நாடாளுமன்றத்துக்குள் கரட் மரக்கறி எடுத்து வரப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை ஐக்கிய தேசியக்கட்சியின்
நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜெயமஹா நேற்று நாடாளுமன்றத்தின்
கவனத்துக்கு கொண்டு வந்தார்.
தமது மேசைக்கு முன்னால் இந்த கரட் வைக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதன்போது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பில் ஆளும் கட்சியினரும் தமது கரிசனையை வெளிப்படுத்தினர்.
இந்தநிலையில் குறித்த கரட்டை தூக்கி பிடித்த நளின் பண்டார,
அரசாங்கத்தின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டமும் கரட்டை போன்றது
என்று குறிப்பிட்டார்.
நாட்டில் நூற்றுக்கணக்கான அமைச்சர்கள் எதற்கு? ஐ.தே.க
இரண்டு மூன்று பேர் ஆட்சி நடத்தும் நாட்டில் நூற்றுக்கணக்கான அமைச்சர்கள் எதற்கு என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
நாட்டின் ஆட்சி நிர்வாகம் இரண்டு மூன்று பேருக்கு
வரையறுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்
துனேஸ் கன்கந்த தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பத்து தடவைகள் எரிவாயு விலையை அதிகரித்து ஒரு தடவை விலையை குறைத்து அரசாங்கம் பிரச்சாரம் செய்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்டுள்ள ஒற்றுமை மற்றும் ஊவா மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின் காரணமாக அரசாங்கம் பீதியடைந்துள்ளது.
பிரதேச செயலக மட்டத்தில் உருவாக்குவதாக அறிவிக்கப்பட்ட
கைத்தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றில் தொழில் வாய்ப்பு
வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை போன்ற விபரங்களை அரசாங்கம் வெளியிட
வேண்டும்.
அரசாங்கம் பிரச்சாரம் செய்யும் திவிநெகும திட்டத்தில் யார் நன்மை அடைந்தார்கள்?
மூன்று வேளை சாப்பிட்டு இருக்க முடியும் என்றால் ஏன் இலங்கைப் பெண்கள்
கழுத்து, கை, கால்கள் வெட்டப்டுவது தெரிந்து கொண்டே வெளிநாட்டு வேலை
வாய்ப்பு தேடிச் செல்கின்றனர்?
இதன் மூலம் திவிநெகும திட்டத்தின் தோல்வி அம்பலமாகியுள்ளது. இரண்டு
மூன்று பேர் ஆட்சி செய்யும் நாட்டில் நூற்றுக் கணக்கான அமைச்சர்களின் சேவை
எதற்கு?
ஜெனீவா மற்றும் ஐரோப்பாவில் இலங்கைக்கு எதிராக பிரச்சினைகள் எழுப்பப்படுவதனையே அரசாங்கம் விரும்புகின்றது.
அவ்வாறு பிரச்சினைகள் எழுப்பப்பட்டால், போரையும், மின்சார
நாற்காலியையும் காட்டி காட்டி மக்களின் வாக்குகளை திரட்ட முடியும் என
அரசாங்கத்திற்கு தெரியும்.
ஒவ்வொரு கிராமத்திலும் 125 வீடுகள் அமைப்பதாக அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு என்னவாயிற்று?
60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒய்வூதியம் வழங்குவதாக அறிவித்த
அரசாங்கம் எத்தனை பேருக்கு ஓய்வூதியம் வழங்கியுள்ளது என துனேஸ் கன்கந்த
நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பில் வயதுகுறைந்தவர்களுக்கு சிகரட் விற்பனைசெய்தவர்களுக்கு தண்டம் விதிப்பு
மட்டக்களப்பில் வயது குறைந்தவர்களுக்கு சிகரட் விற்பனை செய்த 24
பேருக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிவான் நீதிமன்றம் தலா இரண்டாயிரம் ரூபா
தண்டப்பணம் விதித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள
பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வயது குறைந்த சிறுவர்களுக்கு சிகரட் விற்பனை
செய்யப்படுவதாகவும் அவற்றுக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறும்
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விடுத்த
கோரிக்கைக்கு அமைவாக மண்முனை வடக்கு மற்றும் மண்முனைப்பற்று பிரதேச
செயலகப்பிரிவில் நேற்று செவ்வாய்க்கிழமை இந்த திடீர் நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண மதுவரித்திணைக்களத்தின் உதவி ஆணையாளர் பண்டார மற்றும்
மட்டக்களப்பு- அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சர் என்.சோதிநாதன்
ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் மதுவரித்திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட
பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தலைமையிலான குழுவினர் வர்த்தக நிலையங்களில்
இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
நேற்று காலை தொடக்கம் பிற்பகல் நான்கு மணிவரையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை
நடவடிக்கையின்போதே இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டு
வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி
எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.
குறித்த வியாபாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முதல் வழக்கு என்ற
காரணத்தினால் நீதிபதியினால் எச்சரிக்கை செய்யப்பட்டு தலா இரண்டாயிரம் ரூபா
தண்டப்பணம் விதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
21வயதுக்கு குறைந்தவர்களுக்கு சிகரட் விற்பனை செய்வது
தடைசெய்யப்பட்டுள்ளது. அதனை மீறி விற்பனை செய்வோருக்கு எதிராக கடும்
நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேபோன்று ஏனைய பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களும் சோதனைக்குட்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


0 Comments