Subscribe Us

header ads

100 கோடி வாடிக்கையாளர்களை எட்டும் “வாட்ஸ் அப்”

இன்னும் ஒருவருட காலத்தில் தமது அப்ளிகேஷனை தொடர்ந்து பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 100 கோடியை எட்டும் என வாட்ஸ் அப் அறிவித்துள்ளது.
வாட்ஸ் அப் வழியாக, தினந்தோறும் 3,000 கோடி தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுவதாக இதன் தலைமை நிர்வாக அலுவலர் ஜான் கெளம் அறிவித்துள்ளார்.
எஸ்.எம்.எஸ். வழிமுறையைக் காட்டிலும் அதிகச் செலவின்றி, செய்திகளை அனுப்ப மொபைல் சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள் இதனையே நாடுகின்றனர். இதனால் தான், இந்தியா மற்றும் கிரேட் பிரிட்டன் போன்ற நாடுகளில், எஸ்.எம்.எஸ். பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது.
பேஸ்புக் இந்நிறுவனத்தை வாங்கிய பின்னர், வாட்ஸ் அப் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஏறத்தாழ 2108 கோடி டாலர் என்ற அளவை எட்டியுள்ளது. நிறுவனம் கை மாறிய போது, வாட்ஸ் அப் கொண்டிருந்த பயனாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தில் 45 கோடியாக மட்டுமே இருந்தது. இவர்களில் 70% பேர் மட்டுமே தினந்தோறும் இதனைப் பயன்படுத்தி வந்தனர். அதன் பின்னர், மாதந்தோறும் 2.5 கோடி பேர் இதன் வாடிக்கையாளர்களாக இணைந்தனர். சென்ற ஏப்ரல் 22 அன்று, இதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 50 கோடியை எட்டியது.
பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ மற்றும் ரஷ்யாவில் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்திருந்தது. 2013 டிசம்பரில் இந்த எண்ணிக்கை 40 கோடியானது. இந்த வேகத்தில் சென்றால், இன்னும் ஓராண்டில் இது 100 கோடியை நிச்சயம் எட்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
இப்போதும், வாட்ஸ் அப் பேஸ்புக் நிறுவனத்தின் கண்காணிப்பில், தனி ஒரு பிரிவாகத்தான் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments