Subscribe Us

header ads

ஆறு மாவட்டங்களில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம்


நிலவியுள்ள அதிக மழையுடனான வானிலையால் ஆறு மாவட்டங்களில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் மற்றும் மழை காரணமாக 2,443 குடும்பங்களைச் சேர்ந்த 10,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.

நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி, கம்பஹா, கேகாலை ஆகிய மாவட்டங்களில் மக்கள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை தொடர்ந்தும் வழங்கி வருவதாக இடர்முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் 831 குடும்பங்களை சேர்ந்த 3,122 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஈ.எல்.எம். உதயகுமார குறிப்பிடுகின்றார்.

ஹல்துமுல்ல, எல்ல, பண்டாரவளை, ஹப்புதலை, பசறை, பதுளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் மக்கள் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஹல்துமுல்ல பகுதியிலேயே அதிக எண்ணிக்கையானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பகுதியில் 587 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நான்கு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

எல்ல பிரதேச செயலகப் பிரிவிலும் 125 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நான்கு முகாம்களிலும், பண்டாரவளை பிரதேச செயலகப் பிரிவில் 16 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இரண்டு முகாம்களிலும், ஹப்புதலை பிரதேச செயலகப் பிரிவில் 87 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இரண்டு முகாம்களிலும், பசறை மற்றும் பதுளை பிரதேசங்களில் தலா எட்டு குடும்பங்கள் வீதம் இருவேறு முகாம்களிலும் தங்கியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்திலும் பலர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கலஹா பிரதேசத்திலும் சீரற்ற வானிலையால் மக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.

Post a Comment

0 Comments