Subscribe Us

header ads

அதிசய கேமராக்களின் அபூர்வ வரலாறு

எல்லா மனிதர்களுக்கும் தான் இந்த உலகில் வாழ்ந்ததற்கான ஆதாரம் ஒன்று தேவைப்படுகிறது. தான் மறைந்த பின்பும் அந்த ஆதாரம் பல தலைமுறைகளுக்கு நீடித்திருக்கவேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. அதனால்தான் நாம் சந்திக்கும் பெரும்பாலான மனிதர்கள் கையில் ஒரு கேமரா இருந்துகொண்டிருக்கிறது.

'நான் இந்த காலகட்டத்தில் வாழ்ந்தேன். இந்த இடத்தை பார்த்தேன். இவரை சந்தித்தேன். இவர் எனக்கு நெருக்கமானவர். இவர்களெல்லாம் என் குடும்பத்தினர்' என்பதற்கான ஆதாரங்களையும், நினைத்துப் பார்த்து ஆனந்தப்படுவதற்கான காட்சிகளையும் எல்லா மனிதர் களும் சேகரிக்கிறார்கள். அந்த காட்சிகள்தான் பிற்காலத்தில் ஒரு வரலாறு ஆகிறது. அத்தகைய காட்சிக்கும், சாட்சிக்கும் ஆதாரமாக இருப்பது கேமராக்கள்!

நான்கு தலைமுறையை கடந்தவர்கள் 'இது உன் தாத்தாவின் தாத்தா' என்று ஒரு போட்டோவை காட்டி சொல்லும்போதும் 'இது உன் அம்மா. உன்னை பெற்றெடுக்கும்போதே பிரசவத்தில் இறந்துபோய்விட்டார்' என்று சொல்லும்போதும் அங்கே உடனடியாக உணர்ச்சிப்பிரவாகத்தை ஏற்படுத்த ஒரு போட்டோ காட்சி தேவைப்படுகிறது.

நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடிவைத்ததை ஒரு கேமரா படம்பிடித்திருக்காவிட்டால் அந்த உண்மை அவரோடு நின்றிருக்கும். அந்த நிஜத்தை கடைக்கோடி மனிதன் வரை கண்டு வியந்திருக்க முடியாது. அந்த விஞ்ஞான ரகசியத்தை மக்கள் எளிதாக நம்பியிருக்கவும் மாட்டார்கள்.

மன்னர் காலத்து போர்களின் சோகத்தை பக்கம் பக்கமாக வரலாற்று பாடத்தில் படிக்கிறோம். அது என்னவோ நமது இதயத்தில் அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடவில்லை. காரணம் அதை அப்படியே நம் கண்முன்னால் காட்ட ஆதாரமான காட்சிகள் இல்லை. ஆனால் ஹிரோஷிமா, நாகசாகி மீது வீசப்பட்ட குண்டுகளின் வீச்சை அப்படியே போட்டோக்கள் பிரதிபலித்து, 'அடப்பாவிகளா இப்படி பண்ணிட்டீங்களே!' என்று உலகத்தையே ஸ்தம்பிக்கவைத்தது. 'இனி ஒருமுறைகூட அணுகுண்டு வீசப்பட்டுவிடக்கூடாது' என்ற முடிவை உலக நாடுகள் எடுக்கவும் அந்த காட்சிகள் காரணமாகிவிட்டன. அதனால் சோகத்தை சொல்லவோ, சந்தோஷத்தை கொண்டாடவோ நமக்கு போட்டோக்கள் தேவைப்படுகின்றன. அந்த போட்டோக்களின் கதாநாயகன் கேமராதானே!

உங்கள் பெற்றோரின் திருமண ஆல்பத்தை நீங்கள் பார்க்கும்போது 'அம்மா எவ்வளவு இளமையாக இருக்கிறாங்க! அப்பாவை பாரு சிரிச்சிக்கிட்டே இருக்கிறார்' என்றெல்லாம் வியப்பும், மகிழ்ச்சியும் கொள்வீர்கள். 'அந்த நாள் அம்மாவையும் அப்பாவையும் அப்படி எல்லாம் காட்சிப்படுத்தியது ஒரு கேமராதானே!' என்று நினைத்து அந்த கேமராவுக்கு நீங்கள் எப்போதாவது 'தேங்ஸ்டா' என்று கூறியிருப்பீர்களா! நீங்கள் மட்டுமல்ல, நம்மில் யாரும் சொல்லியிருக்கமாட்டோம். 

(பரவாயில்லை. இனிமேலாவது நல்ல காட்சிகளை பார்க்கும்போது அந்த காட்சியை பதிவாக்கிய கேமராவுக்கு மனதுக்குள் நன்றி சொல்லிக்கொள்வோம்!) 

'கேமரா என்ற சாதனத்தை நமது முன்னோடிகள் கண்டுபிடித்திருக்காவிட்டால் நாம் எவ்வளவு விஷயங்களை இழந்திருப்போம்!' என்று இப்போது உங்கள் மனது சோகமாக சொல்வது எனக்கு கேட்கத்தான் செய்கிறது. அப்படி ஒரு பாசம் உங்களுக்கு கேமரா மீது வந்துவிட்டதே மகிழ்ச்சிதான்!

ஆனால் மந்திரத்தாலோ, தந்திரத்தாலோ மாங்காய் விழுந்தது போன்று திடீரென்று கேமரா கண்டுபிடிக்கப்பட்டுவிடவில்லை. அதற்கு 500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சரித்திரம் இருக்கிறது. ஒரு காலத்தில் யானையை விட பெரிதாக கேமரா இருந்தது. (படத்தில் பாருங்கள் அம்மாடீயோவ் என்பீர்கள்)

ஜார்ஜ் ஆர்.லாரன்ஸ் என்ற விஞ்ஞானி சிகாகோ நகரில் 1900ம் ஆண்டில் இந்த உலகில் மிகப்பெரிய கேமராவை உருவாக்கினார். (தோளில் 100 கிராம் வெயிட்டில் தொங்கப்போட்டுக்கொண்டு, செல்போனிலே 'செல்பி' எடுத்தபடி நடக்கும் நமக்கு எம்மாடியோவ் என்று தோன்றினாலும், அன்று யானை கேமராவை உருவாக்கியதற்காக ஜார்ஜ் ஆர். லாரன்சை உலகமே கொண்டாடியது. 

சிகாகோ ஆல்டன் ரெயில்வே அந்த காலகட்டத்தில் (அதாவது 115 ஆண்டுகளுக்கு முன்னால்) அழகான அதிவேக ரெயிலை அறிமுகம் செய்திருந்தது. அதை அழகாக படமாக்கவேண்டும் என்ற எண்ணமே, அவரை அந்த பிரமாண்ட கேமராவை கண்டுபிடிக்க தூண்டியது. கேமராவின் எடை: 900 பவுண்டு. (ஒரு பவுண்டு 450 கிராம்) அதாவது உத்தேசமாக 405 கிலோ. அதில் இருந்த பிளேட் 500 பவுண்டு எடை கொண்டது. முன்னும், பின்னும் நகர்த்தக்கூடிய அளவுக்கு 20 அடி நீளத்தில் அது பிரமாண்டமாக காட்சியளித்தது. இதை இயக்குவதற்கு  15 பலசாலி ஆண்கள் தேவைப்பட்டார்கள்.

இந்த கேமராவுக்கு தேவையான பிளேட்டை செயின்ட்லூயிசில் உள்ள கிரம்மர் நிறுவனம் தயாரித்துகொடுத்தது. படத்தை பதிவு செய்வதற்கான விசேஷ தாளையும் அவர்களே வடிவமைத்துகொடுத்தார்கள். பாஷ் லாம்ப் என்ற நிறுவனம் இதற்கான பிரத்தியேக லென்சை உருவாக்கி கொடுத்தது. அதை 10 அடி தூரம் வரை 'போக்கஸ்' செய்வதற்கு வசதியாக வடிவமைத்து கொடுத்தார்கள்.

