கார், பைக்கின் கையாளுமையில் டயர்களின் பங்கு மிக முக்கியமானது. கையாளுமை மட்டுமின்றி, அதிர்வுகளை குறைத்து பயணிப்போருக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்குவதிலும், எரிபொருள் சிக்கனம், பாதுகாப்பு என அனைத்து முக்கிய அம்சங்களிலும் டயர்களின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. டயர்களின் தொழில்நுட்பம் பல்வேறு கட்டங்களை தாண்டி சென்றுகொண்டிருக்கும் இவ்வேளையில், தற்போது டியூப்லெஸ் டயர்களை வாகனங்களில் பொருத்த அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. டியூப்லெஸ் டயரின் சிறப்பம்சம் பற்றிய ஒரு பார்வை...
பேலன்ஸ்
வாகனத்தின் எடைக்கு தக்கவாறு டயருக்குள் காற்று சமநிலையுடன் இருப்பதால் டயரின் சுழலும் வேகம் மற்றும் சுழலும் தன்மை சீராக இருக்கும். இதனால், அதிக பாதுகாப்பையும், கூடுதல் எரிபொருள் சிக்கனத்தையும் பெறலாம்.
ரோடு கிரிப்
சில சமயங்களில் வாகனத்தின் எடை அதிகமாகும்போது டியூபில் காற்று சமநிலை இல்லாமல் இருப்பதால் வாகனங்கள் பேலன்ஸ் இல்லாமல் (வாப்லிங்) செல்லும். ஆனால், டியூப்லெஸ் டயர்களில் இந்த பிரச்சனை இருக்காது. தரை பிடிப்பும் அதிகமாக இருக்கும்.
பாதுகாப்பு
விபத்துகளுக்கு டயர் பஞ்சராவதும், டியூப் வெடிப்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது. சாதாரண டயர்கள் எளிதில் பஞ்சராவதற்கும், டியூபில் உராய்வு அதிகமாகி வெடிப்பதற்கான ஆபத்துகளும் அதிகம். ஆனால், டியூப்லெஸ் டயர்களின் வெளிப்புறம் அதிக தடிமனுடன் கூடிய உறுதியான ரப்பரை கொண்டிருப்பதால் காற்று திடீரென வெடித்து வெளியேறாது.
வெடிக்காது
வாகனங்களில் 100 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லும்போது டயர், டியூப் இடையில் ஏற்படும் அதிக உராய்வு காரணமாக டியூபில் உள்ள காற்று சூடாகி வெடிக்கும் ஆபத்து உள்ளது. ஆனால், டியூப்லெஸ் டயர் அதிவேகத்தில் செல்லும்போதும் சூடாகாது என்பதால் டயர் வெடிக்கும் வாய்ப்பு குறைவு.
எடை குறைவு
டியூப் டயர்களைவிட டியூப்லெஸ் டயர்கள் எடை குறைவானவை. இதனால், டயரினால் சஸ்பென்ஷனுக்கு ஏற்படும் பளு குறைக்கப்படும்.
உறுதி
டியூப்லெஸ் டயர்களின் உட்புறம் ஹாலோ பியூட்டைல், குளோரோ பியூட்டைல் உள்ளிட்ட பிரத்யேக வேதிப்பொருட்களின் பூச்சுடன் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், வெப்பமாகாது. உட்புறத்திலிருந்து காற்று வெளியேற வாய்ப்பும் மிக மிக குறைவு.
கையாளுமை
எடை குறைவான டியூப்லெஸ் டயரின் டிசைன், கார், பைக்கிற்கு சிறப்பான கையாளுமையை வழங்கும். இதனை ஓட்டுனர் முழுமையாக உணர முடியும்.
பஞ்சர் பிரச்னை
டியூப்லெஸ் டயர்களை பொருத்தும்போது ஊற்றப்படும் சீலண்ட், டயரில் சிறிய பஞ்சர்களை தானே சரிசெய்து காற்று வெளியேறுவதை தவிர்த்துவிடும். மேலும், டயூப்லெஸ் டயர் பஞ்சரானால்கூட டியூப் டயர் போன்று காற்று உடனே இறங்கிவிடாது. சீராக இறங்கும் என்பதால், அதனை உணர்ந்து கொண்டு அருகிலுள்ள பஞ்சர் கடையில் பஞ்சர் போட்டுவிடலாம். அல்லது பஞ்சர் கிட் இருந்தால், நீங்களே எளிதாக பஞ்சர் போட முடியும். மேலும், டியூப் டயர்களில் லிவர் பயன்படுத்தி கழற்றும்போது, டியூப் சேதமடைய வாய்ப்புள்ளது. இந்த பிரச்னை டியூப்லெஸ் டயரில் கிடையாது.


0 Comments