-எஸ்.ஆப்தீன்-
இன்று நாட்டின் ஜனாதிபதியும் அமைச்சர்களும் சில பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் மற்றும் நகர, பிரதேச சபை உறுப்பினர்களும் மேலும் இந்நாட்டில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற சில சிவிலமைப்புக்கள், மத அமைப்புக்கள் மற்றும் கணிசமான குடி மக்கள் நல்லாட்சி நாட்டில் மலர்வதற்;காக, அதன் அவசியத்தை உணர்ந்து, பல்வேறு வழிகளில் சிந்தித்து, திட்டமிட்டு செயலாற்றிக் கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது. இது உண்மையில் பாராட்டப்படவேண்டியதும் சகலராலும் ஊக்குவிக்கப்படவேண்டியதுமான அம்சமாகும்.
அந்தவகையில், தற்போதைய அரசாங்கத்தின் பங்காளிகளாகவும் எதிரணியில் இருக்கின்றதுமான முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற முஸ்லிம் கட்சிகள், இந்நாடு கடந்த காலத்தில் எதிர்பார்த்ததும் தற்போது வேண்டி நிற்கின்றதுமான நல்லாட்சி கொள்கையினை எல்லோரையும் விட முதன்மையாக முன்வைத்திருக்க வேண்டும். ஆனால், அவைகள் யாவும் இவ்விடயத்தில் முன்னோடிகளாக செயற்படவில்லை என்பது ஒரு கவலையான விடயமாகும். இந்தக் கட்டுரையானது நல்லாட்சியை இந்நாட்டுக்கு முன்வைப்பதில் முன்னிற்காத முஸ்லிம் கட்சிகளை வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் அவர்கள் தங்களது கட்சிக் கொள்ளைகளை இனியாவது நல்லாட்சிப் பண்புகள் பொதிந்த கையில் மறுசீரமைத்து, அவர்களை ஆதரிக்கின்ற தொண்டர்களையும் பணியாளர்களையும் மக்களையும் வழிப்படுத்த வேண்டும் என்ற நன்னோக்கிலும் எழுதப்படுகின்றது.
அந்தவகையில், பின்வரும் அம்சங்களை அவர்கள் கவனத்திற் கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. *கொள்கை வறுமை*: தனது கட்சியை வளர்ப்பதற்காக வேண்டியும் அதற்கான மக்கள் ஆதரவினை திரட்டுவதற்காக வேண்டியும் எதையும் செய்கின்ற, கொள்கையே இல்லாத முஸ்லிம் கட்சிகள் நம்மத்தியில் உள்ளன. இவர்கள் கட்சியை உருவாக்கும் போது சிறந்த கொள்கையை மக்களைக் கவருவதற்காக வேண்டி எழுத்துருவில் வைப்பார்கள் அல்லது பேசுவார்கள். ஆனால், நடைமுறையில் கொள்கையிழந்தவர்களாகக் காணப்படுவர். தனது கட்சிக்கென சிறந்த காடையர்களையும் அடிதடி விர்ப்பன்னர்களையும் போதைப்பெருங்குடி போதையர்களையும் தேர்ந்தெடுத்து வளர்த்து வருவதிலும் அவர்களை எதிரணியினர்கள் மீது தூண்டிவிடுவதிலும் நமது முஸ்லிம் கட்சிகள் விர்ப்பன்னர்கள். அதில் ஒத்த கொள்கையை உடையவர்கள்.
மேலும், பாராளுமன்றத்தில் சட்டங்கள் நிiவேற்றப்படுகின்ற போது, ஆளுந்தரப்பிலிருந்தாலும் எதிர்த் தரப்பிலிருந்தாலும் தனது கட்சியினதும் தான் சார்ந்துள்ள சமூகத்தினதும் இந்நாட்டினதும் தமது மார்க்கமான இஸ்லாத்தினதும் கொள்கைக்கும் நலனுக்கும் முரணில்லாத விதத்தில் தெளிவான குறிக்கோளுடன் செயற்பட்டு ஆதரிக்கவோ, எதிர்க்கவோ வேண்டும். அதற்கான காரணத்தை தெளிவாக இந்நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்தல் வேண்டும். ஆனால், தான்சார்ந்துள்ள அரசினை திருப்திப்படுத்துவதை மாத்திரம் நோக்காகக் கொண்டு அவர்கள் கொண்டு வரும் எவ்விதமான சட்டங்களாக இருந்தாலும் அது எவ்விதமான பாதிப்பை ஏற்படுத்துவதாக இருந்தாலும் அதற்கு ஆதரவளிக்கின்ற அல்லது வாக்களிக்காது மௌனம் காக்கின்ற மிக மோசமான முகஸ்த்துதி நிலைப்பாட்டைத்தான் இன்றைய முஸ்லிம் கட்சிகள் கடைப்பிடித்து வருகின்றன. எடுத்துக்காட்டாக கடந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட கெஸினோ சட்ட மூலம் விடயத்தில் நமது முஸ்லிம் கட்சிகளும் அதன் தலைமைகளும் கடைப்பிடித்த தீர்மானம் நாடும் நாமுமறிந்ததே.
அத்தோடு, இன்று எந்தவொரு முஸ்லிம் கட்சியும் இந்நாட்டிலுள்ள சகல மக்களையும் அரவனைத்து அவர்களது நலனில் பொதுவாக அக்கரை செலுத்துகின்ற நிலையில் இல்லை. இதனால், முஸ்லிமல்லாத மக்கள் இக்கட்சிகளை சந்தேகக் கண்கொண்டு நோக்கிவருவதனையே காணமுடிகின்றது. அத்தோடு, சிங்கள இனவாதக் கட்சிகள் இனவாதத்தைத் தூண்டி வளர்வதற்கும் காரணமாக அமைந்துள்ளது. இது ஆபத்தான நிலைமையாகும். ஆனால், இந்நாட்டிலுள்ள சகல கட்சிகளுக்கும் முன்னோடியான கொள்கைகளை முன்வைத்து, சகல மக்களுக்காகவும் பேசக் கூடிய அவர்களுக்காக உதவக்கூடிய சமூக நலனுக்கு முன்னோடியாகத் திகழக்கூடிய, இந்நாட்டின் எழுச்சிக்காக அர்ப்பனத்துடன் செயற்படும் நடுநிலைப் போக்குடைய முஸ்லிமுக்கும் முஸ்லிம் கட்சிக்கும் சான்று பகரக் கூடிய முன்னுதாரணமான முஸ்லிம் கட்சியை நமது சமூகமும் இந்நாடும் எதிர்பார்த்து நிற்கின்றது.
ஒரு பொது மகன் அல்லது ஒரு கட்சியானது தான் விரும்புகின்ற விதத்தில் தனது கருத்தினை தனது எதிர்பார்ப்பினை வெளிப்படுத்துவதற்கும் முன்வைப்பதற்கும் உரிமையுண்டு. இவ்விடயத்தை தடுப்பதற்கோ அல்லது அவர்களது கருத்துக்களை பிரச்சாரம் செய்வதை தடுப்பதற்கோ எவருக்கும் உரிமை கிடையாது. இந்தவிடயத்தில் நமது முஸ்லிம் கட்சிகள் தவறிழைப்பவர்களாக உள்ளனர். அந்தவகையில், தனக்கு எதிரான ஒரு அணி தனது ஆதரவாளர்கள் இருக்கின்ற கோட்டைக்குள் வந்து பிரச்சாரம் செய்யவும் முடியாது அவர்களது நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது. அவ்வாறு மேற்கொண்டால் தனது ஊழல்களும் தவறுகளும் மக்கள் மயப்பட்டுவிடுமோ அல்லது தனக்கான ஆதரவுத் தளத்தில் குறை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சப்பாட்டில் எதிரணியினர்கள் மீது தனது கட்சியிலிருக்கின்ற குண்டர்களை ஏவிவிட்டு அட்டகாசம் புரிகின்ற அநாகரீகத்தை கடைப்பிடிக்கின்ற முஸ்லிம் கட்சிகளே நம்மத்தியிலுள்ளது.
