நல்ல மனிதர்கள் என்போர் யார் என்பதற்கு நிபந்தனைப்படுத்தப்பட்ட வரையறை கிடையாது. நல்லவர்கள் என்போர் எல்லோருக்கும் நல்லவர்களாக இருப்பர். இனம், மதம், மொழி என்ற பாகுபாடுகளினூடாக அவர்கள் ஒருபோதும் பக்கம் சார்வதில்லை.
நல்ல சிங்களவர்கள், தமிழர்களை கொல்ல வேண்டும் என்று ஒருபோதும் நினைக்க மாட்டார்கள்.
அதேபோல் நல்ல தமிழர்கள், சிங்களவர்களை அழிக்க வேண்டும் என எண்ணவும் மாட்டார்கள்.
எனவே, நல்ல மனிதர்களிடம் மானிட உணர்வு மட்டுமேயிருக்கும். விலங்கின இயல்பு அவர்களிடம் இருப்பதில்லை.
விலங்குகள் மட்டுமே ஒன்றையொன்று தாக்கி உயிர் வாழும் தன்மை கொண்டவை. எனினும் மனிதர்களிடமும் இத்தகைய தன்மை காணப்படுமாயின் அது விலங்கின இயல்பு உண்டென்பதே பொருள்.
எல்லா மனிதர்களும் நல்லவர்களாக வாழவேண்டும் என்பதே பொது விருப்பம். மனிதர்களை நல்லவர்களாக ஆக்கும் பொருட்டு சமயம் தோற்றுவிக்கப்பட்டது.
காலத்துக்குக் காலம் ஞானிகளும் யோகிகளும் இந்த மண்ணில் பிறந்து அறக்கருத்துக்களை முன்வைத்தனர். அந்த அறக் கருத்துக்களை மக்களிடம் முன்னெடுத்துச் செல்லும் பணி சமயங்களின் பொறுப்பாயிற்று.
சமயத் தலைவர்கள் ஆன்மீகத்தை மக்களிடையே பரப்பி புனிதமான மானிடத்தை பாதுகாக்க தலைப்பட்டனர். இத்தகையதொரு ஒழுங்கு படுத்தப்பட்ட நெறிமுறையில் மானிடம் புனிதமடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
மனிதர்களில் அனைவரும் புனிதர்களாக வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு முழுமை பெறவில்லையாயினும் சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, அன்னை திரேசா, காமராஜர், ஆபிரகாம் லிங்கன் என்ற புனிதர்கள் மனிதர்களோடு வாழ்ந்து போயினர். இன்னும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
எந்த நாட்டில் புனிதர்கள் வாழ்கிறார்களோ அந்த நாட்டில் ஏதோ ஒரு வகையில் அமைதி, சமாதானம், அன்பு, இரக்கம் என்பன மானிடத்தை பக்குவப்படுத்தி வருகின்றன. எனினும் துரதிர்ஷ்டவசமாக எங்கள் இலங்கை மண்ணில் புனிதர்களான மனிதர்களை எங்கும் காண முடியவில்லை.
அமைதியை, சமாதானத்தை ஏற்படுத்த வேண்டிய சமயத் தலைவர்கள் மிக மோசமான இனவாதமும், மதவாதமும் கொண்டு நாட்டில் வன்முறையினை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
குறிப்பாக பெளத்த மத பீடத்தில் இருப்பவர்களில் பலர் மதவாதம் கொண்டவர்களாக இருப்பது சமய அடிப்படையை வேரறுத்து விடுவதாகும்.
மக்களிடையே மோதல் ஏற்படாமல் தடுக்க வேண்டிய சமய நிறுவனங்கள் அமைதியாக இருக்கின்ற மக்களிடம் வன்முறையை, இனவாதத்தை தூண்டும் பணியைச் செய்தால் நிலைமை எங்ஙனம் அமையும்? என்பதை புரிந்து கொள்வதில் கடினமிருக்க முடியாது.
நம்நாட்டின் மதபீடங்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த அரசியலிலும் அரச அமைப்புகளிலும் நல்ல மனிதர்களுக்கு கடும்பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்த எவரும் விரும்பவில்லை.
இலங்கையைப் பொறுத்தவரை சிங்கள அரசியல் வாதிகள், தமிழ் அரசியல்வாதிகள், முஸ்லிம் அரசியல் வாதிகள் இருக்கின்றனர்.
ஆனால் நாட்டுக்குத் தேவையான இலங்கை அரசியல்வாதி இல்லவேயில்லை. அரசியலில் ஈடுபடுவோர் இனத்தின் அடிப்படையில் செயற்பட்டால் இனவாதம் ஒருபோதும் ஒழியமாட்டாது என்பது உறுதி.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments