால், மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வியை நில பிரபுத்துவ கொடூர வர்க்கத்தின் தோல்வியாகவும், மைதிரீபால சிரிசேனாவின் வெற்றியை நசுக்கப்பட்ட மக்களின் வெற்றியாகவும் கருதியிருப்பார்கள்.
அப்போது ஆசாத் சாலிகளும் விமல் வீரவங்சைகளும் நுகேகொடை கூட்டத்தில் ஓரங்கட்டப்பட்டிருப்பார்கள் , அவ்வாறான கூட்டங்களுக்கு வந்துபோனவர்களின் தலைகளை எவரும் எண்ணிக்கொண்டிருக்கவும் மாட்டார்கள்.
மாக்ச் பிரியந்த பெரெரா (சமூக ஊடகவியலாளர்)
‘சமபிம’ சிங்கள இணையம் 19.02.2015
-The Puttalam Times-


0 Comments