மாயமான மலேசிய விமானம் மூன்று முறை பாதை மாறியதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு மார்ச் 8ம் திகதி கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பிஜீங் சென்ற MH370 விமானம் திடீரென நடுவானில் மாயமானது.
இதனையடுத்து இந்திய பெருங்கடலில் விழுந்ததாக மலேசிய அரசு கூறியதன் பேரில் சர்வதேச நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பூளூபென் நீர்மூழ்கி கப்பலின் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.
ஆனால் அங்கு விழுந்தது விமானத்தின் பாகங்கள் இல்லை என பின்பு உறுதி செய்யப்பட்டது.
வரும் மே மாதத்துடன் விமானத்தை தேடும் பணி முடிவடைய உள்ள நிலையில், இது தொடர்பாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
விமானம் காணாமல் போன போது என்ன நடந்தது என்பது குறித்து ஆவணப்படம் ஒன்று தயாராகி வருகிறது.
அதன்படி காணாமல் போன விமானம் பற்றிய செயற்கைகோள் தகவல் திரட்டுகளை ஆராய்ந்த உலகின் பிரபலமான வானூர்தி பேரழிவு நிபுணர்கள், விமான கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட பின், விமானம் சில மணி நேரம் வானில் பறந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் கிடைத்துள்ள ஆதாரங்களை மிகவும் கவனமாக ஆராய்ந்ததில், கடைசி ரேடியோ தொடர்புக்கு பின் விமானம் மூன்று முறை திரும்பியது தெரியவந்துள்ளது.
முதல் முறை இடது பக்கமாக திரும்பிய விமானம், பின்னர் மீண்டும் மீண்டும் 2 முறை இடது பக்கமாகவே திரும்பி மேற்கு நோக்கி பயணித்து, இறுதியாக தெற்கு புறமாக அண்டார்டிகாவை நோக்கி சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உலகின் முன்னணி ஆய்வாளரான மால்கம் பிரன்னர்(Malcolm Brenner) கூறுகையில், விமானத்தின் பாதை மூன்று முறை மாற்றப்பட்டுள்ளதன் மூலம் காக்பிட்டில் இருந்த யாரோ ஒருவர், திட்டமிட்டு விமானத்தின் போக்கை மாற்றியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் எனது 40 வருட அனுபவத்தில் இது போன்ற நிகழ்வை நான் பார்த்ததில்லை என கூறியுள்ளார்.
இதற்கிடையே பிரன்னர் உள்பட பல ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள இந்த ஆவணப்படம் அடுத்த மாதம் நேஷனல் ஜியாக்ரபிக் சேனலில்(National Geographic Channel)ஒளிபரப்பப்படுகிறபோது விமானம் குறித்த மர்மம் நீங்கும் என கூறப்படுகிறது.

0 Comments