எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டுவார் என கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் மூலம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன 53 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டு வெற்றியீட்டுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள வாக்காளர்கள் அதிகளவில் மைத்திரிக்கு ஆதரவளிப்பார்கள் எனவும், தமிழ் முஸ்லிம் வாக்குகள் இரு வேட்பாளர்களுக்கும் பிரிந்து செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன குறைந்தபட்சம் 200,000 (2 இலட்சம்) வாக்கு வித்தியாசத்தில் வெற்றியீட்டுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர்களான கலாநிதி லலிதசிறி குணவர்தன மற்றும் கலாநிதி டி.எஸ்.ஜயவீர ஆகியோர் இந்த ஆய்வினை வழிநடத்தியுள்ளனர்.
2010ம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்தவிற்கு வாக்களித்த 28 வீதமானவர்கள் இம்முறை மைத்திரிக்கு வாக்களிக்கத் தீர்மானித்துள்ளதாகவும், 11 வீதமானவர்கள் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி தீர்மானிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக இம்முறை வாக்களிப்பில் பங்கேற்கும் வாக்காளர்களில் 38 வீதமானவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், 33 வீதமானவர்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஆதரளிக்க உள்ளதாகவும், 13 முதல் 15 வீதமானவர்கள் இன்னமும் யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றி தீர்மானிக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, களனி பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வில் மாறுபட்ட முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே வெற்றியீட்டுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னணி பல்கலைக்கழகங்கள் இரண்டு நடத்திய கருத்துக் கணிப்புக்களின் முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

0 Comments