ஒரு காலத்தில் இலங்கையின் வரைபடம் இரத்தத்திலும் -கண்ணீரிலும் கரைந்து கொண்டிருந்தது.
எழில் ததும்பும் எமது தேசத்தில் மூன்று தசாப்தங்களாய் துப்பாக்கி வேட்டுக்களும்,அழுகையும்,ஒப்பாரியும்,மரண ஊர்வலங்களும் மலிந்திருந்தன. விரக்தியும்,சோகமும், வறுமையும் எம் அன்றாட வாழ்வியலை வதைத்தன. ஒரு நாள் பல யுகமாய் கழிந்த பொழுதுகள் எத்தனை? எத்தனை?
அன்பானவர்களே,
நன்றியுடையவர்களே,
நினைவுகளைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்.
நிம்மதியில்லாது சாதாரண வாழ்வியலைத் தொலைத்து, சதா ரணங்களுடன் காலம் கடத்திய கசப்பான மணித்துளிகளை இதய சுத்தியுடன் திரும்பிப் பாருங்கள்.
நிதர்சனம் தெளிவானது, உயிருக்கு உத்தரவாதமற்று கண்ணீர் சிந்திய கவலையான நிமிடங்களை கணதியாய் நினைத்துப் பாருங்கள் உறவுகளே.
ஆம், வார்த்தைகளில் வடிக்க முடியாத ஆய்ரமாயிரம் வடுக்கள் நெஞ்சத்தை நெருடுகின்றன.
ஞாபகமிருக்கிறதா சொந்தங்களே..?
உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா..?
மனிதாபிமானமில்லாத பயங்கரவாதிகள் செய்த அட்டூழியங்கள் ஞாபகமிருக்கிறதா?
மனிதம் விரும்பும் மகத்தான சொந்தங்களே,
கொஞ்சம் நில்லுங்கள்-
முஸ்லிம்களுக்கு எதிரான கடந்த காலத்தின் கசப்பான சரிதங்களை கேட்டு விட்டு செல்லுங்கள்.
இணைய வெளியில் இஸ்லாமிய நாகரிகம் மறந்து தூற்றுகின்றவர்களே,
இதையும் கொஞ்சம் பாருங்கள்.
ஒற்றுமையில்லாத மந்தைகளாக நாம் அலைந்தது போதும்,
சற்று சிந்தையை சீர் தூக்கிப் பாருங்கள். நாளைய நமது பிள்ளைகளுக்கு நலவு செய்வோம்.
இறந்த காலத்தின் கண்ணீர் பதிவுகள் இதோ...
*கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கி சென்ற ஹாஜிமார்கள் 50 பேரும் நோயாளிகள் மற்றும் தாய் மார்கள் உட்பட144 பேரை கதற கதற கடத்தி சென்று புலிகள் சுட்டுக் கொன்றனர்.
*1985 கிண்ணியா முஸ்லிம் கிராமம் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்.
*1990,ஆகஸ்ட்,03 காத்தான்குடி மீராஜும்மா பள்ளி மற்றும் ஹுஸைனியா பள்ளி வாசல்களில் தொழுது கொண்டிருந்த 103 பேர் மீது புலிகள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதல் எம் மனசுகளை விட்டு மாறுமா..?
*1990ம் ஆண்டு ஆகஸ்ட் ஏறாவூர் சதாம்ஹுசைன் முஸ்லிம் கிராமத்தில் 153 பேரை வெட்டி கொன்றனர்.
*1990ம் ஆண்டு அப்பாவி முஸ்லிம் சகோதரர்களை 24 மணி நேரத்துக்குள் வடக்கிலிருந்து உடுத்த உடையுடன் பலவந்தமாக வெளியேற்றினர்
*1992.எப்ரல்.29 பொலன்னறுவை அலஞ்சிப்பொத்தானை எனும் கிராமத்தில் 56 முஸ்லிம்களை கொடிய பயங்கரவாதிகள் மிலேச்சதனமாக கொன்றனர்.
*1992ஒக்டோபேர்15 இல் பள்ளியகொடல்ல முஸ்லிம் கிராமத்தில் 146 முஸ்லிம்களை மிலேச்சதனமாக கொன்றனர்.
இதுவெல்லாம் உங்கள் நினைவுகளில் தங்கவில்லையா?
*1997இல் சாம்பல்தீவில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் மஹ்ருப் அவர்களை கொலை செய்தார்கள்.
இன்னும் உரிமைக்காய் பேசிய எமது அரசியல் தலைவர்களுக்கு மரணத்தை பரிசாக கொடுத்தார்கள். இது கூட மறந்து விட்டதா..?