அடுத்து, ஒரு அங்கத்தவர் அக்கட்சிக்குள்ளிருக்கின்ற உயர்மட்ட உறுப்பினர்கள் அல்லது தலைவர் விடுகின்ற தவறுகளைப்பற்றி சுட்டிக்காட்டிப் பேசவோ, விமர்சனம் செய்யவோ முடியாத நிலைக்கு கட்சிக்குள் உட்கட்சி ஜனனாயகம் கேள்விக்குறியான நிலையிலேயே காணப்படுகின்றது. அவ்வாறு ஒரு அங்கத்தவர் செயற்படுவாரானால், அவரை கட்சியிலிருந்து பயன்பெறுவதற்கு தடைவிதிக்கப்படுவதுடன் அக்கட்சியை விட்டு விலக்கி விடுவதற்கும் முயற்சிகள் இடம்பெறுவதனைக் காண முடியும். தனது கட்சியின் சகல நடவடிக்கைகளும் நகர்வுகளும் தனது கட்சியிலுள்ளவர்கள் யாவரும் அறிந்திருக்கின்ற விதத்தில் முன்னெடுக்கப்படல் வேண்டும். இங்கு மிக முக்கியமாக கட்சிக்கு நிதி கிடைக்கின்ற வழிமுறைகள், அதைச் செலவு செய்கின்ற முறைமைகள், தனது கட்சிக்கு கிடைக்கின்ற அபிவிருத்தி திட்டங்கள் அதனை அமுல்படுத்துகின்ற விதம் மற்றும் தனது கட்சிக்கு கிடைக்கின்ற நியமனங்கள் அதற்காக ஆட்சேர்க்கின்ற முறைமைகள் என்பன யாவும் வெளிப்படைத் தன்மைகளுடன் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
ஆனால், நமது முஸ்லிம் கட்சிகள் இவ்விடயத்தில் ஒழிவு மறைவான தன்மைகளையே கடைப்பிடிக்கின்றனர். அதாவது, தனது கட்சிக்கு எங்கிருந்து நிதி எவ்வளவு வருகின்றது என்பதும் அது எவ்வாறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு செலவு செய்யப்படுகின்றன என்பதும் வெளிப்படுத்தப்படுவதில்லை. அதேபோன்று, தனது கட்சியினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் திட்டமிடல், அமுலாக்கம் செய்தல் மற்றும் அதனை கண்காணித்தல் ஆகிய கட்டங்களில் தங்களை நெருங்கியவர்களின் கருத்துக்களே உள்வாங்கப்படுகின்றது. ஆனால், தனது கட்சிக்கு வாக்களித்த சாதாரன பொது மகனின் பங்கேற்ப்பினை பெறுவதற்கான எவ்வித முயற்சியும் உத்திகளும் இவர்களால் கணக்கிலெடுக்கப்படுவதில்லை. அதுமாத்திரமன்றி, தமது கட்சியினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்திகளை திட்டமிடுகின்ற போது, தனக்கு வசதியான முறைமையில் உத்தேச கருத்திட்டங்களை போட்டு நிதி ஒதுக்கீடுகளைப் பெற்று, கொந்தராத்து வியாபாரிகளுக்கு கொடுத்து கொமிஷன் பெறுகின்ற கைங்கரியங்களே இடம்பெறுகின்றன. இதனை எவரும் மறுக்க முடியாது. இது ஒரு வகையில் ஊழல் மோசடியாகும். இதனால், எந்தளவு அந்த அபிவிருத்தி திட்டம் வினைத்திறனான முறையிலும் மக்கள் பயன்படுத்தக் கூடிய விதத்திலும் அமையும் என்பது கேள்விக்குறியான விடமாக மாறியுள்ளது.
அதுமாத்திரமன்றி, ஒரு கட்சி அரசாங்க செல்வாக்கு நிலையில் இருக்கின்ற போது தனது கட்சியினால் வழங்கப்பட முடியுமான நியமனங்கள் விடயத்தில் கூட இவர்களால் முறையற்ற முறைமைகளே பின்பற்றப்படுகின்றன. அதாவது, தனக்கு விசுவாசமான, தனது குடும்பத்தைச் சார்ந்த, தனது கட்சிக்காக களத்தில் இறங்கி பாடுபட்ட, போஸ்டர்கள் ஒட்டிய, கொடி கட்டிய, அடிதடியில் இறங்கிய நபர்களை தெரிவு நிபந்தனைகளாக எடுத்து அவர்களை அரச நியமனங்களில் அமர்த்துகின்ற அநியாயங்களையும் நமது முஸ்லிம் கட்சிகள் நியமன வழங்கற் கலாச்சாரமாக பின்பற்றி வருகின்றனர். இவ்வாறான நடவடிக்கைகளால் எவ்வாறு நமது நாட்டிலுள்ள அரச நிறுவனங்கள் சிறப்பாக இயங்கும்? வினைத்திறனான சேவைகளை வழங்கும்? இதனால், நமது நாடு முன்னேற்றம் பெறுமா? என்பதனைப் பற்றி மக்கள் சிந்திக்க வேண்டும்.
