Subscribe Us

header ads

இந்தியா சென்றுள்ள ஒபாமாவுக்கு இலங்கை,மாலைத்தீவு பிரஜைகளால் ஆபத்து?


இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு இலங்கை அல்லது மாலைத்தீவு அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் டெல்லி பொலிஸாருக்கு எச்சரிக்கை செய்துள்ளனர். 

அதனால் நீண்டகால விசா வைத்திருக்கும் அல்லது விசா காலாவதியான இலங்கை மற்றும் மாலைத்தீவு பிரஜைகள் குறித்து இந்தியா மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய பாதுகாப்பு புலனாய்வு பிரிவு ஜனவரி 15ம் திகதி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் விஜயத்திற்கு ஆம் ஆத்மி கட்சி மற்றும் இந்து அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடும் என்றும் புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். 

உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவின் ஜனாதிபதி ஒபாமாவுக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் உள்ளது. இதனால் ஒபாமா எந்த நாட்டுக்குச் சென்றாலும் அவருடன் அமெரிக்க பாதுகாப்பு குழுவினரும் உடன் சென்று பாதுகாத்து வருகிறார்கள். இவர்கள் பல அடுக்குகளாக ஒபாமாவை சுற்றிலும் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 

இதில் ஒபாமாவுக்கு மிக நெருக்கமாக இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் மட்டுமே கண்ணுக்கு தெரிவார்கள். மற்றவர்கள் பாதுகாப்பு வளையங்களாக பல அடுக்குகளாக இருப்பார்கள். இவர்களை மீறி யாரும் ஒபாமாவை நெருங்க முடியாது. அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகளை கையாளக் கூடியவர்கள். எந்த ரூபத்தில் யார் நுழைந்தாலும் தாக்குதலை சமாளிக்கும் திறன் படைத்தவர்கள்.

அந்த அளவுக்கு பாதுகாப்பு மிக்க தலைவர் ஒபாமா. இந்தியா வருகை தந்திருப்பதால் அவருக்கு இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக இணைந்து பாதுகாப்பு வழங்கி வருகிறது. 

ஒரு மாதத்துக்கு முன்பு டெல்லி பொலிஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடங்கி விட்டனர். ஒபாமா வந்து இறங்கும் பாலம் விமான நிலையம், தங்கும் ஓட்டல், குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெறும் டெல்லி ராஜ பாதை, ஜனாதிபதி மாளிகை, ஐதராபாத் இல்லம், ராஜ்காட், தாஜ்பேலஸ் ஓட்டல், ஸ்ரீபோர்ட் அரங்கு ஆகியவை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

மத்திய டெல்லி பகுதியில் அடங்கியுள்ள இந்த இடங்கள் 24 மணி நேரமும் தீவிர பொலிஸ் கண்காணிப்பில் உள்ளது. 

ஒபாமாவை சுற்றிலும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் 3 அடுக்குகளாக உள்ள நிலையில் தொடர்ந்து டெல்லி பொலிஸார், மத்திய பொலிஸார், துணை ராணுவப்படையினர் என மத்திய டெல்லி பகுதியில் 40 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்பட்டு உள்ளனர். 

ஒவ்வொரு மூலை, முடுக்குகளிலும் உயர்ந்த அடுக்குமாடி கட்டிடங்களிலும் எங்கு பார்த்தாலும் துப்பாக்கியுடன் பொலிஸ் தலைகளாக காணப்படுகிறது. இதனால் மத்திய டெல்லி பகுதி பாதுகாப்பு போர்வையில் மூடப்பட்டது போல் மூழ்கி உள்ளது. 

மேலும் முக்கிய இடங்களில் 15 ஆயிரம் கண் காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு ஆங்காங்கே கட்டுப்பாட்டு அறைகளில் இருந்தபடி தொழில்நுட்ப குழுவினர் கண்காணித்தபடி உள்ளனர். 

அவ்வப்போது அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு சோதனைகளும் நடைபெறுகிறது. 

ஒபாமா செல்லும் பாதை தங்கி இருக்கும் இடங்களைச் சுற்றிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 

இன்று இந்திய குடியரசு தின விழாவில் முக்கிய பிரமுகர்களுடன் பொதுமக்களும் கலந்து கொள்வதால் ராஜ பாதையில் மிக உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருக்கைகள் மேடைகளில் வெடிகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டு பொலிஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. 

குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்கும் எம்.பி.க்கள் அதிகாரிகள் மற்றும் அணி வகுப்பில் பங்கேற்கும் பொலிஸார், ராணுவ வீரர்கள் உள்ளிட்டோரும் சோதனையிடப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு விசேஷ அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டு உள்ளது. 3 கி.மீ. தூரம் உள்ள ராஜ பாதையில் 18 மீட்டர் இடைவெளிக்கு ஒரு கண்காணிப்பு காமிரா வீதம் மொத்தம் 160 காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. 

சந்தேகப்படும் எந்த நடமாட்டத்தையும் வான் பகுதியில் விமான ஊடுருவலையும் கண்காணிக்க கூடிய வகையில் ராடார் கருவிகளுடன் விமான எதிர்ப்பு பீரங்கிகள் ரகசிய இடங்களில் வைக்கப்பட்டு உள்ளன. 

குடியரசு தின நிகழ்ச்சி நடக்கும் போது அந்த நேரத்தில் செல்லும் விமானங்கள் அனைத்தும் வேறு பாதையில் திருப்பி விட விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments