நியூசிலாந்து நாட்டின் சவுத் ஐலண்ட் கடற்கரையில் 100க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளன.
தற்போது கரை ஒதுங்கியிருக்கும் சுமார் 90 திமிங்கிலங்களை மீண்டும் ஆழ் கடலுக்குக் கொண்டுசெல்லும் முயற்சியில் மீட்புப் படையினர் போராடிவருகின்றனர்.
கோல்டன் பே என்னும் இடத்தில் உள்ள ஃபேர்வல் ஸ்பிட்டில் கரை ஒதுங்கிய பல திமிங்கிலங்களை தன்னார்வலர்களும் மீட்புக் குழுவினரும் ஆழ் கடலில் கொண்டு போய்விட்டாலும் அவை மீண்டும் கரையையே வந்தடைகின்றன.
கடல் நீர்மட்டம் உயரும்போது மீண்டும் அவற்றை கடலில் சென்று விடுவதற்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக அவர்கள் நினைக்கின்றனர்.
அந்த வாய்ப்புத் தவறினால், இந்த திமிங்கிலங்கள் உயிரிழக்க நேரிடும்.
திமிங்கலங்கள் கரைக்கு அருகில் வரும்போது, நீர்மட்டம் வெகுவாகக் குறைந்தால் அவற்றின் வழிதேடும் திறன் பாதிக்கப்படுகிறது.
தற்போது கரையில் இருக்கும் திமிங்கிலங்களின் மீது மீட்புக் குழுவினர் தண்ணீரை ஊற்றிவருகின்றனர்.
இப்படிக் கரை ஒதுங்கி உயிரிழந்த திமிங்கிலங்கள், பெரும் உடல் ரீதியான, மன ரீதியான துன்பத்தை அனுபவித்த பின்பே உயிரிழக்கின்றன.
கடந்த பத்து – பதினைந்தாண்டுகளில் நடந்த மிகப் பெரிய கரை ஒதுங்கல் சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.
கரை ஒதுங்கக் காரணம் என்ன?
திமிங்கிலங்கள் பாதுகாப்பாக கரை ஒதுங்கக்கூடிய இடங்கள் சிலவே இருக்கின்றன. பெரும் எண்ணிக்கையில் திமிங்கிலங்கள் வரும்போது, பாதுகாப்பான பகுதிக்குள் அவற்றால் நுழைய முடியாவிட்டால், அவை அபாயத்தில் சிக்கிக்கொள்கின்றன.
திமிங்கிலங்கள் கடற்கரைக்கு வருவதென்றால் பெரும்பாலும் இந்த ஃபேர்வெல் ஸ்பிட்டைத்தான் தேர்வுசெய்யும்.
திமிங்கிலங்கள் கரைக்கு அருகில் வரும்போது, நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து இருந்தால் அவற்றின் வழிதேடும் திறன் பாதிக்கப்படுகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.
அவை கரையில் சிக்கிக்கொண்டவுடன், நீரிழப்பு ஏற்படுகிறது. சூரிய ஒளியினாலும் அவை பாதிக்கப்படுகின்றன.
நியூசிலாந்தை ஒட்டிய கடற்பகுதியில் சாதாரணமாக காணப்படக்கூடிய இந்த பைலட் திமிங்கிலங்கள் 20 அடி நீளம் வரை வளரக்கூடியவை.
இந்தத் திமிங்கிலங்களை மீண்டும் ஆழ்கடலுக்குள் அனுப்ப பல நாட்கள் பிடிக்கலாம் என்றும் இருந்தாலும் அவை உயிர் தப்பும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது என்கிறார்கள் நிபுணர்கள்.
திமிங்கிலங்கள் தாங்களாக ஏன் கடற்கரைக்கு வருகின்றன என்பது இன்னமும் புரியாத விஷயமாகவே இருந்துவருகிறது.

0 Comments