யானைத் தந்தங்களை இறக்குமதி செய்வதற்கு சீனா ஒரு ஆண்டிற்குத் தடை விதித்திருக்கிறது. சீனச் சந்தையில் யானைத் தந்தங்களுக்கு இருக்கும் தேவையின் காரணமாக ஆப்பிரிக்காவில் அவை கொல்லப்படுவதாக எழுந்திருக்கும் விமர்சனங்களுக்கு மத்தியில் சீனா இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்த முடிவை அறிவித்திருக்கும் வன நிர்வாகத் துறை காட்டு யானைகள் கொல்லப்படுவதில் இது முதல்படியாக அமையும் எனத் தெரிவித்துள்ளது.
இன்னும் சில வருடங்களில் ஆப்பிரிக்காவில் இருக்கும் யானைகள் முழுவதுமாக அழித்தொழிக்கப்பட்டுவிடலாம் என வன ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
உலகில் அதிக அளவு தந்தங்களை சீனாதான் இறக்குமதி செய்கிறது.
சட்டவிரோத தந்த வர்த்தகத்தைத் தடைசெய்வதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியருப்பதாக அந்நாட்டு அரசு கூறிவருகிறது. சீனாவில் வசதியானவர்கள் அதிகரித்துவரும் நிலையில், தந்தத்திற்காக கிராக்கியும் அதிகரித்துவருகிறது.
தந்த இறக்குமதிக்குத் தற்போது விதிக்கப்பட்டிருக்கும் தற்காலிகத் தடை, ஆப்பிரிக்கத் தந்தங்களுக்கு இருக்கும் கிராக்கியைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தந்த விற்பனை 1989ஆம் ஆண்டிலேயே தடைசெய்யப்பட்டிருக்கிறது. இருந்தபோதும், உள்நாட்டிற்குள் தந்த விற்பனை செயவதற்கு சீனா அனுமதி அளிக்கிறது. அங்கே, சுமார் 150 கடைகள் உரிமம் பெற்று இயங்கிவருகின்றன.
ஆறு வருடங்களுக்கு முன்பாக, 60 டன்னுக்கு மேல் எடை கொண்ட தந்தங்களை இறக்குமதி செய்ய சீனா இறக்குமதி அளித்தது.
இதன் காரணமாக தேவை அதிகரித்தது என்றும், கள்ளச் சந்தையின் விற்பனைக்கு இது வழிவகுத்தது என்றும் சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆசியச் சந்தைகளுக்காக கிரிமினல் குழுக்கள் யானைகளைக் கொல்ல ஆரம்பித்தனர் என்கிறார்கள் அவர்கள்.


0 Comments