சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்டனர். 8 துணை ராணுவப் படையினர் காயமடைந்துள்ளனர்.
சட்டீஸ்கரின் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கான்கெர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இந்தத் தாக்குதல்நடத்தப்பட்டிருக்கிறது.
திங்கட்கிழமையன்று மாலையில் நடந்த இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் மாவோயிஸ்டுகளுடன் இரண்டு மணி நேரம் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர் என மூத்த காவல்துறை அதிகாரி ஏ.கே. விஜ், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர், உள்ளூர் காவல் நிலையத்தின் மூத்த அதிகாரியாவார். மற்றொருவர், கடை நிலைக் காவலர். இந்த மோதலில் கிராமத்தினர் இரண்டு பேரும் காயமடைந்தனர்.
காயமடைந்த காவல்துறையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் மேல் சிகிச்சைக்காக ராய்ப்பூர் கொண்டுவரப்பட்டனர்.
சில மாவோயிஸ்டுகளைத் தேடி கிராமங்களுக்குள் இந்தக் காவல்துறையினர் சென்றபோது, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்திய பிறகு மாவோயிஸ்டுகள் காடுகளுக்குள் சென்றுவிட்டனர்.
வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்கள் மற்றும் ஏழைகளின் உரிமைக்காகப் போராடுவதாக மாவோயிஸ்டுகள் கூறிவருகின்றனர்.
இந்தியாவில் உள்ள சுமார் 600 மாவட்டங்களில் மூன்றில் ஒரு பகுதியில் இவர்கள் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றனர். வடக்கு, கிழக்கு, மத்திய மாநிலங்களில் "ரெட் காரிடார்" என்று அழைக்கப்படும் பல பகுதிகள் இவர்களது கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
2013ஆம் ஆண்டு மே மாதம் சுக்மா மாவட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவரின் ஊர்வலம் ஒன்றைத் தாக்கினர். அதில் 27 பேர் கொல்லப்பட்டனர். பல மூத்த அரசியல்வாதிகளும் இதில் கொல்லப்பட்டனர்.-BBC-


0 Comments