Subscribe Us

header ads

அளவுக்கு மிஞ்சிய பதவிகளும் நஞ்சு!

நவீன சிந்தனை வரட்சியினால் இலங்கை முஸ்லிம் சமூகம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதைப் புடம் போட்டுக் காட்டும் வகையில் இலங்கையின் அரசியல் களமாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

பதவியிருந்தால் தான் மதிப்பிருக்கும் எனும் மாயை இன்னும் முஸ்லிம் சமூகத்தை விட்டுப் போகவில்லையென்றிருக்கும் போது அவர்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பிரதிநிதிகளும் அதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குவதைத் தடுக்க முடியாது.

அண்மைய தேர்தல் களமாற்றத்தின் போது மக்கள் அலையில் கலந்துகொள்வதைத் தவிர வேறு தேர்வில்லை எனும் நிலையில் இறுதி நேரத்தில் தமது நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டாலும் கூட முஸ்லிம் மற்றும் தமிழ் அரசியல் தலைமைகளின் அறிவித்தல் தேர்தல் காலகட்டத்திற்கு தேவைப்படட ஒன்றாகும்.

இதன் பிரதிபலன் மஹிந்த ராஜபக்சவின் வெளியேற்றமும் மைத்ரியின் வரவுமாக இருக்க வேண்டுமென்பது மாத்திரமே அப்போது சிந்திக்கப்பட்ட ஒன்றாக இருந்த போதும் அரசியல் தளத்தில் கட்சி மாற்றம் என்பது எல்லாவகையிலும் ‘பேரத்துடன்’ இடம்பெறும் ஒரு வடிகட்டிய செயல் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் வகையில் யார் செயற்படுகிறார்களோ அவர்கள் தானாக அம்பலப்படுகிறார்கள்.

மஹிந்த ஆட்சியை இல்லாதொழிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்த ஜே.வி.பி, தாம் தேசிய நிறைவேற்றுப் பேரவையில் பங்கெடுத்து ஆலோசனைகளை முன் வைத்த போதும் அமைச்சரவைப் பங்காளிகளாக மறுத்திருந்தமை காலத்தால் நிச்சயம் மெச்சப்படும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் மத்திய அரசாங்க ஆட்சியில் பங்கெடுக்காவிடினும் கிழக்கு மாகாணசபையின் ஆட்சியில் தமக்குரிய பங்கின் அவசியத்தை அவர்கள் விட்டுக்கொடுக்க முடியாத நிலையில் அங்கு பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதற்கு ஆதரவளிக்கக்கூடிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடனான கூட்டு இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளும் இணக்கப்பாட்டை எட்ட முடியாத காரணத்தால் ஏதாவது ஒரு வகையில் நிலைமையை சமாளிக்க மைத்ரி அரசு இனவாதம் இன்னும் ஓயாத நிலையில் விமர்சனத்துக்குள்ளாக்கக்கூடிய முடிவையெடுத்து அமைச்சரவையில் மேலும் அதிகமான முஸ்லிம் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது.

இதில் மும்முனைப் போட்டி நிலவியிருப்பதை சாதாரணமாக ஊகிக்கலாம். முதன் முதலில் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்ட வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் சுயாதீனமாக இயங்கியிருந்தால் அவருக்கும் இன்று ஏதோ ஒரு வகையில் அமைச்சர் அல்லது பிரதியமைச்சர் பதவி கிட்டியிருக்கலாம். இப்போது கூட முஸ்லிம் விவகாரப் பிரதியமைச்சர் பதவி தொடர்பில் அவரது பெயர் பரிசீலிக்கப்படும் சாத்தியக்கூறு இல்லாமலில்லை.

எனினும், ஒரு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினராக அவருக்கு முந்திக்கொண்டு பிரதியமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொடுக்க கட்சியாலும் முடியாது. காரணம் மேலும் சில முக்கிய ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் இன்னும் எஞ்சியிருக்கிறார்கள்.

சமநிலையில் இவரது வரவினால் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்தும் அக்கட்சியும் விடாப்பிடியாக இருப்பதே யதார்த்தம் எனும் நிலையில் அமீர் அலி பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டு அங்கு காணப்படும் இடைவெளி ஓரளவு நிரப்பப்பட்டுள்ளது.

ஸ்ரீலஙகா முஸ்லிம் காங்கிரஸ் ஏலவே இரு அமைச்சர்களைக் கொண்டிருந்தது இப்போது பஷீர் சேகுதாவுத் ஒதுக்கப்பட்டு கட்சிச் செயலாளர் ஹசன் அலியும் தௌபீக்கும் அமைச்சரவை அந்தஸ்த்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்கள்.

இவ்வாறு அடுக்கடுக்காக முஸ்லிம் காங்கிரசுக்கு பதவிகள் வழங்கப்பட்டுக்கொண்டிருப்பதற்கு காரணங்கள் இல்லாதிருக்கப் போவதில்லை. அதன் சமரசத்தின் விளைவுகள் உத்தியோகபூர்வ ரீதியில் அறிவிக்கப்படும் போது கடந்த கால கொள்கைகள் கேள்விக்குட்படுத்தப்படும் என்பதை மறுப்பதற்கில்லை.

எனினும், இங்கு உருவாகும் கேள்வியானது இவற்றை வெளியிலிருந்து அளவிடும் மாற்று சமூகத்தின் பார்வை எவ்வாறு இருக்கப் போகிறது என்பதாகும். நல்லாட்சியை விரும்பி மைத்ரியை ஆட்சிபீடத்தில் அமர்த்திய சிங்கள மக்களின் வாக்குப் பலம் இன்னும் அதிகமாக இருந்தால் இவ்வாறு தொகை தொகையாக முஸ்லிம் அமைச்சர்கள் பதவியேற்கும நிலை உருவாகப் போவதில்லை எனும் செய்திதான் இங்கு மக்களுக்கு சொல்லப்படுகிறதா இல்லையா என்பதை அறிய அடுத்த தேர்தல் வரை நாம் பொறுத்திருக்க வேண்டும்.

அல்லது முன் சொன்னது போன்று சமரசத்தின் அடிப்படையில் மாற்றுப் பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்றால் இன்று வழங்கப்படும் பதவிகள் நாளைய சவாலின் ஆரம்பம் என்பதையும் உணர்த்தி நிற்கின்றன. எனினும், அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை அன்றைய தேவை என்ற சூழலில் இயங்குவதால் தேர்தல் வரும் போது அவற்றை வேறு வகையில் கையாளலாம் எனும் சிந்தனை மேலோங்கி நிற்கும்.

ஆயினும், இன்றைய சூழ்நிலை தொடர்பில் மக்கள் மத்தியில் இரு வேறு பார்வைகள் இருக்கின்றன. அதிகப்படியான மக்கள் தற்காலிக அரசில் அளவுக்கதிகமாக பெறப்படும் பதவிகள் குறித்து ஆச்சரியத்துடனும் அதிருப்தியுடனும் இருக்கிறார்கள் என்ற உண்மை தேர்தலில் தாக்கத்தைச்
செலுத்தும் என்பதையும் நம்பலாம்.

இதைவிட நமக்கு சிறந்த தெரிவுகள் இருந்திருக்கவில்லையா? என்று பார்த்தால் தேசிய உணர்வு பலமாகக் கட்டியெழுப்பப்பட்டுக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் நிச்சயமாக இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் பிராந்திய நலன் முற்படுத்தப்படும் போது தொடர்ந்தும் பின்னிலையில் இருக்கும் சமூக சிந்தனை வேறுபட்டு அம்பலமாவதுடன் ஐக்கிய இலங்கையில் தனிமைப்படும் காலமும் வெகு தூரத்திலில்லை.

முன்னரே சொன்னது போன்று இது மக்கள் விரும்பிக் கேட்டதனால் பெற்றுக்கொண்ட பதவிகளாக இனி வரும் காலத்தில் இடம்பெறப்போகும் சித்தரிப்புகளையும், பதவியில் இருந்ததனால் தான் தமது பிரதேச நலன் பாதுகாக்கப்பட்டது எனும் எஞ்சியிருக்கும் 95 நாள் மீதான குறுகிய அக்கறையும் முற்படுத்தப்படுமாக இருந்தால் தூர காலத்தில் இதன் விளைவுகளால் பெரும் இழப்பைச் சந்திக்கப் போவதும் அதே பிரதேசங்கள் என்பது திண்ணம். ஏனெனில் பெருவாரி மக்களின் அபிப்பிராயம் மாற்றுத் தளத்தில் இல்லாமல் மைத்ரி அரசு உருவாகவில்லை என்பதே சத்தியம்.

மத்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் வகுத்த வியூகங்கள் சரியான பாதையிலேயே செல்கின்றது என்பது எவ்வளவு உண்மையோ அது போலவே நாட்டின் பெரும்பான்மையான முஸ்லிம்களின் சிந்தனையும் அதன்பால் கலந்துள்ளது என்பதும் உண்மை.

முன்மாதிரியாக இருக்கக் கிடைத்த 100 நாட்களில் நாங்கள் எந்த மாதிரி என்று
அரசியல்வாதிகள், கட்சிகள் அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் ஆதரிக்கும் மக்களும் சிந்திக்கும் காலமிது!

- மானா

Post a Comment

0 Comments