Subscribe Us

மரணத்துடன் போராடும் 3 குழந்தைகளை சுமக்கும் ஒலிம்பிக் வீராங்கனை


இங்கிலாந்தின் நார்த்தம்டன் பகுதியில் உள்ள அபிங்டனில் வசித்து வருபவர் 35 வயதான ஹாஸ்லி. ‘கிரேட் பிரிட்டன்’ அணிக்காக 2000ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை இவர். 

இவரது கணவர் ஸ்டீவ் பிரபல ரக்பி விளையாட்டு வீரர். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு கர்ப்பமான ஹாஸ்லி, தன் குழந்தைகள் பற்றி வண்ண மயமான கனவுகளில் மிதந்து கொண்டிருந்தார். 

கர்ப்பமுற்ற 12 ஆவது வாரத்தில் ஸ்கேன் செய்து பார்த்த போது அவரது வயிற்றில் மூன்று சிசுக்கள் வளர்ந்து வருவது தெரியவந்தது. அந்த மூன்று சிசுக்களில் இரண்டு இரட்டைக் குழந்தைகள் என்றும் அதில் ஒரு சிசு மற்ற சிசுக்களை விட 25 சதவீதம் சிறியதாக இருப்பதையும் மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். மேலும் ஒரே நஞ்சுக்கொடியில் இரண்டு குழந்தைகள் வளர்வதும் தெரியவந்தது. 

எனவே, ஹாஸ்லி மற்றும் சிசுக்களின் உடல் நலம் கருதி இரண்டு குழந்தைகளை கருக்கலைப்பு செய்யும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். 

ஆனால் ஹாஸ்லி ஒரு குழந்தைக்காக இரண்டு குழந்தைகளின் உயிரை எடுக்க சம்மதிக்கவில்லை. மூன்று குழந்தைகளும் உயிர் பிழைக்க 50 சதவீத வாய்ப்பு மட்டுமே இருப்பதாகவும், தற்போது உள்ளதைவிட மூன்று மடங்கு வேதனையை அவர் தினமும் அனுபவிக்க வேண்டி இருக்கும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால், ஹாஸ்லியின் அன்பு நிறைந்த தாயுள்ளம் இதற்கு உறுதியாக மறுத்துவிட்டது. 

‘விளையாட்டு எங்கள் இருவருக்கும் முக்கியமான ஒன்றை கற்றுக்கொடுத்திருக்கிறது. உங்களுக்கு தேவை ஒரு வாய்ப்பு. நேர்மறையான எண்ணங்களும் உங்கள் திறன் மீது அடுத்தவர்கள் வைக்கும் நம்பிக்கையும் உங்களுக்கு வெற்றியைத்தரும். தற்போது 26 வாரங்கள் ஆகியுள்ள நிலையில் எனக்கு எந்த பயமும் இல்லை. பிறக்கும் மூன்று பேரும் பெண் குழந்தைகளாக இருப்பார்கள். நாங்கள் பெரிய குடும்பம் மற்றும் குழந்தைகளின் சத்தம் நிறைந்த வீட்டை பற்றி கனவு கண்டு கொண்டிருக்கிறோம்’ என்று ஹாஸ்லி உற்சாகமாக பேசுகிறார்.

Post a Comment

0 Comments