தற்காலிக இடைவேளையில் ஒதுங்கியிருக்கும்
மஹிந்த ராஜபக்ச எனும் வீரனின் பயணத்தை யாராலும் நிறுத்த முடியாது என
சூளுரைத்த விமல் வீரவன்ச, அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மஹிந்த
ஆட்சியை நிறுவுவோம் என சவால் விடுத்துள்ளார்.
1815ம் ஆண்டு வெள்ளையர்கள் இறுதியாக
ராஜசிங்க மன்னனை வெல்வதற்கு முதலில் அவரைப்பற்றிய அவதூறுகளைப் பரப்பி
மக்களை நம்ப வைத்தனர். அதுபோலவே கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த
ராஜபக்சவைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அவரைப் பற்றி தவறான
கருத்துக்களைப் பரப்பி இந்த அரசு உருவாக்கப்பட்டுள்ளது இந்த தந்திரத்தை
உடைத்தெறிந்து மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியை நிறுவாமல் விடமாட்டோம் என
சூளுரைத்த விமல் வீரவன்ச, பல ஸ்ரீலசுக உறுப்பினர்கள், பாராளுமன்ற
உறுப்பினர்களின் வருகையையும் சுட்டிக்காட்டி இது வெறும் ஆரம்பம் ஆனால்
அனைத்து ஸ்ரீலசுக உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர
முன்னணியினரையும் ஒன்று சேர்ப்பது கைகூடும் எனவும் அதன் மூலம் மீண்டும்
மஹிந்த ஆட்சி நிறுவப்படும் எனவும் தெரிவித்தார்.
நுகேகொட கூட்டத்தில் மேலும் உரையாற்றிய
விமல் வீரவன்ச, தற்போதைய நிலையில் மஹிந்த ராஜபக்சவுக்கு நாளுக்கு நாள்
ஆதரவு அதிகரித்து வருவதாகவும் இந்நிலையில் தேர்தல் நடாத்தப்படுமாயின்
இழந்ததை விட மேலதிகமாக 1 மில்லியன் வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி
பெறுவார் எனவும் தெரிவித்ததோடு தற்போதைய ஆட்சி மாற்றத்தின் போது மஹிந்தவை
வழி கெடுப்பதற்காக அவரை சூழ்ந்திருந்த அனைவரும் விலகி ஓடிவிட்டதாகவும்
தற்போது அவர் இந்த சந்தர்ப்பவாதிகள் இல்லாத ‘பரிசுத்தமான’ நிலையில்
இருப்பதால் அவருடைய மீள் வருகையும் புதிய அரசும் நாட்டுக்குத் தேவையான
எதிர்காலத்தை ஸ்திரமாகக் கட்டியெழுப்பும் அரசை அமைத்துத் தரும் எனவும்
தெரிவித்ததோடு யுத்தத்தை வென்ற மஹிந்த, கோத்தபாய போன்றோரின் கௌரவத்தை
பறித்தெடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே, கடந்த கால தவறுகளைக் களைந்து
மீண்டும் புதிய எழுச்சியுடன் மக்களாட்சியை நிறுவ மஹிந்தவை அழைத்து அவரிடம்
ஆட்சிப்பொறுப்பைக் கையளிக்க அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் எனவும், இங்கு
பேசப்படும் செய்திகளை வெளியிட ஊடகங்கள் முன்வராது என்பதால் ஒவ்வொருவரும்
தமது ஊர்களுக்குச் சென்று தமது நியாயங்களை எடுத்துரைக்க வேண்டும் எனவும்
விமல் வீரவன்ச வேண்டுகோள் விடுத்துள்ளதோடு இந்த எழுச்சி ஊருக்கு ஊர்
இடம்பெறும் எனவும் தமது போராட்டம் தொடரும் எனவும் அறிவித்ததோடு மஹிந்த
ராஜபக்ச என்பது ஒரு தனிமனிதனின் பெயர் இல்லை ஒரு நாட்டிற்கே சொந்தமான பெயர்
எனவும் உணர்வுபூர்வமாகப் பேசி சற்று முன்னர் தனது பேச்சை நிறைவு
செய்திருந்தார்.
கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதோடு கணிசமான ஸ்ரீலசுக உறுப்பினர்களும் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.


0 Comments