Subscribe Us

70 வயதில் கால் பதிக்கும் புத்தளம் சாஹிரா ! அது என்றும் நமக்கு கலங்கரை விளக்கு தான் !!


முஸ்லிம் சமூகத்தின் இரு கண்ணென போற்றப்படுபவை பள்ளிவாசலும், பாடசாலையுமாகும். மாறிச் செல்லும் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும், மனிதர்களோடும், சமூகத்தோடும், நிறுவனங்களுடனும் வினைத்திறன் வாய்ந்த செயற்பாட்டுக்கான புதுப்புது ஆற்றல்களை வேண்டிநிற்கின்றது. பிரச்சினைகள், சிக்கல்கள் என்பவற்றைக் குறைக்கவும், வாழ்வின் தனிப்பட்ட இலக்குகளை எட்டவும் இந்த ஆற்றல்கள் அவசியமானவை. அந்த இடத்தை நிரப்பும் ஒரு சமூக நிறுவனம் பாடசாலையாகும்.

அந்த வகையில் நமது புத்தளம் மண்ணின் தலை சிறந்த, முன்னணி கல்வி நிலையம் சாஹிர தேசிய கல்லூரியாகும். அது நம் அனைவர் வாழ்விலும் என்றுமே பிரிக்க முடியாத அங்கமாகும். அங்கு நாம் பாதம் பதித்து, கல்வி கற்று, நடந்து, ஓடி விளையாடிய பசுமையான நாட்களை எளிதில் மறக்கத் தான் முடியுமா?

சாஹிரா நம்மை வளர்த்து ஆளாக்கியுள்ளது. நமது அறிவுப் பசிக்கு தீனி போட்டுள்ளது. நமது பல்வேறு விதமான ஆற்றல்களுக்கும், திறமைகளுக்கும் களம் அமைத்து தந்துள்ளது. நமக்கு கல்வி போதித்த ஆசிரிய பெருந்தகைகள், அதிபர்கள், நிர்வாகிகள், ஊழியர்கள், சக மாணவர்கள் முதலானோரை இப்போதும் நாம் நினைக்கையில் நாம் அடையும் ஆனந்தத்துக்கு அளவேது.

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி 1945.02.12 இல் வித்தானது. கால ஓட்டத்தில் தளிராகி, செடியாகி, மரமாகி, காயாகி, கனியாகி, பெரு விருட்சமாகி, கிளைப் பரப்பி, நிழல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அது 2015.02.12 இல் 70 வயதைப் பூர்த்தி செய்கிறது.

சாஹிராவின் வளர்ச்சி, நமது ஊரின் வளர்ச்சி, நமது சமூகத்தின் வளர்ச்சி, நமது தேசத்தின் வளர்ச்சி, சாஹிரா என்றும் நம் அனைவருக்கும் ஒரு கலங்கரை விளக்கு தான்.

-Muhusi Rahmathullah-

Post a Comment

0 Comments