இந்த கேமராவை உருவாக்க மொத்தமாக எவ்வளவு செலவாகியிருக்கும்?

நல்லகேள்விதான். இதற்காக செலவிட்ட தொகையில் அப்போதே அமெரிக்காவில் பத்து பதினைந்து மாடமாளிகைகளை விலைக்கு வாங்கியிருக்கலாம். ஆனாலும் செலவு பற்றி கவலைப்படாமல் ஆல்டன் ரெயில்வே பணத்தை வாரி இறைத்தது. காரணம் அப்போது அங்கிருந்த தனியார் ரெயில்வே துறைகளுக்கு இடையே யார் பெரியவர் என்ற கடும்போட்டி நிலவியது. அதனால் தனது ரெயிலை படம் பிடித்து உலகம் முழுக்க பப்ளிசிட்டி செய்துகொள்ள ஆல்டன் நிறுவனம் விரும்பியதா
ல் ஜார்ஜ் ஆர்.லாரன்ஸ் கேட்டபோதெல்லாம் டாலர் நோட்டுகளை பெட்டிபெட்டியாக அனுப்பிவைத்தார்கள்.

செலவை பற்றி கவலைப்படாததால்தான் உலகின் மிக அழகிய ரெயிலை, உலகின் மிக பெரிய கேமரா படமாக்கி, சரித்திரத்தில் முத்திரை பதித்துவிட்டது.
இந்த கேமராவின் பெயர் என்ன தெரியுமா?

 மமூத் (Momooth)!

ரொம்ப காலத்துக்கு முன்பு ஆப்பிரிக்க காடுகளில் ராட்சத உருவம் கொண்ட யானைகள் வசித்தன. இதுவும் அதுபோல் பிரமாண்டமாக அமைந்ததால் அதன் நினைவாக இதற்கும் அந்த பெயரை சூட்டிவிட்டார்கள். 

நீங்கள் லட்சக்கணக்கான போட்டோக்களை பார்த்திருப்பீர்கள். இன்று ஒவ்வொரு அபூர்வ போட்டோவை நீங்கள் பார்க்கும்போதும் உங்களுக்குள்ளே, 'உலகின் முதல் போட்டோவை நாம் பார்க்காமலே இருந்துவிட்டோமே!' என்ற ஏக்கம் ஏற்படும்.

அதை நீங்கள் இங்கே பார்க்கலாம். முத
ல் போட்டோவின் வயது 189.

பிரமிக்க வைக்கும் பழமையான உளவு கேமராக்கள் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

1826-ம் ஆண்டு இந்த முதல் போட்டோவை பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி ஜோசப் நிஸ் போர் எடுத்தார். அப்ஸ்க்யூரா என்ற பழங்கால கேமரா சாதனத்தை பயன்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டது. லி கிராஸ் என்ற இடத்தில் உள்ள தனது வீட்டையே அவர் முதல் காட்சியாக்க முயற்சித்தார். 8 மணி நேரம் 'போக்கஸ்' செய்ததன் பலனால் இந்த முதல் போட்டோ கிடைத்தது.

லூயிஸ் டேகுலார் என்ற விஞ்ஞானியும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்தான். இவர் தான் தயாரித்த டேகுலார் டைப் கேமராவை பயன்படுத்தி, 1838-ல் முதன் முதலில் மனிதன் இடம் பெற்ற போட்டோவை 

எடுத்தார். பாரீஸ் நகர தெருவீதியில் கம்பீரமாக நிற்கும் மாளிகைகள் இதில் தெளிவாக பதிவாயின. வட்டமிட்டிருக்கும் பகுதியில் ஒரு இளைஞர் ஒரு காலை அருகில் உள்ள பொருள் மீது தூக்கிவைத்திருப்பதுபோல் இந்த காட்சி பதிவாகியிருக்கிறது. போட்டோவில் பதிவான முதல் மனிதர் அவர்தான்!

Post a Comment

0 Comments