Subscribe Us

header ads

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை நாடி வந்திருக்கிறது.

பி. முஹாஜிரீன்


கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை நாடி வந்திருக்கிறது. நல்ல விட்டுக் கொடுப்போடு புரிந்துணர்வோடு கடந்த அரசாங்கத்துடன் பகிர்ந்து கொண்டதற்கிணங்க இந்த வாய்ப்பு வந்திருக்கிறது. இதில் நாங்கள் அனைவரையும் இணைத்துக் கொண்டு இந்த ஆட்சியை நிறுவுவதற்கு எண்ணியிருக்கிறோம் என நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை – கோணாவத்தைப் பிரதேச மக்கள் பணிமனை காரியாலயத் திறப்பு விழா சனிக்கிழமை (31) மாலை அட்டாளைச்சேனையில் நடைபெற்றது. பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல். முனாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த ஆட்சியில் பெரும் சங்கடத்தோடுதான் நாங்கள் பணியாற்ற வேண்டியிருந்தது. அந்த நிலமை மாறி இப்பொழுது எல்லோரையும் இணைத்துக் கொண்டு, குறிப்பாக மத்திய அரசாங்கத்திலே சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு தேசிய அரசாங்கம் அமைத்துச் செயற்படுகின்ற முயற்சி நடைபெறுகிறது. இவ்வாறு ஒரு தேசிய அரசாங்கத்தை அமைத்துச் செயற்படுவதற்கு குறைந்தது இரண்டு வருடத்தை செலவிட வேண்டிய அவசியத்தில் புதிய அரசு நடவடிக்கை ஏடுத்து வருகிறது. அவ்வாறான தேசிய அரசாங்கம் மத்திய அரசாங்கத்திலே நடைபெறவிருக்கின்ற நிலையில் அதற்கான ஒரு ஒத்திகையாக கிழக்கு மாகாணத்திலே எல்லோரையும் அரவணைத்த ஒரு ஆட்சியை ஓரிரு நாட்களிலே செய்து காட்டவிருக்கின்றோம்.

இன்று தேசியம் என்பதை அடைமொழியாகப் பாவித்து கட்சி நடத்தியவர்களெல்லாம் ஓரங்கட்டப்பட்டுள்ள நிலையில், நாம் ஏளனமாகச் செயற்படாமல் மிகவும் பக்குவமாக விடயங்களை கையாள வேண்டிய தேவை இருக்கிறது. தற்போது முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு இந்த ஆட்சி மாற்றம் ஒரு ஆறுதலாகவும் அதேநேரம் புதிய உத்வேகத்தைக் கொடுப்பதாகவும் அமைந்நிருக்கிறது.

எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் யாருடன் சேர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவது அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்ற நிலை காணப்படுகின்றபோது, நமது முடிவுகளுக்கு மக்கள் செவிசாய்க்க காத்திருக்கிற நிலையில், இவ்வாறான அடைவுகளை அடைவதற்கு எங்களிடையே காணப்படுகின்ற உட்பூசல்களுக்கு முடிவு கட்டுகின்ற தேவை எமக்கிருக்கிறது. ஏனென்றால் நமக்குள்ள ஒற்றுமைதான் வெற்றியைக் கொண்டு வரும். அடிக்கடி பதவிகளுக்காக நாங்கள் போட்டி போட்டுக்கொண்டு இருப்பது மட்டுமல்லாமல் பதவிகள் கிடைக்காதபோது மற்றவர்களைச் சாடுவதும் அதேநேரம் வேறு முகாம்களுக்குள் போய்ச் சேர்ந்துவிடலாமா என்று யோசிக்கின்ற நிலைமையும் கட்சிக்குள் காணப்படுகின்றது. இவையெல்லாம் நாங்கள் கடந்த காலங்களில் கண்ட அனுபவங்களாகும். எனவே கட்சிக்குள் காணப்படும் உட்பூசல்களை பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. ஜலால்டீனுக்குப் பிறகு அட்டாளைச்சேனைப் பிரதேசத்திற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இல்லை என்பதை கட்சி கவனத்தில் கொள்ளாமலில்லை. எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் புதிய உத்வேகத்துடன் செயற்படக்கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்பும் அதற்கான நகர்வுகளும் வெற்றிகரமானதாக அமைய நாங்கள் பிரார்த்திப்போம் என்றார்.  

இதில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பொது மக்களால் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டதுடன் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், முஸலிம் காங்கிரஸின் மாநகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட அரசியல் பிரமுகர்களும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments