புத்தளம் தொகுதிக்கும், மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை மக்களுக்கும் கடந்த 25 வருடங்களாக 1989 முதல் 2010 வரையான ஆறு பொதுத் தேர்தல்களின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாத பாரிய குறைப்பாட்டின் எதிரொலியாக இற்றைக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக உதயமானது புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்றம்(PPAF). இரு பிரதான கட்சிகளில் போட்டியிட்டு இறுதியில் நமது வேட்பாளர்கள் வீசிய கையும், வெறும் கையுமாக வீடு திரும்பிய கசப்பான அனுபவங்கள் சகலருக்கும் குறிப்பாக புதிய தலைமுறைக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது. அவர்களின் உணர்வுகளை பெரிதும் காயப்படுத்தியது. எனவே தொடர்ந்தும் அமைதி பேண முடியாமல், மௌனத்தைக் களைத்த PPAF அதன் சமூக, அரசியல் பயணத்தில் முக்கிய மைல் ஒன்றை (30.01.2015) அன்று அதன் மாவட்ட காரியாலயத்தை புத்தளம் மன்னார் வீதியில், காசிமிய்யா மத்ரசாவுக்கு முன்பாக திறந்து வைத்ததன் மூலம் வெற்றிகரமாக கடந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
PPAF ஸ்தாபகர்களில் ஒருவரும், சமூக ஆர்வலருமான ஆசிரியர் H.M.M.சிபாக் தலைமையில் எளிமையான முறையில் இடம் பெற்ற திறப்பு விழாவில் சமய, சமூக, கல்வி, அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினர். ஆசிரியர் சிபாக் PPAF இன் தோற்றம், வளர்ச்சி,பணிகளின் வியாபகம்,சவால்கள் குறித்து விளக்கி PPAF இன் பயணத்தில் பங்காளர்களாக அனைவரும் இணைந்து கொள்ளும் படியும் வேண்டுகோள் விடுத்தார்.
புத்தளத்தின் மூத்த அரசியல் பிரமுகர் அல்ஹாஜ் M.H.M. நவவி பிரதான கட்சிகளில் தானும், மர்ஹூம் M.I. பிஷ்ருல் ஹாபியும் போட்டியிட்டு, வெற்றி பெறமுடியாமல் போனமைக்கான காரணிகளை விலா வாரியாக விபரித்தார். தொடர்ந்தும் பெரும்பான்மை கட்சிகளை நம்பி, களமிறங்குவது எந்த வகையிலும் அறிவுடமையாகாது. PPAF இன் பணிகள் காலத்தின் கட்டாயத் தேவை. அதற்காக முன்னின்று உழைப்பவர்கள் பாராட்டுக்குரியவர்கள். PPAF இற்கு தனது ஒத்துழைப்பும்,ஆதரவும் தொடர்ந்தும் கிடைக்கும் என்றார்.
புத்தளம் மாவட்ட ஜம்மிய்யத்துள் உலமா தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் இலக்கு தூய்மை என்றால அதை அடையும் வழிமுறையும் தூய்மையாக அமைய வேண்டும். PPAF இஸ்லாமிய வரம்புகளைப் பேணி பயணிப்பதன் மூலம் மக்களுக்கான அதன் நோக்கத்தை அடைந்து கொள்ளவும், அது செயற்பட்ட விதத்துக்கான கூலியை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்ளவும் முடியும். PPAF இன் பணிகள் வெற்றி பெற வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும் என்றார்.
புத்தளம் பெரிய பள்ளி தலைவர் அல்ஹாஜ் P.M.M. ஜனாப், முன்னாள் தலைவர் அல்ஹாஜ் S.R.M.M.முசம்மில், முன்னாள் பிரதியமைச்சர் S.S.M.அபூபக்கர் ஆகியோரும் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
“இரும்பு போன்ற நெஞ்சம் கொண்ட இளைஞர்களுக்கு வாள்கள் தேவையில்லை. இளைஞர்களின் கனவுகள் ஒரு போதும் தோற்பதில்லை”
PPAF இன் பணிகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக. அதன் விசாலமான பணிகள் மனிதம் வாழும் இடங்கள் தோறும் தொடர அவன் பேரருள் புரிவானாக.


0 Comments