ஜனநாயகத்தைப் பாதுகாக்க கிடைத்த இந்த நல்ல சந்தர்ப்பத்தை நல்ல முறையில் பயன்படுத்த அனைவரும் முன்வரவேண்டும் என கிழக்கு மாகாணசபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை புல்மோட்டையில் நடைபெற்ற மைத்திரி ஆதரவு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தலைமையுரை ஆற்றுகையிலேயே இவ்வாறு அவர் கூறினார்.
இம்ரான் மஹ்ரூப் ஏற்பாடு செய்த இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன், முன்னாள் பிரதியமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, மாகாணசபை உறுப்பினர்கள் அஸாத்சாலி, மனோகணேசன், முன்னாள் எம்.பி மஹ்ரூப் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இங்கு உரையாற்றிய இம்ரான் மேலும் கூறியதாவது:
இன்று நாட்டில் ஜனநாயகம் இல்லை. யாரும் சுதந்திரமாகக் கருத்துத் தெரிவிக்க முடியவில்லை.
சட்டம் பொதுவாக இருந்த போதிலும் அது சமூகத்திற்கு சமூகம் வித்தியாசமாக நடைமுறைப் படுத்தப் படுகின்றது. ஒரு சிலரது விருப்பமே நாட்டில் எங்கும் நடைமுறைப்படுத்தப் படுகின்றது.
எங்கு நீதி கிடைக்கும். யாரிடம் நீதி பெறலாம் எனத் தவித்துக் கொண்டிருந்த மக்களுக்கு ஜனவரி 8ஆம் திகதி அதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
எனவே, அன்றைய தினம் நேர காலத்தோடு அனைவரும் வாக்களிக்க செல்ல வேண்டும். ஜனநாயகத்தை உறுதிப் படுத்த வாக்குச் சீட்டில் 10வது இடத்திலுள்ள அன்னச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
இதுவரை எம்மை ஏறெடுத்துப் பார்க்காத, எமது கருத்துக்களை செவிமடுக்காத அரசு இன்று நம்மை நோக்கி வருகின்றது. சலுகைகளை அள்ளித் தருகின்றது. அவை அனைத்தும் நமது வரிப்பணத்தில் கிடைப்பவை. எனவே அவை உங்களுக்கு உரியது. அதனைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
இப்போது உங்களிடம் வந்துள்ள மகிந்த ராஜபக்ஷ குழுவினர் இனி அடுத்த தேர்தலுக்குத்தான் உங்களிடம்; வருவர். அதற்கிடையில் அவர்களது சுகபோகம் அராஜகம் எல்லாம் அரங்கேரும். எனவே, அப்படியானவர்களுக்கு நாம் வாக்களிக்கலா? நமது கண்ணில் நாமே மண்ணை அள்ளிப் போடலாமா? என்பவற்றை சிந்தித்து வாக்களிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
நாம் இந்தக் கும்பலுக்கு வாக்களித்தால் அது நம்மை மட்டுமல்ல நமது பரம்பரையையே பாதிக்கும். இருக்கின்ற காணிகள் அனைத்தையும் சுருட்டிக் கொள்வார்கள். நமக்கு மட்டும் தொழிலுக்கு தடை விதிப்பார்கள். நாம் உரிமைக்காக கதைத்தால் அதை இனவாதமாகப் பார்ப்பார்கள்.
எனவே, மகிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்து அவர் செய்யும் பாவங்களுக்கு நாம் உடந்தையாகலாமா? இப்போது இது நமது காலம். நமது கையில் தரப்பட்டுள்ள ஒரே ஆயுதம் வாக்குச் சீட்டு. இந்த வாக்குச் சீட்டை ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நல்லெண்ணத்தில் அனைவரும் பயன்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.


0 Comments