சொல்லப்படும் பொய்:
கண்டி, கடுகஸ்தொட்டை புனித அந்தனீஸ் மகளிர் பாடசாலை அருகில் நடத்தப்பட்டுவந்த 'கேக் ஹவுஸ்' பேகரியின் உணவுகளில் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் மாத்திரைகள் கலந்த குற்றத்திற்காக அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி (சிங்கள) இணையத்தளங்களில் சூராவளியாக வீசுகின்றது. இது அபாண்டமாக இட்டுக்கட்டப்பட்ட பொய்.
உண்மை சம்பவம் இதோ:
குறித்த பேகரி உரிமையாளர் பலரிடம் கடனாக பணத்தைப் பெற்றுள்ளார். பெற்ற கடனை மீளசெலுத்த முடியாமல் போனதால் கடன்கொடுத்தவர்கள் பொலிசாரிடம் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து 'கேக் ஹவுஸ்' பேகரி உரிமையாளர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். பேகரியும் மூடப்பட்டது. ஆனால் முத்திரை (சீல்) வைக்கப்படவில்லை.
முஸ்லிம்களுக்கான எச்சரிக்கை:
முஸ்லிம்களுக்கு எதிராக பெரும்பான்மை சிங்கள மக்களை தூண்டிவிடும் இனவாதிகளின் எண்ணிலடங்கா சதி சூழ்ச்சிகளில் இந்தப் பொய்க் குற்றச்சாட்டு பத்தோடு பதினொன்று மாத்திரம்தான். இதுபோன்ற பல நூறு பொய்கள் வெளிவரலாம்.
நாம் என்ன செய்ய வேண்டும்:
ஒரு தனிமனிதன் மீது அல்லது ஒரு சமூகத்தின் மீது அல்லது சமூகத்தின் ஓர் அங்கத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி; குரோதம் காரணமாக அவர்கள் மீது அபாண்டமும் அவதூறும் கூறி (எழுதி) மானப்பங்கப்படுத்தும் ஈனச் செயலை இனவாதிகள் மட்டுமல்ல அனைவரும் செய்கின்றனர், முஸ்லிம்களும் இதில் அடங்குவர்.
எனவே, ஒரு செய்தியை கேட்டாலோ; வாசித்தாலோ அதன் உண்மைத்தன்மையை இயன்றவரை உறுதி செய்துகொள்ள வேண்டும். இது சிரமமான காரியம். அனைவராலும் அனைத்து செய்தியின் உண்மைத்தன்மையை தேடித் தெரிந்துகொள்ள முடியாது.
எனவே, நமக்குக் கிடைக்கும் ஒரு செய்தியை கேட்டவுடன்/ வாசித்தவுடன் அப்படியே ஏற்காமல் அமைதியாக வைத்துவிட வேண்டும். அதேநேரம் நமக்குக் கிடைக்கும் செய்திகளை உடனுக்குடன் அடுத்தவர்களுக்குப் பகிரவும் கூடாது. ஏனெனில் அந்த செய்தி பொய்யாக, அவதூறாக இருந்தால் அதனை பரப்பிய குற்றம் நம்மை வந்துசேரும்.
உண்மைகளைத் தேடி அறியக் கூடியவர்கள் அதன் உண்மைத்தன்மையை எழுதுவார்கள். அதுவரை பொறுமை செய்வதன் மூலம் முதலில் நம்மையும் குறிப்பாக நமது சமூகத்தையும் பொதுவாக அனைத்து சமூகங்களையும் பாவத்திலிருந்தும் அநியாயம் இழைக்கப்படுவதிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ளலாம்.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் .
https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments