Subscribe Us

header ads

உலக கோப்பை கிரிக்கெட்டுடன் ஓய்வு பெற சங்கக்கரா திட்டம்

இலங்கை கிரிக்கெட் அணியின் தூண்களில் ஒருவர் விக்கெட் கீப்பர் சங்கக்கரா. 37 வயதான சங்கக்கரா இதுவரை 128 டெஸ்டில் விளையாடி 37 சதம் உள்பட 11,988 ரன்களும், 383 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 19 சதங்களுடன் 12,918 ரன்களும் குவித்துள்ளார்.

இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் 2015-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் அதாவது ஏப்ரல் மாதம் அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக சங்கக்கரா, சில தினங்களுக்கு முன்பு இலங்கை தேர்வாளர்களை சந்தித்து தெரிவித்து இருக்கிறார்.

நல்ல பார்மில் உள்ள அவர் இவ்வாறு கூறியதும் தேர்வாளர்களும், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். ஏற்கனவே மஹேலா ஜெயவர்த்தனே, தில்ஷன் ஆகிய மூத்த வீரர்கள் டெஸ்டில் இருந்து விடைபெற்று விட்டனர். உலக கோப்பையுடன் ஒரு நாள் போட்டிக்கும் முழுக்கு போட அவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

சங்கக்கராவும் விலகினால், அனுபவ வீரர்கள் இல்லாமல் இலங்கை அணியில் மிகப்பெரிய வெற்றிடம் விழலாம். எனவே முடிவை மறுபரிசீலனை செய்யும்படி சங்கக்கராவை தேர்வாளர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர் உலக கோப்பைக்கு பிறகு ஒரு நாள் போட்டியில் விளையாடமாட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. வேண்டு மென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவது குறித்து யோசிக்கிறேன் என்று தேர்வாளர்களிடம் கூறியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் இலங்கை பேட்ஸ்மேன்களின் ஆட்டம் ஒரே மாதிரி நிலையாக இல்லை. அணி உயர்ந்த நிலையை எட்டும் வரை அவர் அணியில் நீடிக்க வேண்டும் என்று தேர்வாளர்கள் விரும்புகிறார்கள். அது மட்டுமின்றி அவரை போன்ற சீனியர் வீரர்கள் இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழக்கூடியவர்கள். கேப்டன் மேத்யூசும் அவர் தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆனாலும் டெஸ்டில் நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து சங்கக்கரா இன்னும் தெளிவான முடிவுக்கு வரவில்லை. அது குறித்து தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த ஆண்டில் டெஸ்டில் அதிக ரன்கள் குவித்தவர் அவர் தான். 2014-ம் ஆண்டில் மட்டும் அவர் 11 டெஸ்டில் ஆடி முச்சதம் உள்பட 1,486 ரன்கள் சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments