அவுஸ்திரேலிய ஓபன் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் மூன்றாவது சுற்றில் முன்னணி வீரர் ரோஜர் பெடரர், அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில், ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெறுகின்றனது.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில், உலகின் 2ஆம் நிலை வீரர், சுவிட்சர்லாந்தின் பெடரர், தரவரிசையில் 46 ஆவது இடத்தில் உள்ள இத்தாலியின் ஆன்டிரியாஸ் செப்பியை எதிர்கொண்டார்.
இதன் முதல் செட்டை 6-4 என, இழந்த பெடரர், அடுத்த செட்டையும் 'டை பிரேக்கர்' வரை சென்று 6-7 இழந்தார். மூன்றாவது செட்டில் எழுச்சி பெற்ற இவர், 6-4 என, கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.
ஆனால், நான்காவது செட்டில் சுதாரித்துக் கொண்ட செப்பி, சரியான பதிலடி கொடுத்தார். 'டை பிரேக்கர்' வரை சென்ற இந்த செட்டை கடைசியில் பெடரர் 6-7 என, கோட்டை விட்டார்.
முடிவில், 4-6, 6-7, 6-4, 6-7 என்ற செட்கணக்கில், பெடரர் வீழ்ந்தார். வெற்றி பெற்ற ஆன்ரியாஸ் செப்பி, 2013க்குப் பின் இரண்டாவது முறையாக 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
அவுஸ்திரேலிய ஓபனில் 5 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள பெடரர், 4 முறை கிண்ணத்தை வென்றுள்ளார். கடந்த 2004 முதல் தொடர்ந்து அரையிறுதிக்கு தகுதி பெற்று வந்தார். கடந்த 2011 முதல் தொடர்ந்து 4 ஆண்டுகள் அரையிறுதிக்கு முன்னேறி இருந்தார். இம்முறை, எப்படியும் 18வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வது என்ற எண்ணத்தில் இருந்த பெடரருக்கு, இத்தோல்வி பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. தவிர, 2001க்குப் பின், முதன் முறையாக, 3வது சுற்றுடன் நடையை கட்டியுள்ளார் பெடரர்.


0 Comments