சிறிக்கொத்தவின் முன்னால் இரு குழுக்களுக்கிடையில் மோதல்
ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைக் காரியாலயமான சிறிக்கொத்தவின் முன்னால் இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெறுவதாகவும் பொலிஸார் அதனை அடக்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ரணில் – மைத்திரி ஆகியோருக்கிடையில் இடம்பெற்றதாக கூறப்படும் ஒப்பந்தத்தை வெளிப்படுத்துமாறு தெரிவித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்கள் இன்று காலை ஐ.தே.க. யின் தலைமையகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், ஐ.தே.க. ஆதரவாளர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது மோதலாக மாறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றன.
இம்மோதல் நிலையினால் சிறிக்கொத்த தலைமைக் காரியாலயத்துக்கு முன்னால் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாகவும் சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.
நால்வர் காயம்
தேசிய அமைப்புக்களின் கூட்டணியினால் சிறிக்கொத்தவின் முன்னால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் மோதலாக மாறியதில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இருவரும் ஐ.தே.கட்சியின் ஆதரவாளர்கள் இருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரும், கலகம் அடக்கும் படையினரும் நிலைமையைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ரணில் குற்றச்சாட்டு
சிறிக்கொத்த மோதலுக்கு மூல காரணம் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க கொண்டுவந்த பொய்யான ஒப்பந்தம் குறித்த பிரச்சினையே என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரணில் – மைத்திரி ஒப்பந்தமொன்று இல்லாத நிலையில், அவ்வாறு இருப்பதாக தெரிவித்து அமைச்சர் விமல் வீரவங்சவின் கட்சியிலுள்ளவர்கள் என கூறப்படும் சிலர் இன்று காலை சிரிக்கொத்தவின் முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இதுவே இப்பிரச்சினையை ஏற்படுத்தியது.
தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் தினத்தில் இவ்வாறான பொய்யான இட்டுக்கட்டுதலை அரசாங்கம் பரப்பிவருவதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் சிங்கள ஊடகமொன்றிடம் சற்று முன்னர் குறிப்பிட்டுள்ளார்.
-AsM-


0 Comments