Subscribe Us

header ads

தெருவோர (பேமன்ட்) வியாபாரிகளை நடுத்தெருவில் மூழ்கடிக்குமா 'மிதக்கும் சந்தை



இதனை நிருமாணித்த ஆரம்ப காலத்தில் ஊடகவியலாளர்கள் வந்து கேட்டால் இதன் நன்மைகளை மட்டும் சொல்ல வேண்டும் என்று கட்டளையிடப்பட்டது. நாங்களும் முன்னேற்றமடையும் என்ற நம்பிக்கையில் இதன் நலன்களை மட்டும் கூறினோம். ஊடகவியலாளர்களும் இதன் சிறப்புக்களையும் பெருமையையும் அழகு எழிலையும் வழிவழியாக எழுதி குவித்தார்கள். 


இன்றும் அவர்கள் வருகின்றார்கள், முடிவில்லாத வினாக்களைத் தொடுக்கின்றார்கள், ‘பிஸ்னச் நடப்பதில்லையா?’, ‘கைநஷ்டமாகிப் போகுதா?’, ‘இது பெரிய அநியாயம் என்ன?’ இந்த வினாக்கள், ஆரம்பிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் நிலைமை தலைகீழாகிப்போன ‘மிதக்கும் சந்தை’ மூழ்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதற்கான குறிகாட்டிகளாகும். 

கொழும்பு நகர மத்தியில் நடைபெற்றுக்கொண்டிருந்த தெருவோர (பேமன்ட்) வியாபாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, தலைநகரை அழகுபடுத்துவதாகக் கூறிக்கொண்டு, பேரே வாவியின் கரையில் அடைக்கப்பட்ட வியாபாரிகள் இக் கடைகளுக்குச் செலுத்த வேண்டிய வாடகையைக் கூட தேடிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.

இன்று நடைபெறும் அழிவை ஆரம்ப நாட்களில் புரிந்துகொண்ட ஒருசில வர்த்தகர்கள் தமது கடைகளை மூடிவிட்டனர். மீதமானவர்கள் தமது எதிர்கால கனவுகள் பேரே குளத்து நீரில் கரைவதைக் கண்டும் கரையேற வழியறியாது தவிக்கின்றனர். அதிகமான கடைகள் வெறுமையாகக் காட்சியளிக்கின்றன.

‘நாங்க பேமன்டில் இருக்கும்போது ஒரு நாளைக்கு ஆகக் குறைந்தது 25,000 – 30,000 சம்பாதிப்போம். மூன்று நான்கு சேல்ஸ்மேன்கள் இருந்தாங்க. இன்று நான் மட்டும் தனியாக கடையை நடத்துகிறேன். இன்று முழு நாளைக்கும் மூன்று பிடவைகள்தான் விற்றேன். இந்த நிலையில் தொழிலாளர்களை வைத்து சம்பளம்கொடுக்க முடியுமா?’ ஒரு வியாபாரி தன் கசப்பான அனுபவத்தைக் கூறுகின்றார். ஏனையோரின் கதைகளும் அதுதான்.

புறக்கோட்டை ஓல்கட் மாவத்தையிலும் பஸ்டியன் வீதியிலும் தெருவோர கடைகளை நடத்தியவர்களுக்கு அதிசொகுசு வாழ்க்கையை வழங்குவதாகக் கூறிக்கொண்டு நகர அபிவிருத்தி அதிகாரச் சபை இந்த ‘மிதக்கும் சந்தை’யை நிருமாணித்தது. மேற்குறித்த இடங்களில் இருந்த கடைகளை பலவந்தமாக இடித்துவிட்டு நடுத்தெருவில் நின்ற வர்த்தகர்களுக்கான ஒரேயொரு மாற்றீடாக மிதக்கும் சந்தையைக் காட்டியது. செல்வதற்கு வேறு வழியறியாத; சொல்வதற்கு வேறு ஆள் அறியாத இவ் வர்த்தகர்கள் மிதக்கும் சந்தையில் வந்தேறினார்கள். இன்று இது இவர்களுக்கு சத்திரம் அன்றி வேறில்லை.

‘நான் முப்பது வருடங்களாக பேமன்டுல பிசினச் செய்தவன். லைட் பில், தண்ணீர் பில் எதுவும் இல்லை. இப்போது இருக்கும் கடையின் அளவு 10 க்கு 10 அடி. மாத வாடகை 7,000/=. இதுபோக லைட் பில், தண்ணீர் பில் செலுத்தனும். இன்று பிசினச் செய்வது ஒரு யுத்தமாக மாறிவிட்டது. அன்றாடம் உழைப்பது கூட கஸ்டமாகிட்டு. எங்களை அநாதைகளாக்கி விட்டார்கள்’ கவலை தோய்ந்த குரலில் பேசினார் ஒரு வர்த்தகர்.

மிதக்கும் சந்தையின் ஆயுட்காலம் இன்னும் ஆறு மாதம் கூட நீடிக்கவில்லை. இந்த காலத்திற்குள் இதில் எடுப்பதற்கு எதுவும் இல்லை என்னும் அளவுக்கு நொந்துபோயுள்ளது. 

மிதக்கும் சந்தைக்கு அடிக்கடி வந்துபோகும் ஒரு பிரிவினர் உள்ளனர். அவர்கள்தாம் ‘சோடிகள்’. சோடிகளின் வருகையினால் ஹோட்டல்கள் இரண்டில் வியாபாரமொன்று நடைபெறுகின்றது. இந்த சோடிகளும் ஏதாவது வாங்க வேண்டும் என்பதற்காக ‘அச்சாறு’ வாங்கி, கையில்வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருப்பார்கள். ஆரம்ப நாட்களில் ஒரேயொரு ‘அச்சாறு’ கடைதான் இருந்தது. இன்று பத்து பேர்வரை அச்சாறு விற்கின்றார்கள். 

உண்மைதான். மிதக்கும் சந்தை முழுவதும் அச்சாறாகக் காட்சியளிக்கின்றது. தெருவோர வியாபாரிகளின் வாழ்க்கையில் மிதக்கும் சந்தையைப் பலவந்தமாக திணித்தவர்கள் அனைத்தையும் அச்சாறாக்கியுள்ளார்கள்.

மூலக் கட்டுரை: 'ராவய' (சிங்களம்) 08.02.2015

நன்றி - The Puttalam Times -

Post a Comment

0 Comments