ஒரு முஸ்லிம் அரசியல்வாதி தனக்கு கிடைக்கின்ற நியமனக் கோட்டாக்களை தனது பிரதேசத்தவர்களுக்கு வழங்குகின்றபோது, ஒரு முறையான தெரிவு நிபந்தனைகளை மக்கள் மத்தியில் வெளிப்படையாக முன்வைத்து, தனது பிரதேசத்திலுள்ள தகுதியானவர்களை உள்வாங்கி அவர்களுக்கு அந்த நியமனங்களை வழங்குகின்ற வேலையை செய்வாரா? என்பது குதிரைக் கொம்பாகவே காணப்படும். இங்கு மிகமுக்கியமாக ஒரு விடயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். அதாவது, ஒரு விடயத்தில் தீர்மானம் எடுக்கப்படுவதில் கூட வெளிப்படைத் தன்மையில்லாத நிலையே காணப்பட்டுவருகின்றது. அதாவது, கட்சியை வழிநடத்துகின்ற முஸ்லிம் தலைவர்கள் தங்களது கட்சியானது கலந்துரையாடல் அடிப்படையில் முடிவெடுத்து செயற்படுகின்றது எனக் கூறினாலும், மிக முக்கியமான விடயங்களில் கட்சியின் நிலைப்பாடு தொடர்பான தீர்மானங்களை முடிவாக எடுக்க முனையும்போது, எவருக்கும் தெரியாமல் கள்ளத்தனமாக தீர்மானங்களை எடுப்பதனை இன்று காணமுடியும். அதுமாத்திரமன்றி, எடுத்த தீர்மானம் தொடர்பான நியாயங்களை அங்கத்தவர்கள் மத்தியில் முன்வைத்து அவர்களைத் திருப்திப்படுத்த முடியாத இயலாமையையும் இன்று காண முடியும். இவ்வாறான கட்சியின் தலைவர்கள் சுயநலமிக்கவர்கள். இவர்களது ஒவ்வொரு நகர்விலும் தனது நலனையோ அல்லது தனக்கு விசுவாசமானவர்களது நலனையோ முன்னிலைப்படுத்தி செயற்படுகின்ற உள்நோக்கம் இருக்கும். இது ஆரோக்கியமான நிலையல்ல, ஆனால் ஆபத்தான நிலைமையாகும்.
கட்சி வேண்டி நிற்கின்ற நபர்களை நிருவாகிகளாக தெரிவுசெய்கின்ற விடயத்தில் கூட அங்கத்தவர்கள் தாங்கள் விரும்பியவாறு செயற்படுவதற்கு விடப்படுவதில்லை. கட்சிக்கான நிருவாகத் தேர்வின் பின்னர், பதவிக்கு வந்ததும் தன்னை ஆதரித்தவர்கள், எதிர்த்தவர்கள் என்ற பாகுபாட்டின் அடிப்படையில் கட்சித் தலைமையும் ஏனைய பதவி நிலை உத்தியோகத்தர்களும் அவர்களது பதவிக் காலத்தினுள் செயற்படுவதனைக் காணமுடியும். அதுமாத்திரமன்றி, கட்சிக்கான நிருவாகத் தேர்வில் அல்லது கட்சிசார் பதவி நிலைகளின் போது அல்லது தேர்தலுக்காக வேட்பாளர்களை நியமிக்கும் போது பணம், வசதிவாய்ப்புக்கள், தலைமைக்கான விசுவாசம் மற்றும் குடும்பவுறவு போன்ற தகுதிக்கான வரையறைகளே கவனத்திற் கொள்ளப்படுகின்றன. மாறாக, தனது கட்சி நியமிக்கப் போகின்ற நபரிடம் உள்ள அறிவு, திறன், ஆற்றல், ஆளுமை, சாதிக்கும் திறன், சோரம் போகாத தன்மை, இறையுணர்வு, பொறுப்புக்களை வகிக்கும் ஆற்றலும் பொறுப்புக் கூறக்கூடிய இயலுமையும் மற்றும் துறைசார் நிபுணத்துவம் போன்ற தகுதி நிலைகள் கணக்கிலெடுக்கப்படுவதில்லை என்றே சொல்ல வேண்டும். இது நமது சமூகம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அம்சமாகும்.