* முஸ்லிம்களின் பெரும் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் உட்பட முஸ்லிம் தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகள் பலர் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் புலிகளின் கொலைப்பட்டியலில் சேர்க்கப்பட்டு மிலேச்சத்தனமாக கொல்லப்பட்டனரே. இதனை மறந்து விட்டீர்களா..?
நாடெங்கிலும் முஸ்லிம் பிரதேசங்களில் எத்தனையோ குண்டு வெடிப்புச் சம்பவங்கள். இதில் ஆயிரக்கணக்கான எமது முஸ்லிம் உறவுகள் காவு கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
கப்பம், வழிப்பறி, வாகனங்களை பறித்தல் என புலிகள் செய்த கொடூரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அச்சம் எம் தொண்டைக்குழியை அடைத்த காலமது.
இன்று ஜனாதிபதி உட்பட அச்சமின்றி அனைவரையும் வாய்க்கு வந்தபடி தூற்றுகிறோம்.
விமோசனங்களில்லாத விமர்சனங்களை அள்ளி அள்ளி வீசுகிறோம்.
சுதந்திர மண்ணில் இதற்கெல்லாம் வாய்ப்பு வழங்கியது யார்..?
கருத்துச் சுதந்திரம் கருவிலே அழிக்கப்பட்ட கரும் புலிகளின் காலத்தில் உண்மைகளை உரைக்க உங்கள் தொண்டைகள் திறக்கவில்லை.
அச்சத்தால் அவை அடைக்கப்பட்டிருந்தன.
இன்று நரம்பில்லாத நாவுகளுக்கு நாகரிகமில்லாது உரைக்கவும்,கண்டதை எழுதவும் களம் அமைத்துக் கொடுத்தது யார்..?
முஸ்லிம்களின் துன்பியல் தருணங்களை இன்னும் சொல்கிறேன், கேளுங்கள் நண்பர்களே...
கொலைகார புலிகள் வயல் நிலங்களை அபகரித்து வைத்தமை, வயல்களில் வைத்து எத்தனையோ ஏழை விவசாயிகளை படுகொலை செய்தமை என்பன எமது காலத்தின் ஏடுகளில் துயரமான வரலாற்று பதிவுகள் இல்லையா..?
மேலும்,
பாசிசப் புலிகள் முஸ்லிம்களை குறி வைத்து, மின்சாரத்தை துண்டித்து இருட்டில் கொடூரமாக வேட்டையாடிய போதும், கிராமங்களில்-பள்ளிவாசல்களில் புகுந்து கொன்ற பொழுதும் அல்லது முஸ்லிம்களை தனிநபர்களாக மற்றும் குழுக்களாகக் கடத்திச் சென்று கொன்றதையும் அடியோடு மறந்தே விட்டீர்களா..?
பள்ளிவாசலில் சுஜுதில் இருந்த எமது உறவுகளை சுட்டும், வெட்டியும் கொன்றனரே அந்த இரக்கமில்லாத படு பாவிகள். இந்த இருண்ட நாள் ஞாபகம் வரவில்லையா..?
காலத்தை நனைத்த கண்ணீர் சரிதங்கள் உங்கள் காதுகளுக்கு எட்டவில்லையா..?
இன்னும், சொல்கிறேன் என் அன்பானவர்களே...
*ஜூலை 1990 இல் 14 முஸ்லிம் விவசாயிகள் அக்கரைப்பற்றில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்கள்.
*3 ஜூலை 1990ல் ஹஜ் பண்டிகைக்கு முந்திய மாலையில் கிழக்கில் சிவில் சமூகப் பிரமுகர்களான தாவூத் அதிபர், அலி முஹம்மது ஹாஜியார், சமாதான நீதவான் கபூர் ஹாஜியார் ஆகியோர் விசாரணைக்கெனப் புலிகளால் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டனரே.
மறந்து விட்டதா உறவுகளே..?
*2007.8.15 மூதூரில் அப்பாவி பொதுமக்கள் 55 பேர் கொடிய புலிகளால் கொலை செய்யப்பட்டனர்.
*7 ஜூலை 1990 மூதூரில் 17 முஸ்லிம்கள் கொலை
*5 ஜூலை 1990ல் 19 பஸ் பிரயாணிகள் கிரான்குளத்தில் இறக்கிக் கொலை.
*21 ஜூலை 1990ல் 7 முஸ்லிம் இரயில் பிரயாணிகள் மட்டக்களப்பில் தனியாகப் பிரித்தெடுத்துf$ கொலை.
*23 ஜூலை 1990ல் சம்மாந்துறை ஜாரியா பள்ளியில் தங்கியிருந்த 5 முஸ்லிம்கள் சுட்டுக்கொலை
* 3 ஆகஸ்து 1990ல் காத்தான்குடி மீரானியா, ஹுசைனியா பள்ளிவாசலில்களில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் 140 பேர் கொலை
*11 ஆகஸ்து 1990ல் ஏறாவூரில் 127 முஸ்லிம்கள் கொலை
*12 ஆகஸ்து 1990ல் சம்மாந்துறையில் வயல் வேலை செய்த 4 முஸ்லிம்கள் கொலை
*ஆகஸ்து 1990ல் அக்கரைப்பற்றில் 8 முஸ்லிம்கள் கொலை.
முஸ்லிம் கிராமங்களில் விடிகின்ற ஒவ்வொரு பொழுதும் மைய்யத்து வீடுகளின் ஒப்பாரிச் சத்தங்களுடன் விடிந்ததை யாருமே மறந்திருக்க மாட்டீர்கள்.
முஸ்லிம்கள் மீது பாசிசப் புலிகள் உச்சக்கட்ட வன்முறையை கட்டவிழ்த்து விட்ட காலமது.
இந்தக் கொலைகளை செய்த கொலைகார்கள், சதிமானக்காரர்கள் யார்? என்பது நீங்கள் அறிந்த வெளிப்படை உண்மை.
ஈவிரக்கமற்ற இந்த ஈனப்பிறவிகளின் கொட்டத்தை அடியோடு அடக்கியது யார்?
இனியவர்களே,
இதயத்தில் கை வைத்துக் கேளுங்கள். உண்மை புலப்படும்.
குறிப்பாக ,1990ம் ஆண்டு முழுவதுமே புலிகளின் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலைக்கு கிழக்கு உட்பட்டிருந்தது. அதன் நீட்சியாகவே அவ்வாண்டின் இறுதிப் பகுதியில் (அக்டோபர்) புலிகள் வடக்கிலுள்ள முஸ்லிம்களை இனச் சுத்திகரிப்பு செய்தனர்.
யாழ். முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் போது புலிகளை அச்சுறுத்தாமல் அன்றைய ஐ.தே.க அரசு கை கட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்த்ததை மறந்தே விட்டீர்களா உறவுகளே..?
புலிகள், இந்தியப் படைகளை இலங்கையிலிருந்து பிரேமதாசா உறவுடன் வெளியேற்றி விட்டு ஏனைய தமிழ் ஆயுத இயக்கங்கள், அவர்களின் கட்சிகள், தமிழர்களின் ஜனநாயக் கட்சிப் பிரதிநிகள், முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் பதவிநிலை பிரதிநிகள் ,மேலும் அக்கட்சிகளில் தீவிரமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என அறியப்பட்டோர்களை வடக்கு கிழக்கிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில் இறங்கினர்.
அதற்காக முதலில் வடக்கு- கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.வை.எம். மன்சூரை கடத்திக் கொன்றனர். மேலும் அவருடன் சேர்த்து சாதாரண முஸ்லிம் சிவிலியன்கள் பலரையும் கொன்றனர். அன்று உயிருக்கு பயந்து பல முஸ்லிம் அரசியல்வாதிகள் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்குள் தஞ்சம் புகுந்தனர்.
வட கிழக்கில் இனிமேல் முஸ்லிம் அரசியல் சாத்தியமா என்ற நிலை காணப்பட்டது. முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் தங்களின் உயிரைப் பாதுகாக்க அங்கிருந்து வெளியேறித் தெற்கிலே குடியேறினர்.
புலிகளுக்கும் பிரேமதாசாவிற்கும் இடையிலான உறவு முறிந்த கையோடு குறிப்பாக 1990 ஜூலையில் புலிகள் தங்களின் கிழக்கு முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்களை ஆரம்பித்து கிழக்கெங்கும் அச்சத்தையும், பீதியையும் உண்டாக்கினர்.
அந்த கறுப்பு நாட்களை கொஞ்சம் மீட்டிப் பாருங்கள் சொந்தங்களே...
இப்படியாக ,ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலும்-சந்திரிக்காவின் காலத்திலும் கண்டியில்,காலியில்,மாவனல்லையில், மாத்தறையில் என இன்னும் எம் ஈமானிய உறவுகள் எங்கெங்கெல்லாம் இருந்தார்களோ அங்கெல்லாம் அநீதி இழைக்கப்பட்டது. அந்த அநீதிகள் மாத்திரம் இன்று கன கச்சிதமாக மூடி மறைக்கப்பட்டு விட்டது.
வரலாறு எம்மவர்களுக்கு செய்த கொடூர வதைகளை மூடி மறைக்கவில்லை. மறைக்கவும் முடியாது.
ஆனாலும், நாம் மறந்து விட்டோம். எதிரிகளை மன்னிக்கலாம். ஒரு நாளும் மறக்க கூடாது.
#2001 இல் ஏற்பட்ட மாவனல்லை கலவரம் நினைவிருக்கிறதா..?
2001 ஆம் ஆண்டு சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் மாவனல்லை நகரிலும் அதற்கு அண்மையில் இருந்த பகுதிகளிலும் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரமாகும். இதில் முஸ்லிம்களுக்கு அதிக உயிரிழப்புகளும், பாரிய பொருளாதார நஷ்டங்களும் ஏற்பட்டன.
அன்று மாவனல்லையில் நடைபெற்ற அசம்பாவிதங்களுக்கு சந்திரிக்கா அம்மையாரினால் உரிய சட்ட நடவடிக்கைகளோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நஷ்ட ஈட்டு தொகைகளோ வழங்க முடியவில்லை.
இன்னும்,
*2009மார்ச் மாதம் 10 ஆம் திகதி அக்குரஸ்ஸ கொடபிட்டிய ஜும்மா பள்ளி மீதான தாக்குதல் ஞாபகம் இருக்கிறதா? இதில் 15 பேர் உயிரிழந்தனர். 46 பேர் காயமடைந்தனர்.
அன்புள்ள உறவுகளே...
அன்று Facebook, twitter, YouTube, ஸ்மார்ட் phone, இல்லாததால் நடந்த துயரங்கள், இழைக்கப்பட்ட அநீதிகள் ,கொடுமைகள் யாவும் யாருக்கும் வெளிச்சமிடப்படாமல் - நமக்குள்ளே புதைக்கப்பட்டன.
ஆனால், இன்று முழு சுதந்திரம் இருக்கிறது-
பழைய ரணங்களை மறந்து குதுகலிக்கிறோம்.
ஊடக சுதந்திரம் இல்லையென்று சொல்லி விட்டு ஊடகங்களை,சமூக வலைத் தளங்களை துஸ்பிரயோகம் செய்கிறோம்.
ஆளுக்காள் மாறி மாறி அவதூறுகள் தூவி, ஊடகச் சமர் புரிந்து கொண்டிருக்கிறோம். இதுதான் எமக்கு இறுதியில் எஞ்சப் போகிறது.
மார்க்கம் எமக்கு இந்த மூர்க்கத்தைதான் சொல்லித் தந்ததா..? சாந்தி மார்க்கத்தில் இருந்து கொண்டு சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றோமே.
அல்லாஹ் எம் அனைவருக்கும் கிருபை செய்ய வேண்டும்.
ஆக, நாம் நன்றி மறந்து செயற்படுதல் நமக்கும் நமதான எதிர்காலத்திற்கும் ஆரோக்கியமானதல்ல நண்பர்களே...
மனிதநேயத்துடன் ஜனாதிபதி நாட்டை அமைதிப் பாதைக்கு இட்டு சென்றார். சகல இன மக்களினதும் உணர்வுகளை மதித்தார்.
கோர யுத்தத்தின் கெடுபிடிகளால் இருப்பிடமின்றி, நிம்மதியின்றி அனாதைகளாய் ஓடி திரிந்த அந்த 30 வருடங்களை நாம் மறந்து விட்டோம்.
நன்றி கெட்டு விட்டோமோ..? நன்றி மறப்பது நன்றன்று.
உடன் பிறப்புகளே,
இதயத்தில் ஒரு தரம் கையை வைத்து சுய விசாரணை செய்து பாருங்கள் .
உண்மை எப்போதும் மரணிக்காது.
நாளைய தினத்தில் நன்றி மறவாது , உயர் தரமான நன்றியெனும் நலவு செய்வோம்.
நம் சமூகத்தின் விடிவுக்காய் எனதும் உங்களதும் ஆத்மார்த்தமான பிரார்த்தனைகளை அல்லாஹ்விடத்தில் முன் வைப்போம்.
எம் அனைவர் இதயங்களிலும் சாந்தியும் சமதானமும் மலரட்டும்.
அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா
இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத் திட்டத்தின் தலைவர்,
ஜனாதிபதியின் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான ஆலோசகர்.


0 Comments