அத்துடன், ஒரு தேர்தலில் தம்மை ஆதரித்த மக்களை கவனிப்பது என்பது இன்றிமையாததொரு அம்சமாகும். ஆனால், தன்னை நிராகரித்த மக்களை (இங்கு சீசன் அரசியல் செய்வதற்காக தனது சுயநலனை மாத்திரம் கவனத்திற்கொண்டு அடிக்கடி கட்சி மாறும் அரசியல் வேசதாரிகளும் கண்மூடித்தனமான குருட்டு நியாயங்களை முன்வைக்கும் தலைமைகளைப் பின்பற்றுகின்ற அரசியல் அறிவு போதாத பாமர மக்களும் விதிவிலக்கானவர்கள்) எவ்வாறு கவரலாம்? ஏன் அவர்கள் தம்மை நிராகரித்தார்கள்? அதிலுள்ள நியாயங்கள் என்ன? அதற்காக நமது கட்சி விட்ட தவறு என்ன? என்பது தொடர்பாக ஆய்வு செய்யாமல், அவர்களை அப்படியே பலிவாங்கல் செய்கின்ற மோசமான கலாச்சாரம் முஸ்லிம் கட்சிகளிடம் உள்ளன. இவ்வாறான கட்சிகள் எப்படி நல்லாட்சிக்கு உதவ முடியும். ஒரு முஸ்லிம் கட்சியானது அரசாங்கத்தின் ஆதரவினைப் பெற்று அரசில் அங்கம் வகிக்க முனையும்போது, அதற்கு அமைச்சுப்பதவிகளும் பொறுப்புள்ள பதவிகளும் கிடைப்பது யதார்த்தமாகும். இது இறைவனால் தரப்பட்ட ஒரு அமானிதம், இது தன்னையும் தனது நிலைப்பாட்டினையும் சோதிப்பதற்காக தரப்பட்டிருக்கின்ற சோதனைப் பொருளாகும். இதுபற்றி நிச்சயமாக நான் மறுமையில் இறைவனால் விசாரணை செய்யப்படுவேன் என்ற உணர்வுடன் முஸ்லிம் தலைமைகளும் தொண்டர்களும் செயற்படல் வேண்டும்.
தனக்கு கிடைக்கின்ற வாகனங்கள், வசிப்பிடங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், ஒதுக்கீடுகள் அனைத்தும் அமானிதங்கள் என்ற தூய்யவுணர்வுடன் முறையாக பயன்படுத்துவதுடன், குறித்த நோக்கங்களுக்காகவே அவைகள் பயன்படுத்தப்படல் வேண்டும். ஒரு முஸ்லிம் அரசியல் தலைமை இவற்றைப் பயன்படுத்துவது தொடர்பில், ஏனையவர்களுக்கு முன்னோடியான உதாரண புருஸராகத் திகழ்தல் வேண்டும். எனவே, இவ்வாறான மேற்போன்ற அம்சங்களில் நமது முஸ்லிம் கட்சிகளும் அதன் தலைமைகளும் இனிவரும் காலங்களிலாவது கவனத்திற் கொண்டு, கரிசனையோடு செயற்ப்பட்டு தங்களது தவறுகளைத் திருத்தி, இந்நாட்டிலுள்ள ஏனைய கட்சிகளுக்கும் சமூகங்களுக்கும் முன்னுதாரணங்களைக் காண்பிப்பதற்கு முன்வரல் வேண்டும். அவ்வாறில்லாவிட்டால், நிச்சயமாக முஸ்லிம் அடையாளம் தாங்கிய அரசியல் கட்சிகள் என்ற பெயரில் புரிகின்ற அனைத்துத் தவறுகளும் இந்நாட்டின் முஸ்லிம்களுக்கு இழுக்கையும் இம்சைகளையுமே தோற்றுவிக்கும் என்பதில் ஐய்யமில்லை.


0 Comments